Pages

Friday, 16 March 2012

ஒளவையார்


ஒளவையார் 
தமிழ்மொழியிலேயே முதன்முதலில் தோன்றிய நூலாக "அகத்தியம்" என்னும் நூலைச் சொல்வார்கள். அகத்தியரால் இயற்றப்பட்டு விநாயகரால் எழுதப்பட்ட நூல் என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் குறிப்பிடப்படுவது இந்நூல்தான். ஆனால் தற்சமயம் நம்மிடம் வழங்கும் தமிழ்நூல்களிலேயே மிகப்பழமையான நூல் தொல்காப்பியம். ஆகையால் இன்று நம்மிடம் இருக்கும் தமிழ்நூல்களில் காலத்தால் முதன்மையான நூல் தொல்காப்பியம். தமிழின் சிறப்புவாய்ந்த நூல்களில் திருக்குறþளே முதன்மை வகிக்கிறது. ஆனால் அனைத்து நூல்களுக்கும் இல்லாததொரு விசேஷ சிறப்பு ஒளவையின் நூலான "ஆத்திசூடி"க்கு உண்டு.

ஆத்திசூடிதான் எழுதப்படிக்க ஆரம்பிக்கும்போதே தமிழில் கற்கப்படும் முதல் நூல். தாய்ப்பாலுடன் தமிழ்ப்பால் கலந்து ஊட்டப்படுவது ஆத்திசூடிதான்.

தமிழ்ப்பாட்டி
"தமிழ்த்தாத்தா" என்று நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த .வே.சாமிநாதய்யரை அழைக்கிறோம். ஆனால் "தமிழ்ப்பாட்டி" என்று அழைக்கப்படுகின்ற பெருமையைப் பெற்ற ஒளவையோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தோன்றிவிட்டாள்.

வரலாறு
ஒளவையின் வரலாறு, காலம் ஆகியவை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஒளவையின் பெயரால் பல பாடல்களும், சில நூல்களும், சில கதைகளும் நிலவிவருகின்றன. அவற்றை வைத்துப்பார்க்கும்போது சுமார் ஆயிரத்தைன்னூறு ஆண்டுக் கால கட்டத்திற்குள் குறைந்தது மூன்று ஒளவையார்களாவது இருந்ததாகத் தோன்றும். அனைத்துக் கதைகளும் இணைக்கப்பட்டு, கதம்பமாக ஒரு வரலாறு பின்னப்பட்டு, அதுவே ஒளவையாரின் வாழ்க்கைச் சரிதமாக, செவிவழி மரபாகக் கூறப்பட்டு வருகிறது.

அவர் ஆதி பகவன் ஆகிய இருவருக்குப்பிறந்து, பிறந்தவுடனேயே பெற்றோராலால் கைவிடப்பட்டு, பாணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டதாக அவ்வரலாறு கூறும். அவர் கன்னிப்பருவத்திலேயே முதுமையையும் துறவறத்தையும் விநாயகபெருமானின் பேரருளால் பெற்றதாகவும் அது கூறும். அதிகமானிடம் நெருங்கிய நட்பு பூண்டு, அவரால் ஆதரிக்கப்பட்டு, அவரிடமிருந்து கருநெல்லிக்கனி ஒன்றைப்பெற்று, உண்டு, அதன்மூலம் அழியாத உடலையும் நீண்ட ஆயுளையும் பெற்றார்; அதிகனுக்காக தொண்டைமானிடம் தூது சென்றார்; தமிழகம் முழுமையையும் நடையிலேயே வலம் வந்திருக்கிறார்; பல மன்னர்களுக்கு ஆலோசனைகளும் புத்திமதியும் சொல்லியிருக்கிறார்; மிக்க மன உரம் மிக்கவர்; அஞ்சாமை, வைராக்கியம், ஈரம், இரக்கம், சொல்வன்மை, இறைவனின் திருவருள், அற்புத ஆற்றல்கள், சித்திகள் முதலியவை படைத்தவர்; எளிமையின் சின்னம்; ஏழையின் தோழி; பொன்னுக்கும் புகழுக்கும் பெரும்பான்மையான புலவர்கள் பாடி வரும்போது கூழுக்கும் பாடியவர்.

