Monday, 5 December 2011
தத்தளிக்கும் தவளை
ஒரு தவளை தத்தித் தத்தி ஒரு குடிசைக்குள் நுழைந்தது. அங்கே பளபளப்பான அலுமினியப் பாத்திரத்தில் தண்ணீர் இருந்தது. தண்ணீரைப் பார்த்த மகிழ்ச்சியில் தவளை பாத்திரத்திற்குள் தாவிக் குதித்தது.
இதுவரை சேறும் சகதியுமாய் ஒரு குட்டையிலிருந்த அந்தத் தவளைக்கு இந்தத் தூய்மையான நீரம், பளபளப்பாக இருந்த பாத்திரமும் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏதோ ஒரு நீச்சல் குளத்தில் நீந்தும் நீச்சல் வீரனைப்போல் நீந்தி மகிழ்ந்தது.
சற்று நேரத்தில் குடும்பத் தலைவி வீட்டுக்குள் நுழைந்தாள். அந்தப் பாத்திரத்தை எடுதது அடுப்பின் மீது வைத்து, அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு மீண்டும் அரட்டையடிக்கப் பக்கத்தது வீட்டுக்குச் சென்று விட்டாள்.
தண்ணீரிலிருந்த தவளைக்குத் தண்ணீர் இலேசாகச் சூடேறுவது புரிந்தது. ஆனால் அது முதலில் அதற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. - ஆஹா என்ன சுகம் - அந்த மிதமான வெப்பம் வலியோடு இருந்த அதன் கால்களுக்கும் கைகளுக்கும் ஒத்தடம் கொடுத்தது போலிருந்தது.
தண்ணீரில் மேலும் கீழும் நீந்தி மகிழ்ந்தது. ஆனால் நேரம் செல்லச் செல்ல நீரின் வெப்பம் உயர்ந்து கொண்டே வந்தது. எந்தப் பகுதிக்குச் சென்றாலும் வெப்பம் கூடிக் கொண்டே இருந்தது. பாத்திரத்திலிருந்து வெளியே தாவிக் குதிக்கவும் முடியவில்லை. உடல் அவ்வளவு வலுவிழந்து போயிருந்தது.
சிறிது நேரம் கழித்து, வீட்டுக்குள் மீண்டும் நுழைந்த குடும்பத் தலைவி, பாத்திரத்திலிருந்து கொதிக்கும் நீரில், வெந்து மிதந்து கொண்டிருந்த தவளையைக் கண்டாள்.
தவளைகளுக்கு என்ற ஒரு குணம் உண்டு. சூடான நீரில் தவளையைப் போட்டால், உடனே தாவி வெளியே குதித்து விடும். ஆனால் நாம் முன்பு கண்டது போல தண்ணீரில் போட்டு, மெல்ல மெல்ல சூடேற்றிக் கொண்டே வந்தால் அதே சூட்டில் வெந்து மடிந்துவிடும். தப்பிக்க வேண்டும் என்றே தோன்றாது.
தண்ணீர் முதலில் இலேசாகச் சூடேறிய போது, தவளைக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி, இன்னும் சற்றுச் சூடேறிய போது மேலும் கொஞ்சம் மகிழ்ச்சி.
நம்மில் பலருக்குக் கேட்ட கடன் கிடைத்தவுடன், பணம் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி. அந்தக் கடனை அடைக்க வேறு ஒருவரிடம் கடன் வாங்கினால் மிகவும் மகிழ்ச்சி. கடன் தொகை கைக்கு வரும்போதெல்லாம் மகிழ்ச்சி.
அதைப் போன்றே புகைபிடிக்கும்போது, நன்றாக இழுத்து மூக்கின் வழியாகவும், வாயின் வழியாகவும் புகையை விடும்போது மகிழ்ச்சி, மதுபானத்தை உறிஞ்சிக் குடிக்கும்போது மகிழ்ச்சி, போதை உச்சிக்கேறி, உலகமே சுற்றுவது போலத் தோன்றும்போது பரவசம்.
வேலைக்குப் போகாமல் திண்ணையிலே கம்பளியைப் போர்த்திக் கொண்டு தூங்கும் போது சுகம். வேலையை செய்யாமலிருந்தால் இன்னும் சுகம்.
தண்ணீர் லேசாகச் சூடேறும்போது தவளைபட்ட சுகத்தைப் போல...
கடன் வாங்கும்போது சுகம்
புகை பிடிக்கும்போது சுகம்
மது அருந்தும்போது சுகம்
வேலை செய்யாமலிருந்தால் பரவசம்.
ஆக எல்லாக் கெட்ட செயல்களும் ஆரம்பத்தில் மிகுந்து உற்சாகத்தைத் தரும். ஆனந்தத்தை அள்ளிக் கொடுக்கும், தண்ணீர் மேலும் மேலும் சூடேறியவுடன் தவளை வெந்து போனதைப் போல வட்டிக்கு மேல் வட்டி பெருகி, கடன் தொகையின் அளவு கூடினால் எவ்வளவு வேதனை?
தொடர்ந்து புகை பிடித்துக் கொண்டேயிருந்து, இறுதியில் புற்று நோய்க்கு இரையாகி, வாழ்க்கை முடியும்போது, அந்த மனிதனின் குடும்பநிலை என்ன ஆகும்.
கெட்ட வழக்கங்கள் ஆரம்பத்தில் இன்பத்தைத் தருவது போலத் தோன்றினாலும் முடிவில் நிச்சயம் துன்பத்தையே தரும்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.