Pages

Monday, 5 December 2011

அகழாய்வு காட்டும் தமிழக வரலாறு

நடன.காசிநாதன்., தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேனாள் இயக்குநர். தமிழகத்தில் இந்திய நடுவண்அரசு தொல்லியல் துறையாலும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையாலும், சென்னைப் பல்கலைக் கழகத் தொன்மை வரலாறு மற்றும் தொல்லியல் துறையாலும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டுத் துறையாலும் கிட்டத்தட்ட 100 இடங்களில் நில அகழாய்வு நடைபெற்றிருக்கின்றன. மேலும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையாலும், இந்திய நடுவண் அரசு தொல்லியல் துறையாலும், கோவாவிலுள்ள தேசிய கடலாய்வு நிறுவனத்தாலும் சில கடலகழ்வாய்வுகளும் நிகழ்ந்திருக்கின்றன. மேலே குறிப்பிடப்பெற்ற அகழாய்வுகளால் தமிழ்நாட்டின் வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது, அதாவது சுமார் 2,00,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்காணும் அகழாய்வுகள் நடைபெற்ற இடங்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று வரலாற்றுக்கு முந்தைய கால இடங்கள், மற்றொன்று வரலாற்றுக்கால இடங்கள். அ) வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இடங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடியம், அத்திரம்பாக்கம், வடமதுரை, பெரும்போர், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த சானூர், அமிர்தமங்கலம், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல், தருமபுரி மாவட்டம் பையம்பள்ளி, மோத்தூர், திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூர், கொற்கை, சாயர்புரம், கோவை மாவட்டம் கொடுமணல், மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி போன்ற அகழாய்வு நடைபெற்ற இடங்கள் வரலாற்றுக்கு முந்தைய கால இடங்களாகும். ஆ) வரலாற்றுக்கால இடங்கள் வரலாற்றுக்கால அகழாய்வு இடங்களாக திருச்சி மாவட்டம் உறையூர், புதுவை மாநிலம் அரிக்கமேடு. நாகப்பட்டினம் மாவட்டம் காவிரிப்பூம்பட்டினம், காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், பெரியார் மாவட்டம் கரூர், இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம், தேரிருவேலி, விழுப்புரம் மாவட்டம் மாளிமைமேடு, திருவண்ணாமலை மாவட்டம் ஆண்டிப்பட்டி, விருதுநகர் மாவட்டம் மாங்காடு, காஞ்சிபுரம் மாவட்டம் வசவசமுத்திரம், தஞ்சை மாவட்டம் வல்லம், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், சேந்தமங்கலம், பெரம்பலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம், திருவண்ணாமலை மாவட்டம் படைவீடு போன்ற முக்கிய இடங்களைக் குறிப்பிடலாம். அ) வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இடங்களில் தெரியவந்தவை 1) திருவள்ளூர் மாவட்டம் வடமதுரையில் இற்றைக்கு 2,00,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழைய கற்காலக் கல் ஆயுதங்கள் கிடைத்துள்ளன. 2) செங்கற்பட்டு மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள அத்திரம்பாக்கத்திலிருந்து பழைய கற்காலக் கருவிகளோடு கல்லாகப் பெற்ற மனிதக்கால் எலும்பு கண்டறியப்பட்டது. இவற்றின் காலம் சற்றேறக்குறைய 50,000 லிருந்து 