Pages

Monday, 5 December 2011

உலகத் தமிழர் கற்க வேண்டிய பாடங்கள்

க.ப. அறவாணன் தமிழர், பிற இன மக்களிடம் அடிமைப்பட்டுத் தாழ்ந்து கிடந்ததை 1948 க்கு முற்பட்ட இந்திய இலங்கை ஆகிய தாய்ப் பூமிகளும், மலேசியா தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ் முதலான குடியேற்ற நாடுகளும் மெய்ப்பிக்கின்றன. உலக வரலாற்றில் அன்று தொட்டு இன்று வரை, தம் பழம் பெருமையை இழக்காமல் என்றும் வைத்திருக்கும் இனமாகக் கிரேக்க உரோமானிய இனத்தையும், அவ்வினத்தின்வழி வந்த ஐரோப்பிய இனத்தையும், இடையீடுபட்டாலும், தன் தலைமை அடையாளத்தை இழக்காத சீன இனத்தையும் இடையூறுகள் இருந்தாலும் ஃபீனிக்ஸ் பறவை போல எரிதழலில் எரிக்கப்பட்டும் எரிந்து போகாமல் நிமிர்ந்து நிற்கும் யூத இனத்தையும் நாம் சுட்டிக் காட்ட முடியும். இது போலத் தமிழினத்தைச் சுட்டிக் காட்ட முடியாது. அடிமை நிலை கூலி நிலை அகதி நிலை என்ற மூன்று நிலையிலிருந்தும் உலகத் தமிழர்கள் முற்றுமாக மீண்டுவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. உலகத் தமிழர் 1947-48 க்குப் பிறகு அரசியல் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டது போலத் தோன்றினும், அது முழுமையான விடுதலை அன்று என்பதையே இலங்கை உள்ளிட்ட பகுதிகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. அரசியல் அடிமைத்தனங்களிலிருந்தும் அதிகார அடிமைத் தனங்களிலிருந்தும் தமிழர்கள் இன்னம் முழுமையாக விடுதலை பெறவில்லை. குடிபெயர்ந்த நாடுகளில் கூலி என்ற பெயர் மாறி - குடிமக்கள்- என்ற நிலையைத் தமிழர் அடைந்து விட்ட போதிலும், அந்தந்த நாடுகளில் தமிழர் இரண்டாம் தரக் குடிமக்களாகவே இருந்து வருகின்றனர். தமிழர்களுடைய இந்நிலைக்குக் காரணம், அயலார் என்று கருதுவதும், பழிப்பதும் தவறு, தமிழருடைய அன்றைய வீழ்ச்சிக்கும், இன்றைய வீழ்ச்சிக்கும் காரணம் தமிழரே. தொலைநோக்கு இன்மையும், தமிழ் எனும் மொழியை மையப்படுத்தி சமூகக் கட்டொருமைப்பாட்டை வளர்க்காததும் தம் சமூகத்தைக் கண்ட துண்டமாக வெட்டிப் போடும் மதங்களையும், சாதிகளையும், கட்சிப் பிளவுகளையும் அனுமதித்து வளர்த்தெடுத்தும், உட்பகையும், பொருளாதார நோக்கில் போதிய அளவு சிந்திக்காததும், பின்நாளில் வரும் அரசியல் ஆதிக்கங்களை ஊகித்துத் தற்காத்துக் கொள்ளாததும் குறிக்கத் தக்கனவாகும். வேதனைகள் வந்த போதும், வரும்போதும், வெற்றி பெற்ற இனமக்கள் எவ்வாறு அவற்றை எதிர் கொண்டார்கள், வீழ்ந்தாலும் நிரந்தரமாக வீழாமல் எவ்வாறு நிமிர்ந்து நின்றார்கள் என்பதைக் கூர்ந்து பார்த்தாவது நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு சில பாடங்கள் பின்வருமாறு. 1) ஆதிக்கம் செய்ய உள்ளே நுழைந்தவர்களை முற்றாக உள்ளே நுழையவிடாமல் தடுத்துக் கொண்டது. ஜப்பானும், தாய்லாந்தும் முற்றுமாக ஐரோப்பிய ஆதிக்கம் உள்ளே நுழையவிடாமல் கடைசிவரை தடுத்துக் கொண்டன. பெரும்பகுதி சீனர்களும் அதில் வெற்றி பெற்றனர். 2) சீனர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அவர்தம் தலைமை உயர்வு. உலக இன மக்களிலேயே சீன இனம் தான் உயர்ந்தது என்று ஒவ்வொரு சீனக் குழந்தைக்கும் கற்பிக்கப்படுகிறது. சீனர்களில் ஏழைகள் இருப்பதில்லை. அவர்கள் பல நாடுகளுக்குக் குடியேறியபோதும் எந்த இடத்திலும் அவர்கள் பிச்சைக் காரர்களாக இருந்ததில்லை. இருப்பதில்லை. வாணிகத்திலும், செல்வம் சேர்ப்பதிலும் மிகக் குறியாக இருப்பார்கள், இருக்கும் இடத்தில் மட்டுமல்லாமல் குடியேறிய நாடுகளில் தங்கள் மொழி, பண்பாடு, நாகரிகம், பெயர் சூட்டிக் கொள்ளும் முறை முதலானவற்றில் பிடிவாதமாக இருப்பார்கள். 3) உலக ஆதிக் குடிமக்களாக யூதர்கள் தம்மைக் கருதுகின்றனர். இவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் கல்வி கற்பது, தம் யூத இன மக்களில் ஒருவர் சிறிய ஒன்றைச் சாதித்தாலும் அவரை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுப்பது. பொருளாதாரத்தை உயர்த்துவதில் குறியாக இருப்பது - என்ற மூன்று கொள்கைகளை மூச்செனக் கருதுவது. நன்றி : இலண்டன் சுடரொளி இதழ் ஆக இன்றைய சூழலில் நம் தமிழர்கள் எங்கு இருந்தாலும் - இனப்பெருமையைக் காப்பதும், தமிழ்க் கல்வி கற்று நுட்பத்தை வளர்த்தெடுப்பதும், பொருளாதார வளர்ச்சியில் முனைப்போடு செயற்படுவதும் - இலக்காகக் கொண்டு செயற்பட முயலவேண்டும். இது நம்மை வளர்த்தும்.