Pages

Monday, 5 December 2011

வேதங்களுக்கு முந்தைய தமிழர் நான்மறை

முனைவர் மதிவாணன். .....சூரியன் க.பாண்டியன் அவர்கள் எழுதிய மறைக்கப்பட்ட மரபுச் செல்வம் (1988) (பக்.27) என்னும் நூலில் தொன்மை நால்வர் என்னும் தலைப்பில் பழந்தமிழர்களின் நான்மறைகளைத் தொகுத்த நால்வரின் பெயர் இடம் பெற்றுள்ளது. சணகர், சனந்தர், சனாதர், சனாதகுமரர் என்பவர்களே அந்த நால்வர். சன் என்றும் வடசொல் நல்ல என்று பொருள் படும். ஆதலால், நன்நாகர், நல்னந்தர், நல்லாதர், நல்லாதன்குமரர் என்னும் தூய தமிழ்ப் பெயர்களே வடமொழி அடைமொழி பெற்றுள்ளன என்று சூரியன் கா. பாண்டியன் கூறுகிறார். வள்ளலாரும் நன்னெறியைச் சன்மார்க்கம் என்று குறிப்பிட்டார். தென்முகக் கடவுள் மாவிந்த மலையில் (மகேந்திரகிரி) கல்லால நீழலின் கீழ் நால்வர்க்கு மந்திர நெறிகளைக் கற்பித்ததாகக் கூறுவது சிவனி மரபு. சிற்ப நூல் கடவுள் வாழ்த்திலும், நல்லார்கள் நால்வருக்கும் நாவில் பூரணம் காட்டி கல்லாலின் கீழிருந்த கண்ணாற்றலான பரம் எல்லார்க்கும் தெய்வமே. எனக் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட நால்வரும் முறையே... 1) நல்லாதன் (சனாதன்) - மெய்யியல் (தத்துவம்) - பெளடிகம். - நிறைமொழி மாந்தர் மறைமொழி (ஆகமம்) 2) நல்நந்தி (சனந்தி) - ஓகம் (யோகம்) - தரவாகரம் சித்தர் நெறி (வர்மக்கலை) 3) நல்லாதன் குமரன் - ஊழ்கம் (தியானம்) - தைத்திரியம் (சனாதகுமரர்) 4) நன்னாகன் (சனாகன்) - மந்திரம் (யாமம்) - சாமம், மந்திர உருவேற்றம். மேற்கண்ட நாற்பிரிவு மந்திரங்களும் சித்தர் நெறிகளை நான்கு பிரிவுகளாகப் பிரித்துத் தம் அணுக்க மாணவர்களுக்கு மட்டும் பயிற்சி தந்த சிறப்பு நெறிகளாகும் எனத் தெரிகிறது. சுமாாட்டு என்பவர் ஆரியரல்லாதோரின் சமயம் மற்றும் தத்துவக் கருத்துகள் உபநிடதங்கள் எழுதப்படுவதற்குக் காரணமாக அமைந்தன எனக் கூறியிருப்பதும் இங்குக் கருதத்தக்கது. பழந்தமிழர்களின் நான்மறைகளையும் ஒருவரே கற்றுத் தேர்வது அரிய செயல். ஆனால், தொல்காப்பிய அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டாசான் மெய்யியல், ஓகம், ஊழகம்(தியானம்), மந்திரம் என்னும் நான்கு மறைகளையும் முழுமையாகக் கற்றிருந்ததால் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் எனத் தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. மறை என்னும் சொல் - மறு - (மறி) மறை எனத் திரிந்து பல காலும் மீண்டும், மீண்டும் மனப்பாடம் செய்யும் நூலைக் குறித்தது. எனவே, பழந்தமிழர்களின் நான்மறை செவிவழி போற்றப்பட்ட மந்திரங்கள் என்பதால், எழுந்து புறத்திசைக்கும் எழுத்தொலிப்புச் சொற்களாகக் கூறுகிறோம் என்கிறார் தொல்காப்பியர். எழுந்து புறத்தே ஒலிக்காமல் கேளா ஒளிபோல அகத்தெழு வளி ஓசையாகக் கூறப்படுவதே மந்திரம் என்றும் அந்தக் கேளா ஒலிகளுக்கு ஆற்றல் உண்டு என்பதும், பண்டையோர் நம்பிக்கை, ஆதலால் தான். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப - தொல்காப்பியம், நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் - குறள். என்று பண்டைத் தமிழ் நான்மறைகள் குறிப்பிடப் பட்டுள்ளன எனத் தெரிகிறது. தொல்காப்பியர் இவற்றை வாய்மொழி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் நான்மறைகளைத் தோற்றுவித்தவர் நால்வர். பிறகு அவற்றை பேணிக் காத்து வந்த நால்வரிடமிருந்து அவர்கள் பெயராலேயே வடதமிழாகிய பாலி பிராகிருத மெழியாக்கம் பெற்ற நான்குமே நச்சினார்க்கினியர் குறித்த தைத்திரியம், பெளடிகம், தலவாகரம், சாமம் என்பன. திதியன், புகழன், தாலவகன், யாமன் எனும் நால்வர் வாயிலாக வட தமிழாகிய பிராகிருதத்தார், தமதாக்கிக் கொண்ட நான்மறைகள் முறையே... 1) திதியன் - தைத்திரியம் (வடமொழியாளர் திதி என்பவளின் மகனிடம் கற்ற நூல் என்பர்) 2) புகழன் - போழியம் (பெளடிகம்) ( புகழன் வாயிலாகக் கற்ற நூல்) 3) தாலவகன் - தலவாகரம் (தாலவகன் வாயிலாகக் கற்ற நூல்) 4) யாமன் - சாமம் (யாமன் வாயிலாகக் கற்ற நூல் யாமம் - சாமம்) யாமன், யாமனூர், ஏமனூர் என்பன தூய தமிழ்ச் சொற்கள். இவ்வாறு பெயர் பெற்றிருந்ததை ஆய்ந்துணரலாம். இவையணைத்தும் உபநிடத நூல்களாக உருவெடுத்த பின்னும் பெரும்பகுதி அச்சிட்டு வெளியிடப்படாமல் உள்ளது என மக்டொனால்டு குறிப்பிடுகிறார். அதங்கோட்டாசான் மெய்யியல் (தத்துவம்), ஊழ்கம் (தியானம்), ஓகம் (யோகம்), மந்திரம் ஆகிய தமிழ் நான்மறை ஓதியுணர்ந்தவர். கி.மு.1000 காலவரம்புக்குப் பிறகே பிராகிருத பாலி மொழிகள் வளர்ந்திருப்பதால் தொல்காப்பியர் காலத்திற்குப் பிறகு கி.மு. 800 அளவில் இவை, பிராகிருத மொழியில் திதியம், போழியம், தாலவகம், யாமம் என்னும் பெயர்களில் அறிமுகமாகியிருத்தல் வேண்டும். இவை படிப்படியாக உடமொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டன. களப்பிரர், பல்லவர், சோழர் காலங்களில் வடமொழிக்கே முதன்மை தரப்பட்டதால் தமிழிலிருந்த மூல நூல்கள் மறைந்தன. எனினும் வடமொழியிலுள்ள பிராமணம், ஆரண்யகம், உபநிடதம் என்னும் வடிவங்களில் தமிழர் நான்மறைகள் மறைந்து வாழ்கின்றன. இருக்கு வேதப் பாடல்களில் இவற்றுக்குரிய மூலம் இல்லை என்பது உலகறிந்த உண்மையாகும்.