கணவன் இறந்துவிட்டால் போதும்! அந்தப் பெண்ணுக்கு சமுதாயம்
மொட்டையடித்து, வெள்ளாடை உடுத்தி ஒரு மூலையில் "மூளி" என்று சொல்லி முடக்கி
வைத்துவிடுகின்றனர். ஒரு பெண் கணவனுடன் வாழ்ந்தால் 'சுமங்கலி" கணவன்
இறந்துவிட்டால் "அமங்கலி"; தாலி அறுத்தவள் என்று பட்டம் சூட்டுகின்றனர்.
நல்ல காரியத்திற்கு வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது ஒரு அமங்கலி குறுக்கே
வந்துவிட்டால் அது சாபக்கேடு,கெட்டசகுனம் என்றெல்லாம் விதவைப் பெண்களை வதை
செய்கின்ற கொடுமை நம் நாட்டில் இன்னமும் நடந்து வருகிறது.இக்கொடுமை
இத்துடன் நின்றுவிடுவதில்லை.இறந்த கணவனை எரிக்கும்போது அந்த நெருப்பில்
மனைவியையும் தள்ளிவிட்டு, உடன்கட்டை ஏறுதல் என்ற பெயரில் எரியச் செய்வர்.
04.09.1987 அன்று ராஜஸ்தான் மாநிலம் டியோராலா என்ற கிராமத்தில் ஒரு கோரச் சம்பவம் நடந்தது. ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த மால்சிங் என்பவர் இறந்து விடுகின்றார். அவருடைய சிதைக்குத் தீ மூட்டப்படுகிறது.இறுதிச்சடங்கில் ஊர்ப்பொது மக்கள் கூடி நிற்கிறார்கள். இறந்த கணவனின் தலை அவனது இளம் மனைவியின் மடியில் இருக்கத் தீ மூட்டப்படுகிறது. அந்த நெருப்பில் 18 வயது இளம்பெண் ரூப்கண்வாரும் சேர்ந்து எரிகிறாள். தன்னைக் "காப்பாற்றுங்கள்" என்று அவள் கதறிய கதறல், குருட்டு சிந்தனையில் ஊறிப்போன அந்த மக்களின் செவிட்டுக் காதுகளில் விழவில்லை.மறுமணம் புரிந்து மறுவாழ்வு காணவேண்டிய ஒரு மலர், கருகிச் சாம்பலானது. இவ்வாறு உடன்கட்டை ஏறவில்லையென்றால், அந்தப்பெண்ணைச் சாகடிப்பதற்கு சமுதாயம் வேறு ஒரு முறையைக் கையாளும்.சதுரவடிவிலான ஒருகுறுகிய அறையினுள் அந்தப் பெண் அடைக்கப்படுவாள்.அந்த அறையினுள் நீட்டி நிமிர்ந்து படுக்கமுடியாது.இரு முட்டுக்கால்களை நெஞ்சுக்கு நேராக வைத்துக்கொண்டு உட்காரத்தான் முடியும்.அவளை யாரும் பார்க்கமுடியாதவாறு அந்த அறையானது ஒரு கருப்புத் திரைச்சீலையால் மூடப்படும்.ஒருவேளை மட்டுமே உணவு; அதுவும் உப்பில்லாத உணவு கொடுக்கப்படும்.இந்தக் கொடுமை தாங்காது அந்தப்பெண் விரைவில் மெலிந்து இறந்துவிடுவாள். இது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் கொடுமையாகும். நம்முடைய தமிழ்நாட்டிலும் உடன்கட்டை ஏறும் வழக்கம் சங்ககாலத்தில் இருந்ததாக அறிகிறோம். ஆனால் பெண்கள் உடன்கட்டை ஏற வற்புறுத்தப்படவில்லை. இக்கொடுமையை பெண்கள் விரும்பியே ஏற்றனர். சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன், கோவலன் குற்றமற்றவன் என்று அறிந்தவுடன்,"யானே கள்வன்" என்று கூறி அரியணையில் இருந்து கீழேவிழுந்து இறந்துவிடுகிறான். உடனே அவன் தேவியும் அவன்மீது விழுந்து இறந்துவிடுகிறாள். பாண்டிமாதேவியின் கற்பு, "தலைக்கற்பு" என்று இன்றளவும் போற்றப்படுகிறது. ஆனால் கண்ணகியின் நிலை வேறு. தன் கணவன் குற்றமற்றவன் என்று நிரூபிக்க வேண்டிய கடமை அவளுக்கு இருந்தது. எனவே கண்ணகி இறக்கத் துணியவில்லை. கோவலன் குற்றமற்றவன் என்று நிரூபித்த பிறகு கண்ணகிக்கு உயிர்வாழ விருப்பமில்லை. கோவலன் இறந்த 14 ஆம் நாள் கோவலனுடன் விண்ணுலகம் சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. சமயக்குரவருள் ஒருவரான திருநாவுக்கரசர் 7 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர்தம் தமக்கையார் திலகவதியார். இவருக்கும் கலிப்பகையார் என்பவருக்கும் திருமண நிச்சயம் நடைபெறுகிறது. கலிப்பகையார் சேனாதிபதியாகப் பணிபுரிந்தவர். திருமணம் நடைபெறுவதற்கு முன்பாகக் கலிப்பகையார் போர்மேற் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. போரில் கலிப்பகையார் இறந்து புகழுடம்பு எய்துகிறார்.