Pages

Monday, 5 December 2011

செம்மொழித் தமிழுக்கு ஏன் இந்த நிலை ?

நடுவணரசு சட்ட பூர்வமாகத் தமிழை செம்மொழியாக ஏற்கும் வகையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைமை உருவாக்கிய குறைந்த அளவு தேசிய செயல் திட்டத்தில் செம்மொழித் தமிழும் சேர்க்கப்பட்டபோது தமிழர்கள் பெருமகிழ்வடைந்தார்கள். தேசிய செயல் திட்டத்தில் இறுதியாக இணைக்கப் பட்டாலும், விரைவிலேயே செயலாக்கம் பெறும் வகையில் நடுவணரசு தமிழைச் செம்மொழியாக ஏற்று அறிவித்த போது தமிழுலகமே பூரித்துப் போனது. அம்மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. காரணம் ? செம்மொழித் தமிழ் ஆயிரம் ஆண்டுத் தொன்மையுடைய மொழி என்று அறிவிக்கப்பட்டது தான். செம்மொழிக்குரிய அடிப்படைத் தகுதிகளில் முதன்மையானதாக உலக மொழியியல் வல்லுநர்களும் யுனெஸ்கோ போன்ற மொழி சார்ந்த உலகப் பேரமைப்புகளும் பெரிதும் கருதுவது மொழித் தொன்மை (Antiquity) ஆகும். எந்த மொழிக்கு மிக நீண்ட பழமை உள்ளதோ அந்த மொழி பெருமைக்குரிய தொன்மைமிகு செம்மொழியாகப் போற்றப்படும் சிறப்பைப் பெறுகிறது. இவ்வகையில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ் உட்பட்ட மொழிகளில் தமிழ் உட்பட லத்தீன், கிரீக் முதலாக ஆறு மொழிகளைத் தொன்மைமிகு செம்மொழிகளாக யுனெஸ்கோ உலகப் பேரமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது.அவற்றுள் மற்ற செம்மொழிகளுக்கு இல்லாத சிறப்புத் தன்மை, செம்மொழித் தமிழுக்கு வழங்கப்பட்டுள்ளது. காரணம் ... மொழிக்கு முதுகெலும்பு போன்றது வரிவடிவ எழுத்து முறை. மற்ற செம்மொழிகளின் வரிவடிவ எழுத்துமுறை உருவான கால கட்டத்தை ஓரளவு அனுமானிக்க அக-புறச் சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனால் தமிழ் வரி வடிவ எழுத்து முறை எந்தக் காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டது என்பதற்கான கால எல்லையை இதுவரை வரையறுக்க இயலாநிலை. தமிழ்மொழி முதல் மனிதன் தோன்றியதாகக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் உருவான எழுத்துமுறை. அங்குதான் மூன்று தமிழ்ச் சங்கங்களுள் முதல் தமிழ்ச் சங்கமும் இடைச் சங்கமாகிய இரண்டாம் தமிழ்ச் சங்கமும் அமைந்து, தமிழ் வளர்ந்தன என்பது வரலாறு. பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொண்ட பின்னர் எஞ்சிய தமிழ்ப்பகுதிகளில் இன்றைய மதுரையில் கடைச்சங்கமாகிய மூன்றாம் தமிழ்ச் சங்கம் உருவாகி, தமிழை வளர்க்க முற்பட்டது என்பது தமிழின் தொன்மை குறித்த வரலாறாகும். எனவே, தமிழின் எழுத்து வடிவம் எப்போது உருவாக்கப்பட்டது என்பதற்கான தடயமே இன்றுவரை கிட்டாத காரணத்தால், உலகத்து மொழிகளிலேயே காலம் கணிக்க முடியாத மிக நீண்ட தொன்மையுடைய மொழியாக, மொழியியல் வல்லுநர்கள் தமிழைக் கருதுகிறார்கள். இதனை