Pages

Monday, 5 December 2011

சிறுபிள்ளைகளின் கற்கும் திறனைக் குடிக்கும் கணினிகள்

பெரும்பான்மையான பெற்றோர்கள் கணினியால் கல்விக்கும், வருங்காலத்தில் தொழில் நுட்பத் துறையிலும் பயன் உள்ளது எனக் கருதி பிள்ளைகளுக்குக் கணினி வாங்கிக் கொடுக்கின்றனர். உலக அளவில் கணினியின் பயன்பாடு உயர்ந்த வண்ணம் இருப்பதை நாமும் உணர்கிறோம். ஆனால் ஆய்வாளர்களின் கூற்று நம்மையெல்லாம் திடுக்கிட வைக்கின்றது. கணினி உண்மையில் பிள்ளைகளின் கல்விக்கு உதவாது என்றே அவர்களின் முடிவு. அளவுக்கு அதிகமான நேரத்தைக் கணினித் திரையில் செலவழித்தால் சிறு பிள்ளைகளின் மனவளர்ச்சியைப் பாதிக்கும், இளவயதிலேயே கணினியைப் பயன்படுத்தும் மாணவர்களுக்கு ஆக்க சக்தி, கற்பனை, தன்முனைப்பு, கவனம், ஆசைகள் ஆகியவற்றின் ஆர்வத்தைக் குறைக்கின்றது. இதன் தொடர்பாகக் கணினி சிறுவர்களின் கல்விக்கு உதவாது என்ற முழு விளக்கக் கட்டுரை கடந்த 2002 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாத செம்பருத்தி இதழில் வெளியிடப் பட்டிருந்ததை நீங்கள் படித்திருக்கலாம். 1) கணினி குழந்தைகளின் அறிவு வளர்ச்சியைக் குறைக்கும் 2) எண்ணம், கற்பனை, படைப்பாற்றல் திறன்களைக் குறைத்து தடையை ஏற்படுத்துகின்றது. 3) எழுத்து, சொல்வளம், வாசிப்புத்திறன் குன்றிப் போகும். 4)மொழி, எழுத்துத் திறன், வலிமை குறையும். 5) ஒருமுகச் சிந்தனை குறையும். 6) கணினி பிள்ளைகளின் சமுதாய வளர்ச்சியைப் படிப்படியாக அழிக்கவல்லது. 7) விட்டுக் கொடுத்து சகித்துக் கொள்ளும் பண்பை குறைக்கச் செய்கிறது. 8) கூடிப்பழகும் தன்மையைக் குறைக்கவும் தனித்த நிலைமையையும் உருவாக்கும். என்ற கருத்தினை முன்வைத்து அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அதே கருத்தடிப்படையில் எழுதப்பெற்றுள்ள கட்டுரை பயனீட்டாளர் குரலில் இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரையை, செம்பருத்தி வாசகர்களின் பயனுக்காக இங்கே வெளியிடுகின்றோம். மலேசியாவில் கல்விக்கூடங்களில் கணினியைப் பயன்படுத்தக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. நமது நாட்டில் தற்பொழுது உள்ள மொத்த விவேகப் பள்ளிகளின் எண்ணிக்கை 90. சென்ற வருடம் இறுதி வரைக்கும் சுமார் 300 பள்ளிக்கூடங்களை விவேகப் பள்ளிக்கூடங்களாக மாற்றி அமைக்கவிருப்பதாக செப் 2002 இல் தி ஸ்டார் நாளேட்டில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. கல்வித் துறையில் கணினியின் பயன்பாடு நாளுக்கும் நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் அது உண்மையிலேயே எந்த அளவுக்குப் பயந்தரக்கூடியது என்பதனை ஜெர்மெனியின் இரு கல்வி நிபுணர்களான தோமஸ் ஃபச் மற்றும் ரோஜர் வோஸ்மேன் ஆய்வு செய்துள்ளனர். அவர்களுடைய ஆய்வுகளின் முடிவுகளைச் சுருக்கித் தந்துள்ளனர். "பள்ளிக்கூடங்களில் கணினியால் சிறார்களின் கல்வி வளர்ச்சியில் பெரிதான மாற்றம் எதையும் செய்து விட முடியாது. சிறார்கள் வீட்டில் பயன்படுத்தும் கணினியோ அவர்களுடைய வளர்ச்சிக்குப் பெரிதும் ஊறு விளைவிக்கும்" - இதுவே அவர்களுடைய ஆராய்ச்சிகளின் முடிவு. இவர்கள் ஏதோ சும்மா பொதுவான ஒரு முடிவுக்கு வந்துவிடவில்லை. 