Pages

Thursday, 15 March 2012

”வாங்க! வாங்க! வாங்க…”



வாங்க! வாங்க! வாங்க…” என்று வாய் முழுக்க பல்லைக்காட்டி வரவேற்காவிட்டால் வீட்டுக்குபோனா வாண்ணு ஒரு வர்த்தை சொல்லல்ல. இவன்லாம் எண்ணைக்கு மனுசானாண்ணு தெரியும்டே. இவனுக்க அப்பன் சுப்பையன் அந்தக்காலத்தில மலையில கெழங்கு பிடுங்கி தெருத்தெருவாட்டு கொண்டு வித்தவன்தான்லா…” என்று வசைபாடுவது தமிழ்ப்பண்பாடு.வந்தாரை வாவென்றழைக்கும் தமிழகம்என்பது ஒரு குறைபடக்கூறல்.வாங்க!வாங்க!வாங்க!வாங்க!வாங்க!வாங்க!வாங்க!வாங்க!என்று நாற்பத்தெட்டுமுறை அழைப்பதே நந்தமிழர்தம் தொல்முறையென்க. அதிலொன்றுகுறைந்தாலும் ஊடுதலும் மரபே ஆம்.

இதில் உருவாக்கப்பட்டுள்ள சொற்றொடர்களை மொழியறிஞர் இன்னும் ஆய்வுசெய்யத் தொடங்கவில்லை. பக்கத்துவீட்டுக்காரர் வந்தாலும்என்ன கண்ணுலே காணுகதுக்கே இல்ல…?” என்று சொல்ல்லாம். காலம்பறதானே வே பாத்தோம்..?”என்று அவர் சொல்லப்போவதில்லை. பல சோலியில்லா? ஆச்சி இருக்காளா?” என்றபடி துண்டால் திண்ணையை துடைத்துவிட்டு எக்கப்போ செந்திலாண்டவா…”என்றுதான் அவர் அமர்வார்.

பழந்தமிழகத்தில் பாதைகள் மிகச்சிக்கலானவையாக, ஓடையும் வழியும் ஒன்றேயாகி ஊரெல்லாம் வளைந்துசெல்லும் வடகேரளக் கிராமங்களைப்போல, இருந்திருக்கவேண்டும். அவற்றை நினைவில்கொள்வது எளியமக்களுக்கு மிக்க இன்னலைக் கொடுத்திருக்கவும் கூடும் ”…என்ன இந்த வளி மறந்துபோச்சு போல…” என்ற உபச்சர மொழி இதையே சுட்டி நிற்கிறது. வந்தவர் பங்காளி என்றால் ஆமா, இந்த வளியெல்லாம் அத்தானுக்கு இப்பம் ஏது ஞாபகம்…? போட்டும்…” என்று சொல்லப்படும். ஊர்ப்பண்ணையார் என்றால் ”… மாமனுக்கு இந்த வளியொக்கே ஞாபகம் இருக்கப்பட்டது எங்கிளுக்க பாக்கியமுல்லா…” என்று சொல்லலாம்.

நலம் விசாரிப்பதில் பல போக்குகள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்காக தொன்றுதொட்டுவரும் சொற்றொடர்களை மட்டுமே பயன்படுத்தவெண்டுமென்பது அவசியமென எனக்கு பல கசப்பான அனுபவங்களுக்குப் பின்னரே புரிந்தது. வீட்டிலே எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்று வழக்கத்துக்கு மாறாக ஒரு கேள்வியை கேட்கப்போக தங்கையன் மெம்பர் உடனே கையிலிருந்த மண்வெட்டியை வைத்து தலையிலிருந்த ஏர்க்காலை சுவரில் சாய்த்து சும்மாடுத்துணியை எடுத்து முகம் துடைத்து பிள்ள என்ன கேட்டுது?” என்று ஆவலுடன் விசாரித்தார்.

மீண்டும் இருமுறை சொல்லி அவருக்குப் புரியவைத்தபோது ஏமாற்றம்.அப்டியாக்குமா கேட்டுது? செரி.. என்ன சொல்ல, அவிய அவியளாட்டுதான் இருக்கினும்…” என்று சலிப்புடன் சொல்லி பிடியுங்கதொளியுளவுக்கு லாசரு நிக்கான்என்றார். நான் என் கையிலிருந்த பையையும் பெட்டியையும் கீழே வைத்து கண்ணாடியைக் கழற்றிவிட்டு சாணியில் ஊறிய ஏர்க்காலை பிடித்து அவர் தலையில் ஏற்றிவிட்டு தண்ணீரில்லாததனால் சுவரில் கையை தேய்த்தபின் வீடுதிரும்பும் மெல்லுணர்வுகளை முற்றாக இழந்து அசந்து மறந்து முகத்தின் வியர்வையை கையால் துடைத்துவிடக்கூடாது என்ற பிரக்ஞையை மட்டுமே சுமந்தபடி நடக்கவேண்டியிருந்தது