மொழிநூல் வல்லார் கால்டுவெல்லும் மொழியியல் தந்தை டாக்டர் எமினோவும் மொழி ஞாயிறு பாவாணரும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒரு மொழி செம்மொழித் தகுதியுடையதாக ஏற்கப்பட வகுக்கப்பட்டுள்ள பதினொரு தகுதிப்பாடுகளில் முதன்மைத் தகுதிப் பாடாகத் தொன்மை கூறப்பட்டுள்ளது. ஆனால் நடுவணரசு தன் செம்மொழி அறிவிப்பில் ஆயிரம் ஆண்டுத் தொன்மை கொண்ட தமிழ் மொழியைச் செம்மொழியாக நடுவணரசு ஏற்கிறது என மத்திய அரசு அறிவித்ததன் மூலம், காலம் கணிக்கவியலா தமிழின் தொன்மைச் சிறப்பு வெகுவாக கொச்சைப்படுத்தப்பட்டது. அதிலும் தமிழின் பெருமையைப் பேசியே வளர்ந்தவர்கள், தமிழுக்காகவே வாழ்வதாகப் பறைசாற்றிக் கொள்பவர்கள், அரசின் இந்த அறிவிப்பை பெரிதும் வரவேற்று மாய்ந்து மாய்ந்து நன்றி கூறி வாழ்த்தி மகிழ்ந்தார்கள். நகரம் முதல் பட்டி தொட்டி வரை வெற்றி விழாக்களைக் கொண்டாடவும் தவறவில்லை. காரணம், தமிழ் நயத்தைவிட தங்கள் நயத்தை, தங்கள் கட்சி நலத்தைப் பெருக்கிக் கொள்வதே அவர்தம் நோக்கும் போக்குமாம். செம்மொழி அறிவிப்பின் மூலம் தமிழின் தொன்மைச் சிறப்பு வெகுவாக இழிவு படுத்தப்பட்டுள்ளதைச் ஆதாரபூர்வமாகச் சுட்டிக் காட்டியபோது செம்மொழி அறிவிப்பின் மூலம் தமிழுக்கு மகுடம் சூட்டிவிட்டதாக விளம்பரப்படுத்தி தமிழ் செம்மொழி ஆகிய பெருமையை கட்சிப் பெருமையாக்கி, எதிர்வரும் தேர்தலில் வாக்குப் பெட்டிகளை நிரப்பும் திட்டம் பாதிக்கப்படுகிறதே என எண்ணி என்மீது வருத்தப்பட முடிந்ததே தவிர உலகத்து மொழிகளிலேயே தமிழுக்கென்று இருந்த தலையாக பெருமை இந்த அறிவிப்பின் மூலம் தவிடுபொடியாகிறதே என்ற உறுத்தல் அவர்களுக்கு ஏற்பட்டதாகவே தெரியவில்லை. மாறாக அத்தொன்மைச் சிறப்பை நியாயப்படுத்தி வாதிடவும் தவறவில்லை. நம் தமிழ்மொழி செம்மொழியாக மத்திய அரசால் ஏற்கப்பட வேண்டுமென நாமெல்லாம் ஆசைப்படுவது போல் கன்னடக்காரர்களும், தெலுங்கர்களும் தங்கள் மாநில மொழியான கன்னடமும், தெலுங்கும் செம்மொழியாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என அம்மொழி பேசும் மக்கள் கோருவதில் என்ன தவறு இருக்கமுடியும்? செம்மொழித் தகுதிக்கு ஆயிரம் ஆண்டுத் தொன்மை என்று இருந்ததால் தானே அம்மொழிகளும் செம்மொழியாக முடியும். அம்மொழிகள் செம்மொழி ஆவதை தமிழின் நீண்ட நெடிய தொன்மையைக் காட்டி நாம் ஏன் தடுக்க வேண்டும்? என்ற வினா எழுப்பிய போது அதற்கு மறுமொழியாக "ஐ.ஏ.