Pages

Monday, 5 December 2011

டமில் எனக்கு படிக்க வராது


ஈழத்தின் ஓலம் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருக்கும், இந்த வேலையிலும் தமிழின் பெருமைக் காக்க தாத்தா நடத்தும் உலகத் தமிழ் மாநாடு கொஞ்சம் வேதனையையே தருகிறது.
செம்மொழிப் பாடல் –
காவியங்களாக இயற்றி தந்துகொண்டிருக்கும் கவிஞர்களும், புலவர்களும் மிகுந்த தமிழ்நாட்டில், பழைய பாடல்களில் சில சில வரிகளை பித்துப் போட்டு இது தான் உலகச் செம்மொழி மாநாட்டு பாடல் என சொல்லிவிட்டார் தாத்தா. அதோடு நின்றிருக்கலாம்.
பாடலுக்கு இசையமைக்க மண்மணம் அறியாத ஒரு இசைக் கலைஞரிடம் பொறுப்பினை ஒப்படைத்து மேலும் கொஞ்சம் வேதனையை தந்துவிட்டார். தமிழனின் நாட்டுப்புறப் பாடல்களின் வாசனையும், இசைக் கருவிகளின் ஓசையும் சிறு துளி அளவு கூட இல்லை என்பது பெரும் வேதனை.
கணினியிலும், கைப்பேசியிலும் தமிழ் வந்தது சாதனையாக இருக்கலாம். ஆனால் அது மட்டும்தான் சாதனையா?. பாடுபவர்களை காட்டுதலில் எடுத்திருக்கும் அக்கறையை பாடுபடுபவர்களின் மீதும் செலுத்தியிருக்கலாம். ஆங்காங்கே காதுகிழிய கத்தும் ஓசையும், பாப் சாங் போல கைகாலை ஆட்டுவதும் சகிக்கவில்லை.
இரண்டு நிமிடங்களே ஓடுகின்ற விளம்பரப் படங்களுக்கு செலுத்துகின்ற அக்கரையைக் கூட, உலகத் தமிழர்களுக்கெல்லாம் அழைப்பு விடுக்கும் பாடலில் இடம் பெறவில்லை. கடற்கரையில் ஒரு மேடை, அதில் சில புன்னியவான்கள் போதும் என நினைத்துவிட்டனரோ!. எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்தக் கொடுமைகள் ஒரு புறம் இருக்கட்டும், மற்றவைகளைக் காண்போம்.
அழியும் தமிழ் -

தமிழ் அழியாது. தமிழை யாரும் அழிக்கவும் முடியாது. இப்படி வீரமாய் பேசுவதற்கு நமக்கு இயலும், ஆனால் கொஞ்சம் சிந்தனை செய்தால் மட்டுமே தமிழின் அபாயப் போக்கு தெரியும்.
என்னுடைய கல்லூரி காலங்களில் நண்பர்களிடம் அரட்டை தமிழில்தான் நடக்கும். ஆனால் ஆசிரியர் வந்த பின்பு அரட்டை அடிக்க இயலாது என்பதால் துண்டு சீட்டில் கருத்துகளை பரிமாறிக் கொள்வோம். அங்கு தான் பிரட்சனையே நான் தமிழில் எழுதி அனுப்பினாலும், அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியாது. அவர்களின் பின்புலம் ஆங்கில வழிக் கல்வி. நான் மட்டும் தான் அங்கு தமிழ் வழிக் கல்விக் கற்று வந்தவன்.
அங்கு எனக்கு அம்மா என்பதற்கு பதிலாய் amma என்று தான் எழுத வேண்டிய நிர்பந்தம். “எனக்கு தமிழ் படிக்க வராது மச்சான்” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். தமிழ் மொழியின் எழுத்தறிவில்லாமலேயே அவர்களால் தமிழ்நாட்டில் வாழமுடிகிறது. இன்னும் சொல்லப் போனால் சிறப்பாக வாழமுடிகிறது.
நன்கு தமிழ் பேச தெரிந்த ஒருவனுக்கு தமிழ்நாட்டின் கால் சென்டர்களில் அதிகப்பட்சமாக 9 ஆயிரம் தரப்படுகின்றது. ஆனால் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசத் தெரிந்தால் குறைந்தபட்சம் 22 ஆயிரம் சம்பலம். தமிழன் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பான்?.
வேறு மதத்தின் பாதிப்புகள் -

