Pages

Monday, 5 December 2011

கருவறை வேண்டாம் கழிவறை கட்டுங்கள்


வேலைதேடி சென்ற நாட்களில் நானும், என் நண்பர்களும் சந்தித்த பிரட்சனைகளில் கழிவறையும் ஒன்று. இந்த நாட்டில் வேலையை கூட தேடிவிடலாம், ஆனால் கழிவறையை தேடி கண்டுபிடிப்பது அத்தனை சுலபமல்ல. இன்று அலுவலகம் செல்லும் வழியில் ஒரு சம்பவத்தைக் கண்டேன். சில வாலிபர்கள் சுவரில் இருந்த வள்ளலாரை சிறுநீரால் அபிசேகம் செய்து கொண்டிருந்தார்கள். இதை வள்ளலாருக்கு அவமானமாக நான் கருதவில்லை. அதை வரைந்து வைத்த கட்டிட உரிமையாளரின் அறியாமையைத்தான் பெரியதாக கருதினேன்.
சில நாட்களுக்கு முன் நான் எழுதிய கவிதை,.

இங்கு சிறுநீர் கழிக்காதே!
அன்று காலை முதல்
வேலை தேடி
அலைந்து கொண்டிருந்தேன்
திடீரென சிறுநீர் உந்துதல் ஏற்பட
கழிவறையை தேடினேன்!.
ஆனால்
கண்ணில் பட்டதெல்லாம்
இங்கு சிறுநீர்க் கழி்க்காதே என்ற வாசகமும்
அதைக் காவல் காக்கும் கடவுளையும் தான்!.
தெருவிற்கு தெரு இங்கே தெய்வங்கள் குடியிருக்கும் கருவறைகள் இருக்கின்றன. ஆனால் நம்முடைய கழிவுகளை அகற்ற கழிவறைகள் தான் இல்லை. இங்கு “சிறுநீர் கழிக்காதீர்கள்” என எழுதப்பட்டிருக்கும் பகுதியிலெல்லாம் கழிவறையின் தேவை இருக்கிறது என்பது மறைமுக உண்மை.
இப்பொழுதெல்லாம் வாசகங்கள் மட்டும் எழுதப்படுவதில்லை. மாறாக கடவுளின் படங்கள் வரைந்து வைக்கப்படுகின்றன. மனிதர்கள் சிறுநீர் கழிக்காமல் இருக்க, தெய்வங்கள் காவல் காக்கின்றன. “இங்கு சிறுநீர் கழிப்பது குற்றம்” என்ற பலகைகளைத் தாங்கி அல்லா, புத்தர், ஏசு, சிவன் என எல்லோரும் அமர்ந்திருக்கின்றார்கள்.
“ஏன் நாத்திகர்களுக்கு சிறுநீர் உந்துதலே வராதா” என சில நேரங்களில் நான் வேடிக்கையாக நினைத்ததுண்டு.
கூவம் நதிக்கரையில் இருக்கும் ஆயிரக்கணக்காக குடிசைகளுள் சில காங்கிரிட் கட்டிடங்கள் இருக்கிறது. அது மக்கள் ஒன்று சேர்ந்து கட்டிய கோவிலாகவோ, ஆலயமாகவோ இருக்கிறதே தவிற, கழிவறையாக எங்கும் இருப்பதில்லை. இங்கு மட்டுமல்ல எங்கும் அதே நிலைதான். கிராமங்களில் கோவில்கட்ட வீட்டிற்கு ஆயிரம், ஐயாயிரம் என கட்டாய வரிவிதிப்பு செய்கின்றார்கள். அதற்கு அள்ளி கொடுக்கும் கைகள், காலைக்கடனுக்காக கிள்ளிக் கூட கொடுப்பதில்லை.
அதுமட்டுமின்றி கழிவறை என்பது பெண்களுக்கு மட்டுமான ஒரு தனிச் சொத்தாக எண்ணத் தொடங்கிவிட்டார்கள். பல பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டும் கழிவறை இருக்காது. மாணவிகள் தினம் தினம் பராமரிக்கப்படும் கழிவறையில் சுகமாய் சென்று வர,. மாணவர்கள் மட்டும் புதர்களையும், மரத்தையும் தேடிக் கொண்டு அலைய வேண்டும். ஏன் அவர்கள் மனிதர்கள் இல்லையா. அரசால் கட்டப்பட்ட பல கழிவறைகள் இன்று ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. இலவச கழிவறை எல்லாம் கட்டனக் கழிவறைகளாக செயல்பட்டுவருகின்றன. சில இடங்களில் ஐந்து ரூபாய் கூட வசூல் செய்யப்படுகிறது.
பள்ளிகளில் ஆரமித்து இந்த கழிவறைப் பிரட்சனை கோவில்கள், சுற்றுலாதளங்கள் என எல்லா இடங்களுக்கும் பொதுவான பிரட்சனையாகவே உள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் கைப்பேசிகளின் எண்ணிக்கையை விட கழிவறைகள் குறைவு என செய்திகள் வெளிவந்தன. திறந்த வெளி கழிவறைகளை உபயோகப்படுத்தும் போது சைனா செட்டில் சத்தமாக பாட்டு வைத்துக்கொண்டு போகின்றார்கள். கைப்பேசி இங்கு மானப்பிரட்சனையாக மாறிவிட்டது. ஆனால் மானமெல்லாம் எப்போதோ போய்விட்டதை உணராமலே.
இனி அடுத்த தலைமுறையாவது சிறுநீர் உந்துதல் ஏற்படும் போது, மரத்தையோ, செடியையோ தேடி ஓடாமல் கழிவறையை பயன்படுத்த அரசு நடவெடிக்கை எடுக்கட்டும்.