எஸ்" என்று அழைக்கப்படும் இந்திய ஆட்சிப்பணிக்கு அடிப்படைத் தகுதி ஏதேனுமொரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் ஆனால் அவர் பள்ளியிருதிவரை படித்திருக்கிறார். அவர் ஆட்சிப் பணியில் சேர வசதியாக அப்பணித் தேர்வுக்கான அடிப்படைக் கல்வித் தகுதியாக பள்ளி இறுதி வகுப்பு வரை படிப்பு என்பதை அடிப்படைத் தகுதியாக ஆக்கச் சொன்னால் எப்படியோ அப்படியிருக்கிறது உங்கள் வாதம் என்றபோது வாயடைத்துப் போன நிலை ஏற்பட்டது. கன்னடமும் தெலுங்கும் செம்மொழியாவதை யாரும் எதிர்க்கவில்லை. வரவேற்போம். ஆனால் அம்மொழிகள் ஆயிரம் ஆண்டுத் தொன்மை மட்டுேம் உடையவை. எப்படியாவது அவற்றைச் செம்மொழி அங்கீகாரம் பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக தமிழின் தொன்மையைக் குறைத்து ராஜராஜசோழன் காலத்துக்குப் பிந்திய காலம் முதலே இருந்து வருவது தமிழ் என்பதைவிடத் தமிழுக்கு வேறு இழுக்கு இருக்க முடியுமா? என வெகுண்டு கூறியபிறகே தேசிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் டாக்டர் கலைஞர் மீண்டும் பெரும் முயற்சி மேற்கொண்டு செம்மொழிக்கான தொன்மைத் தகுதியை இரண்டாயிரம் ஆண்டுகள் என மாற்ற பெருமுயற்சி மேற்கொண்டார். பலன் ஆயிரம் - ஆயிரத்து ஐநூறு என ஆகியது. இரண்டாயிரம் ஆண்டுகள் என ஆக்க முடியவில்லை. இது முக்கால் கிணறு தாண்டிய நிலை. தமிழின் தொன்மைக்கு இதுவும் பெரும் இழுக்காகவே அமைகிறது. தொல்காப்பியர் 2600 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்தவர் எனத் தொல்காப்பியக் காலத்தை வகையளவு செய்துள்ளனர். மறைமலையடிகள் முதலானோர் இதையே முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தன் தொல்காப்பியப் பூங்காவில் பதிவு செய்துள்ளார். எள்ளிலிருந்து எண்ணெய் என்பது போல் இலக்கியங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவதே இலக்கணநூல். அவ்வகையில் தொல்காப்பியருக்கும் முன்னதாக பல நூறு ஆண்டுகள் இலக்கியப் படைப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. எனவே, மூவாயிரம் ஆண்டுகட்கு முந்தையதாகிறது தமிழ் இலக்கியக் காலம். ஆனால் தமிழின் தொன்மை 1,500 என இந்நூல் கால வரையறை செய்வதன் மூலம் தமிழ் மொழி பக்தி இலக்கிய காலத்திற்குப் பின்னர் உருவாகி நிலைபெற்ற மொழி என்றாகிறது. அப்படியானால், தமிழ்க் காப்பிய காலம், திருவள்ளுவர் காலம், சங்ககாலம், அதற்கு முந்தைய தொல்காப்பியர் காலம், அதற்கும் முந்தையதான பழந்தமிழ் இலக்கிய காலம் இதெல்லாம் இல்லாமலே போக நேர்கிறது. இதைவிட பேரிழுக்கு நம் முன்னோர்களுக்கு, அவர்கள் உருவாக்கிய புகழ்மிகு காலகட்டங்கட்கு வேறு யாரும் ஏற்படுத்த முடியாது. இது தமிழ் இனத்துக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் வரலாற்றுக் களங்கம் ஆகும். வரலாறும் இதை மன்னிக்காது. எனவே, தமிழின் தொன்மை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது எனச் சட்டபூர்வமாக உறுதி செய்வதே நம் முன்னோர்கட்கும் வரலாற்றுக்கும் நாம் செய்யும் நன்றிக்கடன். அடுத்து, செம்மொழித் தமிழுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர், கல்வித் துறையில் இடம் பெற