Monday, 5 December 2011
மனித சக்தி
அமெரிக்காவின் சாப்ட்பேர் பள்ளத்தாக்கில் நிறைந்திருக்கிறார்கள் நம் தமிழர்கள். மைக்ரோசாப்ட், ஐ.பி.எம. போன்ற உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறான் தமிழன். கந்தகத்தை மூலதனமாக்கி முளைக்கிறான் சிவகாசித் தமிழன். மனித சக்தியைப் பயன்படுத்தி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது திருப்பூர். தமிழர்கள் திறமை மிக்கவர்கள் என்று ஒப்புக் கொண்டிருக்கிறது உலகம்.
ஆனால் இன்னொரு முகமோ நடுங்க வைக்கிறது. நூறு ரூபாய் இலவச வேட்டி சேலைக்கு உயிரைப் பணயம் வைக்கிறார்கள். வெள்ள நிவாரணம் என இரண்டாயிரம் ரூபாய்க்கு மதிபட்டுச் சாகிறார்கள். இலவசங்களுக்காக ஏங்கிக் கிடக்கிறார்கள்.
நெற்களஞ்சியம் என்று யானை கட்டிப் போர் அடித்த வரலாறு சொல்லும் தஞ்சை விவசாயிகள் நத்தைகளைப் படித்து உண்ண வேண்டிய அவலம் ஏன் வந்தது. ஊருக்குச் சோறு போட்ட மண்ணில் பட்டினிச் சாவுகளும், வறுமைக்குப் பயந்து தற்கொலைகளும் நிகழ்வது ஏன் ? தகுதியான இளைஞர்களுக்குப் பற்றாக்குறை அதிகமாவது ஏன்? புதிய தொழில் முனைப்புத் திட்டங்கள் அதிக அளவில் தமிழகத்தில் இல்லாமல் போனது ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை - தொலைநோக்குப் பார்வை இல்லாமையும், வெகுசிலரின் சுயநலங்களுமே.
மனித சக்தியைப் பயன்படுத்துவதில் சீரான வேகம், சீரான வளர்ச்சி பற்றி ஆள்பவர்களும் ஆளப்படுவோரும் சிந்திப்பதே இல்லை. படிப்படியான நிரந்தரத் தீர்வை சிந்திக்காமல் எப்படியாவது இன்றைய பிரச்சனையைச் சமாளித்தால் போதும் என்கிற மனோபாவமே ஆட்சியாளர்களிடம் இருக்கிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்க ஏற்ற உணவை உற்பத்தியைப் பெருக்க இயந்திரங்களையும், செயற்கை இரசாயனங்களையும் பயன்படுத்தியதன் விளைவு இன்று விதைகளைக் கூட வெளிநாட்டில் இருந்து வாங்க வேண்டிய துர்பாக்கியத்திற்கு ஆளானோம். கிணற்றுப் பாசனத்தை ஊக்கப்படுத்தியது அரசு, தொலைநோக்கு இல்லாத அந்த வளர்ச்சி இன்று நிலத்தடி நீர் தீர்ந்ததும் நொண்டியடிக்கிறது.
உடல் உழைப்பு, மூளை உழைப்பு என்கிற பிரிவினையை ஏற்படுத்தி உடல் உழைப்பைக் கேவலப்படுத்திவிட்டோம்.
கிராமங்களை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு நகரங்களை சீராட்டி வளர்த்தது வரலாற்றுப்பிழை. மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து நகரங்களை நோக்கி வந்ததால் கிராமப்புற வேலை வாய்ப்புகள் அடையாளம் இல்லாமல் அழிந்து போயின. மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிற சிறு தொழில் உற்பத்தி நிறுவனங்களைப் பற்றி அக்கறை இல்லாமல் பன்னாட்டு மூலதனங்களை எவ்விதக் கேள்வியும் இல்லாமல் அப்படியே அனுமதிப்பது சமகாலத்தில் நிகழ்கிற சர்வநாசம்.
கண்ணுக்கு முன்னால் வேலையையும், வேலை பார்க்கும் சமூகச் சூழலும் மாறிக் கொண்டே வருகிறது. குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டும் அளவுக்கு அதிகமான ஊதியம், வேலை வாய்ப்பை பெருக்குவது என்பது ஆயிரக் கணக்கானோர் பணிபுரியும் தொழிற்சாலைகளை மூடிவிட்டு சில நூறு பேர் வேலை பார்க்கும் பி.பி.ஓ வைத் திறப்பது நியாயம் இல்லை
வெளிநாடுகளிலிருந்து உற்பத்திப் பொருள்களை இறக்குமதி செய்து நாம் அவர்களின் பொருள்களைப் பயன்படுத்துகிற நுகர்வோர்களாக மட்டுமே இருக்கக்கூடாது. மனித சக்தியைப் பயன்படுத்தித் தொழில் நுட்பம் மற்றும் சிறு தொழில்களைப் பெருக்க வேண்டியது அவசர அவசியம்.