75,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். இங்கேயே ஆப்பிரிக்க நாட்டில் கண்டெடுக்கப் பட்ட கல்கோடாரி போன்ற அஷூலியன் வகை கற்கோடாரிகள் கிடைக்கப் பெற்றன. இவை சென்னைக் கைக் கோடரி தொழிற்வகை என்று அழைக்கப்படுகின்றன. 3) குடியம் மலைத் தொடரில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த 16 இயற்கைக் குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 4)சாயர்புரம் செம்மண்மேடுகளிலிருந்து நுண்கற்கருவிகள் சேகரிக்கப் பட்டிருக்கின்றன. இவற்றின் காலம் இற்றைக்கும் 4000 ஆண்டுகளிலிருந்து 10,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். 5)திருத்தங்கலிலிருந்து நுண்கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 6)டி.கல்லுப்பட்டியிலிருந்து செப்புக் கருவிகளும், இரும்புக் கருவிகளும் கிடைத்திருக்கின்றன. இவற்றின் காலம் கி.மு. 1000 லிருந்து கிமு 500 முடிய இருக்கலாம். 7)ஆதிச்சநல்லூரிலிருந்தும் செப்புத் திருமேனிகளும், செப்பு மற்றும் இரும்பு தங்கப் பொருள்களும் மிகுதியான அளவில் (கிட்டத்தட்ட 4000) திரட்டப் பட்டிருக்கின்றன. அண்மையில் இவ்விடத்தில் கிடைத்த முதுமக்கள் தாழியின் உட்பக்க அடிப்பாகத்தில் கிமு 500 ஐச் சார்ந்த பண்டைத் தமிழ் எழுத்துகளில் பெயர் எழுதப் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப் பெற்றது. 8) பையம்பள்ளியிலிருந்து கிமு 4000 லிருந்து கிமு 2800 ஆண்டு காலங்களில் வாழ்ந்த புதிய கற்கால மனிதர்களின் குழிமனைகள் கண்டறியப் பட்டிருக்கின்றன. 9)பெரும்போரில் தியான நிலையில் அமர்ந்திருந்த ஒரு எலும்புக் கூட்டோடு ஒரு பெருங் கற்காலச் சவப்பெட்டி கிடைத்திருக்கிறது. இதுவும் மேற்கூறப்பட்ட காலக்கட்டத்தைச் சேர்ந்தவையாகும். 10) கானூரிலிருந்து பெருங்கற்காலக் கல்லறைகளிலிருந்தும் விலங்குகளின் (குதிரை உட்பட) எலும்புகள் எடுக்கப்பட்டன. 11) கருங்கல்லில் வடிக்கப்பெற்ற காடுகாள் தெய்வச் சிலை பெருங்கற்காலக் கல்வட்டத்தின் நடுவில் திருவண்ணாமலை மாவட்டம் மோட்டூரிலிருந்தும், விழுப்புரம் மாவட்டம் உடையாநத்தத்திலிருந்தும் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் காலம் சற்றேறக்குறைய கிமு 500 ஆக இருக்கலாம். 12) தருமபுரி மாவட்டம் மோத்தூரிலிருந்து பெருங்கற்காலத்திய சுடுமண் காளை அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. வரலாற்றுக்கால இடங்களில் தெரிய வந்தவை 1) அரிக்கமேட்டிலிருந்து புதிய கற்காலக் கட்டடங்களும் (2002 - 800 பிசி) சுட்ட செங்கற்களால் கட்டப்பெற்ற நெற்களஞ்சியங்களும், (கிமு 200 கிபி 200) துணிகளைச் சாயம் ஏற்றும் சாயத் தொட்டிகளும், குடிநீர் உறை கிணறுகளும், வெளிநாட்டாரோடு தமிழகம் கொண்டிருந்த வணிக உறவை வெளிப்படுத்தும் வெளிநாட்டு மதுக்குடுவைகளும், பானையோடுகளும், விலை உயர்ந்த கல்மணிகளும், சங்ககாலச் சோழர் காசு (கிமு 500 -400) ஒன்றும் வெளிக் கொணரப்பட்டுள்ளன. 2) பூம்புகாரிலிருந்து சுட்ட பெரும் செங்கற்களால் கட்டப்பெற்ற கிமு 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த படகுத் துறைகளும், கிபி 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த புத்த விகாரமும், கிபி 4-5 ஆம் நூற்றாண்டைய சிறு புத்தர் செப்புத் திருமேனியும் பிராமி எழுத்துகள் எழுதப்பெற்ற பானை ஓடு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளன. எழுத்துப் பொறித்த பானை ஓடு கி.