இதைக் கேள்வியுற்ற திலகவதியார், கலிப்பகையாரைக் கணவனாக வரித்துவிட்ட காரணத்தால், மணவினை நிகழாவிட்டாலும், உடன்கட்டை ஏறி உயிர்துறக்க முற்படுகிறார். அப்போது அவர்தம் தம்பியார் மருள்நீக்கியார் (திருநாவுக்கரசர்) தமக்கை உடன்கட்டை ஏறினால் தாமும் உயிர் துறப்பதாகக் கூறுகிறார்.தம்பியின் உயிரைக் காத்தற்பொருட்டுத் திலகவதியார் உடன்கட்டை ஏறும் எண்ணத்தைக் கைவிடுகிறார். திருநாவுக்கரசரின் தந்தையார் புகழனார் இறந்தபொழுது அவரது அன்னை மாதினியார் உடன்கட்டை ஏறியதாக வரலாறு கூறுகிறது. பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு.பாண்டிய நாட்டின் வடஎல்லை ஒல்லையூர் நாடு.அதைச் சோழர் கைப்பற்றிக்கொண்டனர்.அதனால் பூதப்பாண்டியன் சோழருடன் போரிட்டு வென்றான்.ஆதலால் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் எனப்பெயர் பெற்றான். இத்தகு சிறப்புடைய பூதப்பாண்டியன் இறந்தான்.எனவே அவன் மனைவியான பெருங்கோப்பெண்டு தன்கணவனுடன் தீப்புக முனைந்தாள்.அதைக்கண்ட அரசியல் சுற்றத்தாரான சான்றோர் அப்பெருமாட்டியைத் தீயில் புகவேண்டாம் என்று கூறித்தடுத்தனர். அரசன் இல்லாத குறை நீங்க அரசை ஏற்று நடத்திடவேண்டும் என்றனர். அவர்தம் கூற்றை ஏற்க அம்மங்கையர்க்கரசிக்கு உடன்பாடில்லை.கைம்மை நோன்பு ஏற்பதையும் அவர் விரும்பவில்லை.தன்னைத் தீப்புக வேண்டாம் எனத்தடுக்கும் சான்றோரிடம் சினம் கொண்டு உரைக்கலானாள்.அதுவே இப்பாட்டு. பல்சான்றீரே பல்சான்றீரே செல்கெனச் செல்லாது ஒழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான்றீரே அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை வல்சி ஆகப் பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் நுமக்குஅரிது ஆகுக தில்ல எமக்குஎம் பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற வள்இதழ் அவிழ்ந்த தாமரை நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே. (புறம்:246) கருத்து: இப்பாடலில் முதலில் கைம்மை நோன்பு மேற்கொள்ளும் பெண்டிரின் இயல்பு உரைக்கப்படுகின்றது.வெள்ளரியின் விதை போன்ற நல்ல மணம் உடைய நெய்யைக் கைம்மை மகளிர் உணவில் சேர்த்துக்கொள்ளார். நீர்ச்சோற்றை வேளைக்கீரையுடனே உண்பர்.பருக்கைக் கற்கள் பரப்பப்பட்ட படுக்கையில் பாயின்றிப் படுப்பர். "அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்" என்றால் நீரிலே கிடந்ததால், அதைக் கையால் பிழிந்து இலையில் வைக்கப்பட்ட சோறு என்று பொருள். அடை என்றால் இலை.இந்தச்சோற்றை, வெள்ளை எள்ளுடன் புளி சேர்த்து சமைக்கப்பட்ட வேளைக்கீரையைச் சேர்த்து உண்பர். "இத்தகைய நோன்பு மேற்கொள்பவர்களுள் நான் ஒருத்தி இல்லை.எனக்குக் குளிர்ந்த தாமரைப் பொய்கையும் ஈமத்தீயும் ஒன்றே! எனவே பல குணங்களால் நிறைந்த சான்றோரே!" நின் தலைவனுடன் இறக்க நீயும் செல்க" என்று சொல்லாது, "அதனைக் கைவிடுக" என்று சொல்லித் தடுக்கும் சான்றோரே! நீங்கள் பொல்லாதவர்கள்"என்று கூறி அவர்களைக் கடிந்து கொள்கிறாள். யார் தடுத்தும் கேளாது பெருங்கோப்பெண்டு தீப்பாய்ந்து உயிர் துறக்கிறாள். "சதி" என்று கூறப்படும் இக்கொடிய வழக்கத்தை ஒழிப்பதில் ராஜாராம் மோகன்ராய் பெரும்பங்கு ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. |