Pages

Monday, 5 December 2011

நாட்டியக் கலையின் தந்தை பரதரா? அவிநயரா?

பரத முனிவருக்குக் கோயில் கட்டுவது பொருந்துமா? என்னும் வினா எழுந்துள்ளது. நாட்டியக் கலையரசி பத்மா சுப்பிரமணியம் பரத முனிவருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை ஏற்றுக் கொண்டு தமிழக முதலமைச்சர் ஐந்து ஏக்கர் நில்ம் வழங்கியுள்ளதாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பரத முனிவர் யார்? நாட்டியக் கலையிலுள்ள 108 தாண்டவங்களையும் ஆடிக் காட்டியவர் சிவபெருமான். பிரமனின் வேண்டுகோளின்படி அவர் தண்டு என்னும் முனிவருக்கு நாட்டியம் கற்பித்தார். தண்டு முனிவர் பரத முனிவருக்குக் கற்பித்ததால் பரதமுனிவர் வடமொழியில் நாட்டிய சாத்திரம் எழுதினார் என்பது புராணங்கள் வாயிலாகத் தெரியும் செய்தி. இதன்படிப் பார்த்தால் பரத் முனிவர் பரதக்கலையைத் தாமே உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பாளர் அல்லர். முறைப்படி பரதநாட்டியம் கற்பித்த தண்டு முனிவருக்கல்லவா கோயில் கட்டவேண்டும்? என்று கேள்வி கேட்க வேண்டும். அதுவும் பொருத்தமில்லை. ஏனென்றால் தண்டு முனிவருக்கு நாட்டியம் கற்பித்த எண்தோள் வீசி நின்றாடும் தில்லைக் கூத்தனுக்குக் கோயில் கட்ட வேண்டும். சிவனுக்கு ஏற்கெனவே கோயில்கள் உள்ளன. இந்தியாவில் எண்ணிக்கையில் அதிகமான கோயில் சிவன் கோயில். வருமானத்தில் அதிகமான கோயில் பெருமாள் கோயில் என்று கூறுகின்றனர். எனவே கோயில் கட்ட வேண்டும் என்னும் கோரிக்கை சரிதானா? என்பது ஆய்வுக்கு உரியதாகிவிடுகிறது. பரதக் கலையின் பிறப்பிடம் தமிழ்நாடு வரலாற்றின்படி பார்த்தால் தமிழ்நாட்டில்தான் பரதக்கலை முதன் முதல் தோன்றியது என்பதை முதலமைச்சரும் சட்டமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார். இது பாராட்டத் தக்கது. ஆனால் பரதக் கலைக்குரிய தமிழ் நூல் அவிநயம் என்பதும் அதை இயற்றியவர் அவிநயர் என்பதும் முதலமைச்சர் அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. கூத்தர், விறலியர், கோடியர், வயிரியர், பாணர், ஆகியவர்கள் சங்ககாலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே நாட்டியக் கலையைக் காத்து வளர்த்து வந்திருக்கின்றனர். பரத முனிவரின் நாட்டிய சாத்திரம் தமிழில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட நாட்டிய நன்னூலின் மொழிபெயர்ப்பு நூல். மூல நூல் அல்ல. அந்தத் தமிழ் நாட்டிய ந்ன்னூல்தான் அவிநயம். தொல்காப்பியர் காலத்திய அவிநயம் இன்று இல்லையாயினும், சங்ககாலத்தில் சாத்தனார் இயற்றிய கூத்தநூல், அறிவனார் இயற்றிய பஞ்சமரபு, மதிவாணர் இயற்றிய நாடகத்தமிழ் போன்ற பல நாட்டியக் கலை நூல்கள் அவிநயத்தின்வழி நூல்களாகத் தோன்றின. சிற்றிசை, பேரிசை, இசை நுணுக்கம், பெருநாரை, பெருங்குருகு போன்ற ஏராளமான நூல்கள் முத்தமிழ் வளர்த்து நூல்களாகத் திகழ்ந்திருக்கின்றன. கூத்த நூலும், பஞ்ச மரபும் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. பரதர் கூறும் 108 கரணம் எனும் தாண்டவ நிலைகள் தமிழுக்குப் புதியன வல்ல. சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் அவிநயம் என்பது பலவகைக் கூததுகள் விளக்கும் நூல் எனக் கூறியுள்ளார். அவிநயர் என்னும் சொல்லுக்குக் கூத்தர் எனப்பொருள் இருப்பதைச் சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது. அகத்தியரின் பன்னிரண்டு மாணவர்களின் பெயர்களில் தொல்காப்பியர் பெயர் இடம்பெற்றிருப்பது போலவே அவிநயரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. எனவே தொல்காப்பியர் காலத்திலேயே அவிநயனாரால் அவிநயம் என்னும் நாட்டிய நூல் எழுதப்பட்டது எனத் தெரிகிறது. பரத முனிவர் பல்லவர் காலத்தில் கி.பி. நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அதனால் அவிநயருக்குக் கோயில் கட்டுவதே முறையானது. பொருத்தமானது. முற்றிலும் சரியானது. தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் பரதக்கலையின் உயிரோட்டமான அபிநய இயல்புகளை மெய்ப்பாடு என்கிறார். நாட்டியக் கலையை நாட்டிய மரபு எனக் குறிப்பிட்டிருக்கிறார். எனவே தொல்காப்பியர் காலத்திற்கும் முற்பட்டது பரதக்கலை. நன்றி - தெளிதமிழ் இதழ் மீனம் 2037