மு 3-2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகலாம். இங்கு நடைபெற்ற கடலகழாய்விலிருந்து கண்டறியப்பட்டவை அ) கடற்கரையிலிருந்து ஐந்து கி.மீ தொலைவில் காவிரியாற்றின் வடபகுதியில் ஒரு கட்டடப்பகுதியும், அதற்கு முன்பாக இரு கட்டடப் பகுதிகளும், பண்டைக் காவிரியாற்றின் தென் பகுதியில் இரு கட்டடப் பகுதிகளும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கின்றன. இவை கிமு 5-4 ஆம் நூற்றாண்டினதாக இருக்கவேண்டும். ஆ) பூம்புகாருக்கருகில் உள்ள சின்னமேடு என்னும் மீனவர் ஊருக்கு எதிரில் ஒன்றரை கிமீ தொலைவில் கடலுள் 36 அடி ஆழத்தில் புத்தர் கற்சிற்பம் கிடைத்திருக்கிறது. இது கிபி முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டினதாகக் கருத முடிகிறது. 3) அழகன் குளத்திலிருந்து மக்கள், மரக் கால்களை நட்டும், ஓலைக் கூரை வேய்ந்தும் வீடுகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்ததற்கான தடயங்களும், சற்று பிற்காலத்தில் கற்சுவர் எழுப்பிக் கட்டிய வீடுகளில் வாழ்ந்ததற்கான செங்கற்கள். கூரை ஓடுகள் ஆகியவைகளும் கிடைத்திருக்கின்றன. இவற்றின் காலம் கிமு 2-3 ஆம் நூற்றாண்டாகும் இதற்கும் பிற்பட்ட காலத்தில் மண்சுவர் எழுப்பியும், சுண்ணாம்பினால் மெழுகிய தரையையும் உடைய வீடுகள் அமைத்துக் கொண்டு வாழ்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இங்கு கிடைத்துள்ள தொல் பொருள்களில் முத்திரை குத்தப்பெற்ற காசுகள், சங்ககாலப் பாண்டியர் காசுகள், ரோமானியர் காசுகள், கப்பல் உருவம் வரையப்பெற்ற பானையோடுகள், பண்டைத் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானையோடுகள், எகிப்தியர் சாயலில் காணப்பெறும் பெண்களின் உருவங்கள் உள்ள பானையோடு ஹெலனிஸ்டிக் சாயலில் உள்ள ஒரு குழந்தை உருவமும், அதனை இடுப்பில் ஏந்தியுள்ள தாயின் உருவமும் காணப்பெறும். மண்கிண்ணக் கைப்பிடியும், ஹரப்பன் நரகரிகக் காலக் குறியீடுகளால் காட்டப்பெற்றுள்ள 1,2,3 ஆகிய எண்களைக் கொண்ட தாயக்கட்டை, பண்டைத் தமிழ் எழுத்துகளினூடே சேர்த்து எழுதப்பெற்ற பானையோடு, குதிரை மீதேறி சவாரி செய்யும் போர்வீரன், காளை ஆகிய முத்திரைகள் பதிக்கப்பெற்ற பானை ஓடுகள், வடநாட்டு மோரியர் காலத்தில் வெளியிட்ட பானையோடுகள் ஆகியவை முக்கியமானவைகள் ஆகும். 4) கொற்கையில் முதுமக்கள் தாழிகளும், பண்டைத் தமிழ் எழுத்து பொறிக்கப்பெற்ற பானையோடுகளும், சங்கு வளையல்களும், பெருங்கற்காலக் குறியீடுகள் கொண்டுள்ள பானையோடுகளும் குறிப்பிடத் தக்கவைகளாகும். 5) கொடுமணலில் முத்திரை குத்தப்பெற்ற வெள்ளி நாணயம், கார்னீலியன் வகைக் கல்மணிகள் (ஆயிரக்கணக்கில்) தானியக் களஞ்சியங்கள், சதுர நீண்ட வீடுகளின் தரைப்பகுதிகள், இரும்புக் கத்திகள், கேடயங்கள், குதிரை அங்க வடிகள், எலும்பினால் செய்யப் பெற்ற அம்புமுனைக் குவியல், தங்கம் மற்றும் வெள்ளி அணிகலன்கள், செம்பினால் செய்யப்பெற்ற புலி, மத்தளம், மணி, வாணல், சாம்பராணிக்கலசம், பண்டைத் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பெற்ற பானையோடுகள், வடநாட்டு மோரியர் காலத்துப் பானையோடுகள் ஆகியவை கிடைத்திருக்கின்றன. 6) காஞ்சிபுரத்தில் சங்ககாலம் தொட்டு