காதலில் தோல்வியடைந்த பேயொன்றைத் தன் ஆற்றலால் மீண்டும் "தமிழறியும் பெருமாள்" என்ற பெயரோடு பெரும்பண்டிதையாகப் பிறக்கச்செய்து, அந்தப்பிறவியில், இழந்த காதலை மீண்டும் பெறச்செய்தார். கம்பர், ஒட்டக்கூத்தர் ஆகியோருடன் போட்டியிட்டார். சங்கப்புலவர்களால் முதலில் புறக்கணிக்கப்பட்ட திருக்குறளுக்காக, சங்கப்புலவர்களை மீண்டும் கூட்டி, பொற்றாமரைத் திருக்குளத்தில் சங்கப்பலகையைத் தோன்றச்செய்து, அதன்மீது திருக்குறள் சுவடியை வைத்து, தாங்கச்செய்து, குறளின் சிறப்பை உணர்வித்து, அரங்கேற்றம் பெற உதவினார். பாரி வள்ளலின் இறப்புக்குப்பின்னர், அவரின் உயிர்த்தோழர் கபிலரின் மறைவுக்குப் பிறகு, பாரிமகளிரை திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரி மன்னனுக்கு மணமுடித்து வைத்தார்.

சுந்தரமூர்த்தி நயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை , குதிரை மீதேறிக்கொண்டு திருக்கயிலைக்குச் செல்லும்போது, விநாயகர் பூஜையைச்செய்து, விநாயகர் அகவலைபாடி, விநாயகப்பெருமானின் ஆற்றலால் அவர்களுக்கு முன்னரேயே உடலுடன் திருக்கயிலையை அடைந்தார். இவையெல்லாம் அந்த மரபுவழிக்கதைகளாலும் பாடல்களாலும் அறியப்படுபவை.

வரலாற்று ஆய்வு
ஆராய்ந்து பார்க்குமிடத்து மூன்று ஒளவையார்களாவது இருப்பது தெரியும்:

சங்க காலத்தில் உள்ள ஒளவையே பாணர் குலத்தில் உதித்த விறலி. பேரழகியாக விளங்கி, பெரும்புலமையுடனும் தைரியத்துடனும் விளங்கியவர்; இவர்தான் கபிலர், பரணர், பாரி, அதிகமான் ஆகியோர் காலத்தில் வாழ்ந்தவர்; அதிகமானுக்காக தூது சென்றவரும் இவர்தான். அதிகமான் தந்த கருநெல்லிக்கனியை உண்டு, நீண்ட காலம் உயிருடன் இருந்தவர்; பாரிமகளிருக்கு மணமுடித்து வைத்தவரும் இவர்தான். இவருடைய பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சங்ககாலம் முடிவடைந்தது. நீண்ட காலம் உயிருடன் இருக்கும் காயசித்தி ஆற்றலைக் கருநெல்லியின் மூலம் பெற்ற ஒளவை, பின்னர், சங்கம் மருவிய காலத்தில், திருக்குறளை அரங்கேற்றம் செய்ய உதவியிருக்கலாம். இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், யோகசாத்திரங்களில் கரை கண்டவராக ஒளவையார் காணப்படுகிறார். அப்போது இவர் விநாயக உபாசனையையும் செய்து வந்திருக்கிறார். விநாயக உபாசனை, குண்டலினி யோகம் ஆகியவற்றைத் தமிழகத்தில் பிரபலப்படுத்துவதில் இவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். "ஒளவை குறள்" என்னும் சித்தர் நூலை எழுதியவரும் இவராக இருக்கலாம். சாகாக்கலையைப் பற்றி அந்நூலில் இவர் கூறியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் "விநாயகர் அகவலை"ப் பாடியவுடன் விநாயகரின் பேரருளால் தன் உடலுடன் திருக்கயிலையை அடைவதுடன் இந்த ஒளவையாரின் வரலாறு பூர்த்தியாகும்.

கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த இன்னொரு ஒளவையார், பல தனிப்பாடல்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்.

அதன்பின், சில நூற்றாண்டுகளுக்குப்பிறகு, வேறொரு ஒளவையார் இருந்திருக்கிறார்.

இவரோ அல்லது கம்பர் காலத்து ஒளவையாரோதான் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களை இயற்றியவர். ஆனால் இவர்களில் கடைசி ஒளவையார்தான் மூதுரையையும் நல்வழியையும் ஆக்கியுள்ளார்.

