Pages

Monday, 5 December 2011

ஆங்கிலவழிக் கல்வியும் இன்றைய ஆசிரியர்களும்.

தமிழகத்திலும், புதுவை மாநிலத்திலும் நாம் காண்பது என்ன? மக்களின் உயிர் நிலையாகிய தாய்மொழிவழிக் கல்வி பற்றி ஆளுங்கட்சியினருக்கும் அக்கறையில்லை, எதிர்க்கட்சியினருக்கும் ஈடுபாடு இல்லை. மக்கட்குக் கல்வி வழங்கும் ஆசிரியர் பெருமக்கட்கும் அணுவளவு கூட இதைப் பற்றிய எண்ணமே இல்லை. படிப்படியாக ஒழிந்து போய்விடும் என்று நினைத்த ஆங்கிலவழிக் கல்வி புதுப் பொலிவுடன் மீண்டு வந்து இன்று தமிழகத்தையும் புதுவை மாநிலத்தையும் ஆட்டிப்படைத்து அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளரும், அரசியல்வாணரும், அறிவாளரும் மக்களும் நல்லதெனக் கருதும் ஆங்கிலவழிக் கல்வி ஒரு மிகப் பெரிய தீமை. மக்களிடையே விரைந்து பரவிக் கொண்டு வரும் மிகக் கொடிய கொள்ளை நோய். ஆங்கிலவழிக் கல்விக்கு ஒரு பேரெதிர்ப்புத் தமிழகத்தின், புதுவையின் கல்வியாளர்கள் நடுவிலிருந்தாவது புறப்பட்டிருக்க வேண்டும். கல்விக்கான புதிய கொள்கைகளையும், புதிய முறைகளையும் ஆய்ந்து காணும் அறிவுத் திறம் படைத்த கல்வியாளர்களும், ஆசிரியப் பெருமக்களும் இத்துறையில் எவ்வளவு விழிப்புணர்வு உடையவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நிலைமை என்ன? மக்கட்கான கல்வி என்று சொல்லிக் கொண்டே கல்வியாளர்கள் ஆங்கிலத்தை ஊடகமாகக் கொண்டுதான் தங்கள் ஆய்வுகளையும், புதிய எண்ணங்களையும், வழிமுறைகளையும் வெளியிடுகின்றனர். தாய்மொழிக் கல்வியின் இன்றியமையாமையைப் பற்றி அவர்கள் எண்ணிப் பார்ப்பதே இல்லை. இனிப் பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடம் நடத்தும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்களாவது எப்படி ஆங்கிலவழிக் கல்வி தமிழ்ப் பிள்ளைகளின் மூளையை மழுங்கடித்து, எண்ணுந்திறனை இழக்கச் செய்து, குருட்டு மனப்பாடச் செய்தி இயந்திரங்களாக அவர்களை ஆக்குகின்றது என்பதை அன்றாட வகுப்பறை நடப்புகளிலிருந்து கண்டு பிடித்திருக்க வேண்டும். அடிமைத் தனத்தையே வளர்க்கும் ஆங்கில வழிக் கல்வியை அகற்றிவிட்டு சொந்தப் பண்பாட்டுடன் கூடிய செழுமையான வாழ்வியற் கல்வியை அவர்கட்கு வழங்க முன்வந்திருக்க வேண்டும். ஆனால் இவர்களும் செய்யவில்லை. ஆசிரியர்கள் உண்மையான கல்விப்பணி ஆற்றுபவர்களாக இருந்தால் அவர்கள் நடுவிலிருந்து ஆங்கிலவழிக் கல்விக்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியிருக்க வேண்டும். ந்னமையின் பெயரால் நடத்தப்படும் பெருந்தீமை இது என்பதைச் சுட்டிக்காட்டி அதனுடன் ஒத்துழைத்திருக்க மறுத்திருக்கவேண்டும். ஆங்கிலவழிக் கல்விக்க எதிரான ஒரு கருத்தாக்கத்தை மாணவர் நடுவிலும் பெற்றோர் நடுவிலும் உருவாக்கித் தாய் மொழிவழிக் கல்வியை ஊக்குவிப்பவர்களாகச் செயல்பட்டிருக்க வேண்டும். ஆசிரியர்கள் ஏன் இதைச் செய்யவில்லை. கடனுக்கு வேலை செய்து சம்பளம் வாங்கும் இயந்திரங்களாகவே ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். கல்வியைப் பற்றிய தெளிவோ, நாட்டின் பொது மலர்ச்சியில் அக்கறையோ மக்கட்குத் தாங்கள் பொறுப்புடையவர்கள் என்ற எண்ணமோ அவர்கட்குக் கடுகளவும் இல்லை. பேயரசு செய்தால் பணந்தின்னும் சாத்திரங்கள் என்பது போல ஆசிரியர் கூட்டமும் ஆங்கிலவழிக் கல்விக்கு அடிபணிவதாக இருந்து வருகின்றது. படித்தவர்கள் என்பவர்கள் தங்கள் படிப்பை அடகுவைத்துச் சம்பளம் வாங்கிக் கொள்வதோடு தங்கள் குமுகாயக் கடமை முடிவதாக நினைத்துக் கொள்கின்றனர். பாடத்திட்டத்தின்படி வகுப்பறைக்குள் பாடம் நடத்துவது மட்டுமே ஆசிரியர் கடமையாகாது. அதுவே கல்வியும் ஆகாது. மாந்தனை மாந்தனாக்குவதே கல்வி என்பதைக் கூறாதவர்கள் யாருமில்லை. அப்படியிருக்க அத்தகைய கல்வி ஏன் நம் கல்வி நிலையங்களில் நடப்பதில்லை. மாணவர்கட்கு விழிப்புணர்வூட்டி அவர்கட்குச் செழுமை மிக்க கல்வி வழங்க வேண்டிய ஆசிரியர்களே அதைச் செய்யவில்லை என்றால் என்ன காரணம் ? ஆசிரியர்கள் கற்றுவந்த கல்வியிலேயே ஏதோ ஓர் ஓட்டை எஙகேயே இருந்திருக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன காரணம் காட்ட முடியும் ? அடிமையுணர்வை வளர்க்கும் வகையால், அடிமைக் காலத்தில் வெள்ளைக் காரனால் உருவாக்கப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி விடுதலையற்ற கல்வி, விடுதலைக்குப் பிறகும் அதை மேற்கொண்டதைப் போன்ற மடத்தனத்திலும் மடத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.