மற்ற மதங்களின் பாதிப்பு தமிழர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, தமிழுக்கு நிச்சயம் இருக்கிறது. தமிழனின் பறையோசையும், கிராமிய வழிபாடும் அழிவது இந்து மதத்திற்கான பாதிப்பு, கலாச்சாரத்திற்கான பாதிப்பு என விட்டுவிடலாம். ஆனால் தமிழையும் பாதிக்கின்றது. கிறிஸ்துவ நண்பர்களிடம் கூட சில தமிழ்ப் பெயர்கள் புழங்குகின்றன. இருந்தாலும் அது போதுமானதா?.
முனியாண்டி, மாயாண்டி, காத்தாயி என்றப் பெயர்களெல்லாம் மறைந்து போய், எட்வர்ட், தாமஸ், முகமது, பைசில் என்றெல்லாம் பெயர்கள் நிலைக்கத் தொடங்கிவிட்டன. பெயர்களில் மட்டும் தமிழ் மாறுவதை நான் இங்கு சுட்டிக்காட்ட வில்லை. அதைவிடவும் மேலே தமிழ் இங்கு தகர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
வெளிநாட்டு வாழ் தமிழர்கள் -

2000 ஆண்களுக்கும் மேல் வாழ்ந்துவரும் தமிழ்நாட்டிலேயே தமிழின் நிலை இப்படி எனும் போது, சமீபகாலமாக குடியேறி நிற்கும் வெளிநாடுகளில் தமிழை எதிர்ப்பார்ப்பது மிகவும் சிரமமான விசயம்.
என் நண்பனின் மாமா பையன்கள் அமெரிக்காவிலிருந்து சில மாதங்களுக்கு முன் வந்திருந்தார்கள். தாயும், தந்தையும் தமிழ்நாட்டில் பிறந்தவர்களே என்பதால் இவர்களுக்கு தமிழ் கொஞ்சம் தெரியும். நாம் தமிழில் ஏதாவது சொல்லப் போய் அவர்கள் விழிப்பது இரண்டொரு நாட்கள் கேலியாகவே இருந்தது எனக்கு.
ஆனால் தமிழ்ப் படங்களுக்கும், பாடல்களுக்கும் அவர்கள் சப்டைட்டிலை ஆங்கிலத்தில் வைத்து கேட்டப் போதுதான், எனக்கு உண்மை புரியத் தொடங்கியது. நான் ஆங்கிலத்தை தமிழின் மூலமாக பேசிகிறேன், என் புரிதலும் தமிழைச் சார்ந்து இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு தமிழ் ஆங்கிலம் வழியாகவே புரிகிறது.
சென்ற தலைமுறைத் தமிழனின் பிள்ளைகளே தமிழில் உரையாட தடுமாறும் போது, பல தலைமுறைகளாக வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களின் தமிழார்வமும், மொழிதிறனும் எப்படி இருக்குமோ.
நோபல் பரிசு -

“இங்கிலாந்தில் வசிக்கும் தமிழக விஞ்ஞானி ராமகிருஷ்ணனுக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. ராமகிருஷ்ணனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம். ” இது தமிழ் நாளேடுகளும், தொலைக்காட்சி பெட்டிகளும் மகிழ்ச்சியாக பரிமாறிக் கொண்ட செய்திகளில் ஒன்று.
தமிழன் ஒருவனுக்கு நோபல் பரிசு கிடைத்தது என தமிழ்நாடே மகிழ்ச்சிக்கடலில் மிதக்க,. “எனக்கு தமிழி்ல் பேச வராது ” என தாய்மொழி மறந்தவனை கொண்டாட தமிழர்களால் மட்டுமே இயலும்.
நீங்களே சிந்தியுங்கள் -

இதெல்லாம் எங்களுக்கும் தெரிந்த செய்திதான். இதுக்கு என்ன பண்ண முடியும். என நீங்கள் உங்களுக்குள்ளும் கேள்விக் கேட்டால், விடை கிடைக்கும். என்னிடம் நானும் அந்தக் கேள்வியைக் கேட்டு்க் கொண்டேன். என் மனம் சொன்ன பதில்களை விரைவில் இடுகிறேன்.