நூல்களின் சிறப்பு
மிகப்பெரிய பெரிய நீதிநூல்கள் பலவற்றுள் காணப்படும் விஷயங்களின் சாரமாக அமைந்துள்ள அனைத்து நீதிகளையும் நீதிக்கருத்துக்களையும் "ஆத்திசூடி", கொன்றைவேந்தன்" ஆகிய நூல்களில் எளிய சொற்களால் அமைந்த, சிறிய வாக்கியங்களில் காணலாம். இளஞ்சிறார்கள் மிக எளிதாய்ப்படித்து, புரிந்து, மனனம் செய்துகொள்ளும்படி அமைந்தவை அவை. அத்தனை இளவயதில் மனனம் செய்யப்பட்டு விட்டதால், பசுமரத்தாணி போல் அவை மனதில் பதிந்துவிடுகின்றன. அவற்றைப் படித்த மனிதனின் அல்லது சொல்லக்கேட்ட மனிதனின் ஆழ்மனதின் மிக ஆழத்தில் பதிந்து விடுவதால் அந்த மனிதனின் சிந்தனை, செயல் யாவற்றிலும் அவை பிரதிபலிக்கும். சுருங்கச்சொன்னால், அந்த மனிதனின் மனச்சாட்சியை இந்த நீதி வாக்கியங்கள் உருவாக்கி, நிலை பெறவும் செய்கின்றன.

சமுதாயத்தின் எந்த மட்டத்தில் இருப்போரும் இவற்றையெல்லாம் நீதிகளாகக் கற்று, கேட்டு வந்த காலங்களில், தமிழ் சமுதாயத்தினிடத்தில் குற்றச்செயல்களின் விகிதம் இன்றை விட குறைவாகவே இருந்திருக்கின்றது.

"
பதஞ்சலி யோகசூத்திர"த்தைப் போன்ற சூத்திரங்களின் வடிவில் இந்நூல்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன.

இவற்றில் "ஆத்திசூடி" மிகச்சிறிய வாக்கியங்களாலும் "கொன்றைவேந்தன்" சற்றுப்பெரிய வாக்கியங்களாலும் ஆகியவை. "இன்னதைச்செய்" அல்லது "இன்னதைச் செய்யாதே", "இப்படிச்செய்தால் நல்லது", "இப்படியெல்லாம் செய்தால் தீமை" என்ற பாங்கில் அவை அமைந்திருக்கும்.

"
ஆத்திசூடி" என்ற பெயர் "ஆத்திமாலையை அணிந்திருப்பவன்" என்ற பொருளைத் தரும். இந்த இடத்தில் இது விநாயகரைக் குறிக்கிறது.

"
கொன்றைவேந்தன்" - சிவன்; அவனுடைய "செல்வன்" - விநாயகன். இந்த இரு பெயர்களுமே முறையே அந்த நூல்களின் கடவுள் வாழ்த்தின் முதல் இரு சொற்களாக அமைந்தவை.

ஆக, இரு நூல்களுமே தம்முள் கடவுள்வாழ்த்துப் பெற்ற கடவுள் நாயகனுடைய பெயரைத் தாங்கியே, காலத்தை வென்று நிற்கின்றன.

"
மூதுரை" என்னும் நூல் வெண்பாக்களால் ஆகியது. இது நீதிகளைக்கூறுவதோடு அல்லாமல், உலக உண்மைகளையும், நடப்புகளையும், யதார்த்தங்களையும், விளக்குகின்றது. ஒவ்வொரு கருத்துக்கும் உவமை கூறும் நயம் படைத்தது. முப்பது வெண்பாக்கள் உடையது இந்நூல்.

"
நல்வழி" என்னும் நூலும் வெண்பாக்களினால் ஆனதுதான். இதில் உலகியல் வாழ்வின் உண்மையையும், ஊழின் வலியையும், இறை நம்பிக்கையையும் வலியுறுத்துகிறார் ஒளவையார். நாற்பது பாடல்கள் கொண்டது இன்னூல்.

இவையே தமிழ்மொழியின் தலையாய நீதிநூல்கள்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சங்கத்தார் கோயிலில், தமிழ்ச்
சங்கத்தின் தலைவர் "இறையனார்" என்னும் "திரிபுரம் எரித்த
விரிசடைக்கடவுளின்" பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் பெருமையை
ஒளவையார் பெற்றிருக்கிறார்.

ஔவையாரின் புலமை:
தமிழ் மரபுகளில் பெண்களுக்கென்று ஒரு இடம் அமைந்திருப்பது சிறப்பிற்குரியது. அந்த வகையில் ஔவையார் என்ற இந்த பாட்டியை குழந்தைகள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
ஔவையார் ஒரு மிகச்சிறந்த புலவர். இவர் தமிழ்நாடு முழுவதும் நடந்தே சுற்றி திரிந்த
ஒரு ஞானப்பெண். இப்போது இருக்கும் தமிழ்நாடு அந்த காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் அரசாட்சியின் கீழ் இருந்தது. அப்படி சுற்றித்திரிந்த காலத்தே பாண்டிய மன்னன் அரசவையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நிகழ்ந்த ஒரு சம்பவம்:

ஔவையார் ஒரு சமயம் மதுரையிலே பாண்டியனுடைய அரண்மனைக்கு திருமணத்துக்கு போனார்.

