2011 ஜுன் 30ம் தேதியோடு புழக்கத்தில் இருக்கும் 25 பைசா நாணயங்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து இருக்கின்றது.. ரிசர்வ் வங்கியின் அனைத்து கிளைகளிலும் இந்த நாணயத்தை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்து இருக்கின்றது..
கண் எதிரே என் கையில் கோலோச்சிய மதிப்பான ஒரு உலோகம் கண் எதிரில் செல்லக்காசாக போக போகின்றது.. வருத்தம்தான்.. இந்த உலகில் மாறுதல் மட்டுமே மாறதது...
சிறுவயதில் கடலூர் லாரன்ஸ் ரோட்டில் இலைவியாபாரம் செய்த நாகமம்மாள்தான் என் பாட்டி. டுயூஷனுக்கு சுப்ராயுலுநகர் போய்விட்டு அங்கு இருந்து கூத்தப்பாக்கத்தில் இருக்கும் எங்கள் விட்டுக்கு நடந்து வரவேண்டும்... என் ஆயா கொடுக்கும் 25 பைசாநாணயத்துக்கு கட்டம் கட்டமாக விற்க்கும் சோன்பப்டி கேக் வாங்கி வாயில் போட்டு அது எச்சிலில் ஊற ஊற நடந்தே வீடு வருவது எனக்கு பிடித்த விஷயம்....என் ஆயா ஒரு ரூபாயாக கொடுத்தால் வாங்க மாட்டேன்.. நாலனாவாக நாலு காசு கொடுத்தால்தான் வாங்குவேன்.என் ஆயாவிடம் இலைவியாபரத்தின் போது, 25பைசாவுக்கு அடம்பிடித்த கணங்கள் நினைவுக்கு வந்து செல்கின்றன. ஒருரூபாய் வாங்காமல் இப்படி வாங்க முக்கிய காரணம் நிறைய காசு என்னிடத்தில் இருப்பதாக ஒரு பிரம்மை ...
கட்டண கழிவறைகளில் முதலில் ஒன்னுக்கு போக 25 பைசாவில்தான் கட்டணம் நிர்ணயிக்கபட்டது... ஆனால் இன்று ஒன்னுக்கு போக மூன்றுரூபாய் வாங்குகின்றார்கள்..
பாண்டி ரத்னா தியேட்டரில் 1,20க்கு தரை டிக்கெட் 4 பேருக்கு 5ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து விடுவோம்.. ஆனால் தனியாக போனால் அந்த 25 பைசாவுக்கு கூடுதல் மதிப்பு.. கடலூரில் இருந்து கிளம்பும் போதே நாலனா சில்லரைகள் நிறைய வைத்ததுக்கொள்வோம்... பேருந்தில் 2,75காசு,3,25 என இப்படித்தான் கடலூர் டூ பாண்டி பேருந்து கட்டணம் இருக்கும்
லட்சும்பதிக்கு கணக்கு சுத்தமாக வராது... ஆனால் எனக்கு கணக்கு கொஞ்சம் வரும்...கொஞ்சமே கொஞ்சம்தான் வரும்.. அவுங்க வீட்டில் இருக்கும் பொட்டிக்கடையில் 25 பைசா கொடுத்தால் அதை கல்லாவில் போட்டு சலசல என சத்தம் உருவாக்கி ஒரு ரூபாய்க்கு மிட்டாய்,கமர்கட் என்று எனக்கு திண்பண்டங்கள் கிடைக்கும்... முதலில் எனக்கு அச்சர்யமாக இருந்தது... நான் 25பைசாதான் கொடுத்தேன் என்று என் வாயை திறக்கும் முன் லட்சும்பதி வாயில் கைவைத்து சைகைசெய்தான்....பிறகு தேர்வில் அவனுக்கு நான் கணக்கு பரிட்சையின் போது காட்ட வேண்டும்...அதுதான் டீல் என்றான்...எனக்கு ஆச்சர்யமாக இருந்தது...
கனவில் நான் ஆற்றுமணல் அல்லது கடல்மணலில் உட்கார்ந்து இருக்கும் போது மணலில் கைகளால் துழாவுகையில் நாணயங்கள் தட்டுப்படும். இதில் கொடுமை என்னவென்றால் ஒருரூபாய் இரண்டு ரூபாய் எல்லாம் கிடைக்காது...25 பைசா அதிகம் கிடைக்கும் அதுவும் புதையல் போல... 25பைசாதான் அதிகம் கிடைக்கும்.. கனவிலேயே என் நேரத்தை திட்டி இருக்கின்றேன்...
கோலி விளையாடும் போது ஆட்ட ஜெயிப்புக்கு 25 பைசாவுக்குதான் முதலிடம்....அதே 25 பைசாவுக்கு அடித்துக்கொண்டு மங்கம் மாய்ந்து உதடு கிழிந்து, அடித்தவனின் அம்மாவை விபச்சாரதொழிலுக்கு தள்ளிய கணங்களை நாள் முழுவதும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்..
கடலூர் நகை கடைகளில் சனிக்கிழமை தோறும் பிச்சைக்காரர்கள் பாஜாரை வலம் வருவார்கள்.. இரண்டாம் பேருக்கு தெரியாமல் செய்யப்பட வேண்டிய தர்மம் தலைக்கு 25 பைசா என அவர்கள் வைத்து இருக்கும் அலுமினிய குவளையில் கிளிங் என ஓசை எழுப்பி தர்மம் செய்யும் நகைகடை அதிபர்களை நான் பார்த்து இருக்கின்றேன்..
சிலர் கடையில் கவுண்டர் ஓரமாக25 பைசா சில்லரை மாற்றி வைத்து விடுவார்கள்.. பிச்சைகாரர்கள் வருவார்கள் ,ஆளுக்கு 25 பைசா எடுத்துக்கொண்டு போவார்கள்..அதுவே நாலு பேர் வந்து விட்டால் நாலு காயின் எடுத்துக்கொண்டு நாங்கள் நாலு பேர் என்று சைகையில் சொல்லி தங்கள் நேர்மையை வெளிபடுத்திவிட்டுவார்கள்..
நம்மோடு பயணித்த அந்த 25 பைசாவுக்கு வாழ்த்தி வழிஅனுப்பி வைப்போம்...
திருவள்ளுவர் போக்குவரத்துகழகம் இருந்த போது முன் பதிவுக்கு 25பைசா கொடுத்துதான் பார்ம் வாங்கியதாக ஞாபகம்..
பத்து வருடங்களுக்கு முன் சுத்தமாக 25 பைசாவுக்கு மதிப்பு இல்லாமல் போக. ஆரம்பித்தது....5வருடத்துக்கு முன் 25 பைசாவை பிச்சைக்காரர்கள் வாங்க மறுக்க அதுக்கு சுத்தமாக மதிப்பு இல்லமல் போக ஆரம்பித்தது...
சென்னை மாநகர பேருந்தில் நடத்துனர்கள் 50பைசாவில் இருந்து ஒரு ரூபாய் வரை அவர்கள் மீதம் தரமாட்டர்கள்.. நம்மிடம் 25 பைசா இல்லையென்றால் அதை சத்தம் போட்டு சொல்லி அவமானப்படுத்துவார்கள்..ஏதோ ஒரு விஜய் படத்தில் கூட 25 பைசாவுக்கு தமிழ்சினிமா வக்காலத்து வாங்கியது....
யாருமே 25 பைசாவை மதிக்காத போதும் 25 பைசாவுக்கு செய்தி பறிமாற்றம் செய்ய 25பைசா அஞ்சல்கார்டுகளை அஞ்சல்துறை வைத்து இருந்தது..