விசய நகர வேந்தர் காலம் முடிய தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. புத்த விகாரம், புத்த ஸ்தூபம், ரோமானிய நாட்டைச்சார்ந்த மதுக்குடுவைகள், ரெளலட்டட் வகை பானையோடுகள், உள்நாட்டில் தயார் செய்யப் பெற்ற கூம்பு வடிவ முதுக்குடுவைகள், சாதவாகனர் காசுகள் (கிபி 1-2 நூற்றாண்டு) சோழ மன்னன் முதலாம் இராசராசன் வெளியிட்ட காசு (கிபி 10-11 ஆம் நூற்றாண்டு) இலக்குமி உருவம், முத்திரை குத்தப்பெற்ற காசின் இரு வடிவமைப்புகள், சாதவாகனர், காசின் ஐந்து வடிவமைப்புகள், எலும்பினால் செய்யப்பெற்ற சீப்பு, முடிபிடிப்பு விசய நகர வேந்தர் காலத்திய தங்கக்காசு, பல்லவர் காலத்திய உறைகிணறுகள் ஆகியவை வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. 7) கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் இராசேந்திரன் காலத்தில் எழுப்பப்பெற்ற அரண்மனையின் அடித்தளச் சுவர்கள். மேற்கூரைக்கான மரங்களைப் பொருத்தப் பயன்படுத்திய நீண்ட இரும்பு ஆணிகள். கதவுகளில் பொருத்தப் பெற்ற செப்புக் குமிழிகள், வண்ணம் தீட்டப்பெற்ற சுவர்ச்சிதைவுகள், பீங்கான் ஓடுகள், சோழர் காலத்தியக் கூரை ஓடுகள், சிம்மாசனம், கட்டில், நாற்காலிகள் ஆகியவற்றை அலங்கரித்த தந்தச் சிற்பங்கள், எலும்புச் சிற்பங்கள், கல்லால் செய்யப் பெற்ற பொருட்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கத் தொல்பொருள்களாகும். 8) சேந்தமங்கலத்தில் காடவமன்னன் கோப்பெருங்சிங்கன் அமைத்து வாழ்ந்த மாளிகையின் அடித்தளப்பகுதிகளும், அதேபோன்று படை வீட்டில சம்புவராய மன்னர்கள் கட்டி வாழ்ந்த கோட்டைச் சுவர் மற்றும் அரண்மனையின் அடித்தளப் பகுதிகளம் கண்டறியப்பட்டுள்ளன. மேலே குறிப்பிடப்பெற்ற அகழாய்வுகளிலிருந்து பெறப்பட்டிருக்கின்ற தொல்பொருள்கள் மூலம் பண்டைய தமிழ்ச் சமுதாய வரலாற்றை நாம் உற்று நோக்குவோம். தமிழகத்தின் வடிகோடியில் உள்ள வடமதுரையில் மாந்தரினம் இற்றைக்குச் சுமார் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழத் தொடங்கியிருக்கிறார்கள், அவர்கள் கரடு முரடான கல் ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். தொடர்ந்து தங்கள் கருவிகளில் முன்னேற்றம் கண்டு இற்றைக்குச் சுமார் 4000 ஆண்களுக்கு முன்பிருந்தே (புதிய கற்கால மக்கள்) வேளாண்மை மற்றும் மீன்பிடித்தல், ஆறுகளில் ஓடங்களில் பயணம் செய்தல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அவர்களது வீடமைப்பு, எழுத்தறிவு, காசுப்புழக்கம், வாணிகம், தொழில்கள் ஆகியவை சிறந்திருந்தன என்றும் அறிய முடிகிறது. மொத்தத்தில் தமிழினம் இற்றைக்கு இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வந்திருக்கிறது என்பது அகழாய்வினால் தெரிய வருவதால், தமிழர்கள் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி - என்று கூறப்பெற்று வரும் வழக்கு உண்மையை அடிப்படையாகக் கொண்டதே என்பது உறுதியாகிறது. இற்றைக்குச் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாகரிகம் பெற்றவர்களாக வாழ்ந்திருந்தாலும், கிமு 500 முதல் உலக மற்ற நாடுகளோடு போட்டி போடக்கூடிய உயர்ந்த நாகரிகத்தோடு எழுத்தறிவுடன் திகழ்ந்திருக்கிறார்கள் என்பதை அகழாய்வுகள் புலப்படுத்துகின்றன. நன்றி - சிந்தனையாளன் மார்ச்சு 2006