அங்க இருக்குற காவல்காரர்கள் எல்லாம் விவேகம் இல்லாதவர்கள். ஔவையாரை, பழுத்த ஞானக் கிழவியை, உள்ளே அனுமதிக்கவில்லை.

"
போ வெளியே! கெழவிகளுக்கெல்லாம் இங்கே என்ன வேலை!"

அவர் தமிழ் பழம்! ஔவையார் ஒன்னும் சொல்லலை. "நல்லது"ன்னார்.

மாலை நேரத்திலே புலவர்களெல்லாம் ஔவையாரைக் கண்டு "அம்மா! பாண்டியர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனியே சாப்பாடெல்லாம் எப்படி இருந்தது?"

"
வடை, பாயசம், லாடு, ஜாங்கிரி, குலோப்ஜான், ரொம்ப உயர்வாய் இருந்திருக்கனுமே?"

"
நீங்கதானே எங்களுக்கெல்லாம் தலைமை! தமிழ்த் தாய்!" என்று புலவர்கள் கேட்டார்கள்.

ஔவையார் சொன்னார் "உண்டேன்! உண்டேன்!"

என்ன உணவு உட்கொண்டீர்கள்?

சொல்வது என்ன? பாடுகிறேன் கேள்.

பாடல் :


வண்டமிழைத் தேர்ந்த வழுதி கல்யாணத்து
உண்டபெருக்கம் உரைக்கக்கேள் - அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியினாலே
சுருக்குண்டேன் சோறுண்டிலேன்.

விளக்கம் :

வண் தமிழை கற்று தேர்ந்த வழுதி திருமணத்திற்கு சென்ற நான் அங்கே நிறைய உண்டேன் அதை சொல்கிறேன் கேள்:
அவனை நாடி உணவருந்தி வரலாம் என்று சென்ற நான் மக்களாலும், என்னை யார் என தெரியாத காவலர்களாலும் நெருக்கப்பட்டேன்(முன்டியடித்தல்) .அவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டபோது நானும் அந்த தள்ளளுக்கு உள்ளாக்கப்பட்டேன். வெகு நேரம் நடந்து வந்த காரணத்தினால் நீண்ட நேர பசியால் உடலும், மனமும் சுருக்கம் பெற்றேன்.இவ்வளவிற்கும் ஆளுண்ட நான் சோறு உண்ணவில்லை அப்பா.

"
மூன்று உண்டேன் ஒன்றே ஒன்று உண்டிலேன்"ன்னாரு.

"
நெருக்குண்டேன், தள்ளுண்டேன், நீள் பசியினாலே சுருக்குண்டேன், சோறுண்டிலேன்!"

புலவர்களெல்லாம் சிரித்துக் கொண்டார்கள்."ஔவையாருக்கே இந்த கதியா"ன்னு.
ஒளவையின் சிலேடை :

ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.

அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் நடந்தோ, குதிரை மீதோ அல்லது குதிரை அல்லது மாட்டு வண்டியிலோ தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்வதற்காகவென்றே திண்ணை இருக்கும்.

ஔவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.

கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே காரிக் கட்டியினால் எழுதியிருந்த இரண்டு வரிகளைக் கவனித்தார்:

"
தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"

தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று கேட்டார் ஔவையார்.
"குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்' என்றும் கூறிக் காரிக் கட்டியால் இவ்விரண்டு வாரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார். கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்." என்று கூறினாள் சிலம்பி.

அதைக் கேட்ட ஔவையார் உடனே ஒரு காரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வாரிகளின் கீழே கீழ்க்கண்ட வாரிகளைச் சேர்த்துக் கவிதையைப் பூர்த்தி செய்தார்:

பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு

என்பதாகும் அவ்வரிகள்.

இதையும் சேர்த்து முழுப்பாடலாக,

"
தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு "

என்பதாகும்.
ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.

தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக் கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும் படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,

"
ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ"

என்று கூறினார். இதற்கு உத்தரமாக ஔவையார்,

"
எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."
தமிழில் "" அன்பது எண் 8 ஐக் குறிக்கும் "" 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும்.

எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் பரி எருமை. எமனேறும் பரியே என்றால் "எருமையே" எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் "மூதேவியின் வாகனமே" என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் "குட்டிச் சுவரே" என்று பொருள்.

"
குலராமன் தூதுவனே" என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் தூது சென்ற ஹனுமானான "குரங்கே" என்றும் பொருள் படும். "ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் "அடா" என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை "அடி" என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.