Monday, 5 December 2011
சமுதாயத்தைச் சீரழிக்கும் சின்னத் திரை விளம்பரங்கள்
உலகில் மிக அரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றான தொலைக்காட்சி ஊடகம் இன்று அறிவைப் புகட்டும் அறிவியல் கருவியாக இல்லை. உலகமய மற்றும் தாராளமயத்துக்கு அடிமையாகி சீரழிவுக் கலாச்சாரத்திற்குத் தன்னை காசுக்காக அர்பணிக்கும் போக்கு தொடர்கிறது.
மக்களின் இன்றியமையாத் தேவைப் பொருள்களுக்கு இந்த விளம்பரங்கள் முக்கியத்துவம் தருவதேயில்லை. ஆடம்பர நுகர் பொருள்களுக்காகச் செய்யப்படும் விளம்பரங்களே அதிகம். இவர்களின் நுகர்வேர்களை ஈர்க்கும் வெறியூட்டல் எப்படியெல்லாம் நம் பாரம்பரிய சமுதாய ஒழுங்கைக் கொச்சைப்படுத்திச் சீரழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது என்பதைக் காட்டுதே இக் கட்டுரையின் நோக்கம்.
இன்றைய சின்னத் திரைகளில் நாய் பிஸ்கட்டிலிருந்து, நடிகை ஐஸ்வர்யாராய் சுழன்று சுழன்றாடி விளம்பரப்படுத்தும் நட்சத்திர வைர விளம்பரம் வரை பார்வையாளரான நம்மை வாங்க முடியாமல் இருக்கிறதே என்ற ஏக்கத்தை உருவாக்கித் தாழ்வு மனப்பான்மையைத் தோற்றுவித்து தன்னம்பிக்கையைச் சிதறடிக்கின்றன.
8 வயது மதிக்கத்தக்க சிறுவன் 20 வயது மதிக்கத்தக்க பெண்ணின் பின்புறத்தைப் பார்த்து சூப்பர் ஐட்டம் என்று நினைக்கிறானாம். தங்கள் நிறுவனத்தின் சாக்லெட்டை அச்சிறுவன் சாப்பிட்டதால் அந்தச் சிறுவனுக்கு அந்தப் புரிதல் ஏற்பட்டு விட்டது என்கிறது விளம்பரம். 50 காசு சாக்லெட்டை நம் சிறுவர்கள் வாங்க வேண்டிய அவசியத்தை இவ்வளவு ஆபாசமாகக் காட்டுகிறது இந்த விளம்பரம். இதை நம்முடன் அமர்ந்து கொண்டு இந்த விளம்பரத்தைப் பார்க்கின்ற நம் வீட்டுச் சிறுவர்கள் அண்டை வீட்டுப் பெண்களை இப்படி வருணிக்க மாட்டார்கள் என்பதற்கு இந்த பிரசார்பாரதிகளும், விளம்பரங்கள் கட்டுப்பாட்டுப் பொறுப்பாளர்களும் உத்திரவாதம் தருவார்களா.
ஓர் ஆயத்த ஆடையகம் தங்கள் தயாரிப்புகளை அணிந்து கொள்ளும் ஆடவனை ஊரில் உள்ள இளம் பெண்கள் எல்லாம் சைட் அடிப்பார்கள் என்று விளம்பரப்படுத்துகிறது. இன்னொரு விளம்பரம் குறிப்பிட்ட உள்ளாடை அணிந்துள்ள இளைஞனை பெண்களின் கழிவறைக்குள் நுழையுமாறு செய்து ஒரு பெண்கள் கூட்டம் அவனுக்கு உடல் முழுவதும் முத்தமாகப் பொழிந்துள்ளதாக விளம்பரப்படுத்துகிறது
இன்னொரு விளம்பரமோ ஒரு இளைஞன் தன் இடுப்பு உள்ளாடை அணிவதைப் பார்த்து அந்த உள்ளாடையின் பெயரை ஆச்சர்யத்துடன் கூறி பெண்கள் கூட்டம் மகிழ்ச்சியில் துள்ளுவதாகச் சித்தரிக்கிறது. உள்ளாடைகளைக் கண்டு மயங்குவதாகப் பெண்களைக் கேவலப்படுத்தும் விளம்பரங்களுக்கு எவ்வாறு அனுமதியளிக்கப்படுகிறது?
இதுபோன்ற விளம்பரங்களைப் பார்க்கும் குழந்தைகள், பின்னர் வயது அதிகரிக்க அதிகரிக்க - அதே விளம்பர வாசகங்களை உச்சரித்து விளையாடத் தொடங்கும் போது ஒரு தலைமுறை சமுதாயம் தறுதலைகளின் சமுதாயமாக மாறும். இதனால் சமுதாய ஒழுங்கு பண்பாடு உள்ளிட்டவை கேள்விக்குறியாகிறது. இதன் வெளிப்பாடுதான் இன்றைய ஈவ்டீசிங் பெருக்கமும், அதைத் தடுக்கும் சட்டங்களும். இது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்கு ஒப்பாகும். மோசமான நுகர்வுக் கலாச்சாரத்தையும் இந்த மண்ணின் அடிப்படை பண்பாட்டுக் கூறுகளையும் விலை பேசுகிறது சின்னத்திரை. இது மாற மக்கள் என்று எழுவார்கள்? அல்லது இதிலேயே கலந்துவிடுவார்களா?