31 நாடுகளைச் சேர்ந்த 15 வயதுள்ள 1,00,000 சிறார்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள்தாம் இவை. முடிவுகள் வருமாறு. வாரத்தில் சில நேரங்களில் கணினி உபயோகிக்கும் மாணவர்கள் வாசிப்பு மற்றும் கணக்குப் பாடத்தில் பின்தங்கியிருக்கிறார்கள். வீடுகளில் கணினி உள்ள மாணவர்களின் கல்வித் தரம் இன்னும் மோசமாகவே உள்ளது. வீடுகளில் புத்தகங்கள் நிறைய உள்ள சிறார்களின் கல்வித் தரத்தில் மேம்பாடு காண முடிகிறது. கணினி அதிகம் உள்ள வீடுகளில் சிறார்களின் கல்வித் தரம் குறைவாகவே இருக்கிறது. ஒரு மாணவனின் வாழ்க்கையில் கணினி கவர்ச்சியான ஒரு சாதனமாகத் திகழ்ந்தாலும், குறிப்பிட்ட மாணவனின் வேலையைக் கணினியே செய்து முடிக்கும் ஒரு நிலை உருவாகுமானால் மாணவனின் முழுமையான அனுபவப் படிப்புக்கும் வளர்ச்சிக்கும் அங்குத் தடை இருக்கிறது என்றே அர்த்தம். அளவுக்கு அதிகமான கணினிப் பயன்பாடு மாணவரின் கற்பனா சக்தியையும் கலைத் தன்மையையும் முடக்கி விடுவதை யாரும் அறிவதில்லை. பவர் பொயின்ட் என்ற கணினி மென்பொருள் மூலம் மாணவர்கள் தங்களுடைய படைப்புகளை மிகவும் கவர்ச்சியாக வெளிக்கொண்டு வருவதைப் பள்ளிக்கூடங்கள் பெருமையாகக் கொள்கின்றன. சற்று ஆழ்ந்து நோக்கு வோமேயானால், மாணவர்களின் கற்பனை வளம் பவர் பாயிண்ட் மென்பொருளின் உபயோகத்தில் உள்ள வரையறைகளோடு நின்று விடுகிறது. அதே மாணவரிடத்தில் கிரேயான், கலர் பென்சில், கத்தரிக்கோல், பசை போன்றவற்றைக் கொடுத்தால் கணினி செய்வதைவிட இன்னும் பிரமாதமாகவும் அதே வேளையில் அதிக செலவினங்களை ஏற்படுத்தாமலும் செய்து முடிப்பார்கள். சிறார்களுக்குக் கணினி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. அந்தப் பாதிப்புகள் பின்வருமாறு: 1) மூளை வளர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது 2) கற்பனை வளம், உந்து சக்தி மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கும் திறனை அழிக்கின்றது. 3) எழுதுதல், எழுத்துக்கூட்டுதல் மற்றும் வாசிப்புத் திறனைக் குறைக்கிறது. 4) உன்னிப்பாகக் கவனிக்கும் திறனைக் குறைக்கிறது. பொறுமையின்மையை அதிகரிக்கிறது, சிறார்கள் ஆழமாகச் சிந்திப்பதற்கு உதவாத, மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாத ஒரு ஐடப்பொருளாகக் கணினி இருக்கிறது என்பதில் ஐயமில்லை. கணினியே உலகமாகக் கிடக்கும் மாணவர்கள் மொழித் திறனை வளர்ப்பதில்லை. மனிதனோடு ஒன்றி வாழும் கலைக்கான கால அவகாசம் குறைக்கப்படுகிறது. 1990 இல் ஜேன் ஹேலி எழுதிய "என்டேன்ஜர்ட் மைன்ஸ்" என்ற நூலில் ஒரு பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப் பட்டிருந்தது. ஓர் ஆங்கில ஆசிரியர் எந்த மாணவர் சுயமாகச் சிந்தித்திருக்கிறார், எந்த மாணவர் கணினியின் துணைகொண்டு இணையத்திலிருந்து பொறுக்கி எடுத்து எழுதியிருக்கிறார் என்று எளிதாக இனங்கண்டு கொள்ள முடியும். கணினியின் துணை கொண்டு எழுதுகின்னறவர்கள் "ஒன்றை எழுதிவிட்டு, பிறகு ஒன்றை எழுதுவார்கள். சிந்திப்பதில் ஒரு கோர்வை இருக்காது. எழுதுவதில் ஓர் அர்த்தத்தையு புரிந்துணர்வையும் உருவாக்கிக் கொண்டு இருக்கமாட்டார்கள்" கணினிமூலம் கற்பித்தல் கற்பித்தலில் உண்மையான உலகை மாணவர்கள் புரிந்து கொள்ள வழிவகுப்பதில்லை. விதவிதமான விளையாட்டுகள், சமூகத்தில் உள்ள பலதரப்பட்ட மக்களிடையே பழகி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், இயற்கையை நேசித்தல், பலவிதமான கலைகளை கற்றுக் கொள்ளுதல் எல்லாம் அறிவை வளர்ப்பதோடு, மனித உணர்வுகளைப் புரிந்து கொண்டு, பக்குவப்பட்ட மாணவர்களையும் எதிர்காலச் சமுதாயத்தையும் உருவாக்க உதவிபுரியும். நன்றி : செம்பருத்தி இதழ் - மார்ச் 2006