வேண்டிய செம்மொழித் தமிழை நிதி வசதியோ துறை விரிவோ ஏதுமற்ற பண்பாட்டுத் துறையில் கொண்டுபோய் வைத்து தனிமைப் படுத்தப் பட்டிருப்பதாகும். மொழி என்ற அளவில் கல்வியோடு தொடர்புடையது தமிழ்மொழி. மரபு முறையில் ஏற்கப்பட்டுள்ள சமஸ்கிருதம் முதலான செம்மொழிகள் கல்வித்துறையில் இடம் பெற்று அனைத்து நலன்களையும் பெற்று வரும்போது, தமிழ் மட்டும் ஏன் பண்பாட்டுத் துறையில் என நான் வினா எழுப்பியவுடன் - தமிழ்தான் முறைப்படி மத்திய அரசால் ஏற்கப்பட்டுள்ள முதல் செம்மொழி. இனிமேல்தான் சமஸ்கிருதம் முதலான மரபு முறையில் ஏற்கப்பட்டுள்ள செம்மொழிகள் சட்ட அங்கீகாரம் பெற வேண்டும். அப்போது அவை தமிழ் செம்மொழிப் பட்டியலில், தமிழை அடுத்து இடம் பெறும். அப்பட்டியல் முழுமையடைந்த பின்னர் கல்வித்துறையால் ஏற்கப்படும் - என என் கேள்விக்கு நாளிதழ்களில் பதிலளித்தார் மத்திய அமைச்சர் இராசா அவர்கள். சரி, சென்ற சில மாதங்களுக்கு முன்பு சமஸ்கிருதம் சட்ட பூர்வமாக செம்மொழியாக நடுவணரசால் ஏற்கப்பட்டு முறைப்படி அறிவிக்கப்பட்டது. தமிழ் செம்மொழிப் பட்டியலில் தமிழுக்கு அடுத்ததாக இடம் பெற்றதா. இல்லையே ! இன்று வரை கல்வித் துறையில்தானே இருந்து வருகிறது. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா ? அது மட்டுமா? ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் செம்மொழி வல்லுநர்கட்குச் சிறப்புச் செய்யும் நாள். தமிழ் செம்மொழியாக அரசு ஏற்று ஓராண்டாகிய நிலையில் நடைபெற்ற விழாவில் தமிழ் என்ற சொல்கூட அவ்விழாவில் உச்சரிக்கப்பட விலலையே ஏன் ? இதன் பொருள் என்ன? செம்மொழித் தமிழைக் கல்வித் துறை ஏற்பதற்கு மாறாக, அவர்கள் வேண்ட, அவர் கல்வித் துறையிலிருந்து 352 கோடி நிதி ஒதுக்கி, தமிழ் வாரியம் அமைத்தார். பண்பாட்டுத் துறையில் இருக்கும் செம்மொழித் தமிழுக்குக் கல்வித்துறை வழங்கும் நிதி உதவி. இது பக்கத்து வீட்டுக்காரர் விருந்து போடுவதைப் போன்றது. விருந்தும் மருந்தும் மூன்று நாள்கள் என்பது பழமொழி. இந்நிதியுதவி எவ்வளவு காலத்துக்கு என்பது கல்வியமைச்சருக்கே வெளிச்சம். செம்மொழி சமஸ்கிருதம் பல நூறு கோடிகளை நிதியுதவியாகப் பெறுமபோது தமிழுக்கு ஒருசில துளிகளை மட்டுமே வழங்குவது என்ன நியாயம்? மொத்தத்தில் தமிழ் செம்மொழி என்ற பெயரில் வெறும் கண்துடைப்புக் காட்சிகளே இதுவரை அரங்கேற்றப் பட்டுள்ளன. உண்மையான அக்கறையோடு முறைப்படியான மாற்ற திருத்தங்கள் செய்யப்பட்டு, செம்மொழித் தமிழ் இரண்டாமாண்டுத் தொன்மைச் சிறப்புடன் கல்வித்துறையில் முழுமையாக இணைவதன் மூலமே தமிழ் பெறக்கூடிய பயன்கள் அனைத்தையும் ஒரு சேரப் பெற முடியும் என்பதை இனியாவது உணர்ந்து தெளிந்து செயல்படுவார்களாக. நன்றி : வடக்கு வாசல் இதழ் - ஏப்ரல் 2006