தருணத்திற்கேற்ப பல சொற்றொடர்கள்.போகிற போக்கில் அம்ம சும்மா இருக்காளா?” என்று கேட்டுச்செல்வது நாஞ்சில்நாட்டு மரபு. சும்மா என்பதற்கு சுகமாக என்றும் நோய்நொடி ஏதுமில்லாமல் என்று பொருளுண்டாயினும் அது சும்மா கேட்கபடுவதென்பதே மெய்ப்பொருள். உண்மையிலேயே அவர் சுகமாக இருக்க வேண்டுமென்ற ஆசை உண்டாயின் நோய் சொல்லி கேட்கவேண்டும். கிராமத்தில் எந்த கிழவியைக் கண்டாலும் ஆச்சி காலுக்கு இப்பம் கொறவுண்டா?” என்றும், பீடிப்புகை நாறும் எந்த கிழவரிடமும் ஆசானே வலிவுக்கு எறக்கமுண்டா?” என்றும் துணிந்து கேட்கலாம். எந்தப்பெண்ணிடமும் பிள்ளைக்கு இப்பம் எப்டி இருக்கு?” என்று ஆழ்ந்த அனுதாபத்துடன் கேட்கவேண்டுமென்பது மரபு. ஏதாவது ஒருபிள்ளைக்கு ஏதாவது இல்லாமலிருக்க வாய்ப்பில்லை

விசேஷ தருணத்துக்குரிய சொற்றொடர்கள் தனி. புதிதாக குழந்தை பிறந்த தாயைப்பற்றி வலுதும் செறுதும் சும்மா கெடக்கா?” என்று கேட்பதை அம்மி ஆட்டுரல் தொடர்பான கேள்வி என எண்ணுவது மடமை. துட்டிவிசாரிக்கப்போனால் அரை நிமிடம் கண்களை நோக்காமல் குனிந்து இருந்தபின் நல்லாட்டுல்லா இருந்தாவ?” என்றோ ”…இந்நேற்றும் கண்டேனே..என்றோ அந்தரத்தில் தொடங்கி வேறு எங்கோ நோக்கி முனகவேண்டும். கல்யாண வீட்டில் பெண்ணின் தகப்பனிடம் பய என்ன செய்யுதான்?” என்றும் பையனின் தகப்பனிடம் நல்லா செய்தாவளா?நம்ம பய தங்கமாக்குமே?” என்றும் கேட்டல் அழகு.

அச்சானியம்பார்ப்பதன் விதங்களை அறிந்திராவிட்டால் அடியும் கிடைக்கலாம். எங்க போறிய?” என்று கேட்டால் கேட்கப்பட்டவர்ஒருகாரியத்துக்குண்ணு போறப்ப அச்சானியமாட்டு வந்து வாய வச்சுப்போட்டானே, எளவால போறவன்..என முகம் கறுக்கப்பெறுவது வழக்கம். மாமா, தூரமா?”என்றே கேட்கவேண்டும். அப்படி கேட்கப்படுகையில் இல்ல பக்கம்தான் என்று சொல்லிஇந்த கரடி நாயருக்க எளைய பயலுக்கு தலைக்கு ஒரு கனக்கொறவு உண்டுஎன்னெங்கிய?” என்று சாயக்கடையில் பேசப்பட்டேன்.

அதே கேள்வியை புதிதாக தென்காசியிலிருந்து ராகவையர் வீட்டுக்கு கட்டிவந்த ஜெயலக்ஷ்மி ஆற்றுக்குக் குளிக்கப்போனபோது மீசை குருசப்பன் கேட்டபோது அந்தப்பெண் கதறியபடி ஓடி கோயில்மடபள்ளியில் நுழைய அவளை பின்தொடர்ந்து ஓடிய குருசப்பன் அம்மியாரே நிக்கணும்..என்னவாக்கும் காரியம்? நிக்கணும்என்று கூவி மூச்சிரைக்க கோயிலருகே வந்து அம்மியாரு நிண்ண நிப்பிலே கரைஞ்சுகிட்டு ஒரு ஓட்டம். வல்லதும் கடிச்சிட்டுண்டுண்ணாக்கும் தோணுது…” என்றான்.

செய்யும் செயலையே சொல்லிக் குசலம் கேட்கலாம். மரச்சீனிக்கு மண்கிளைப்பவரிடம் அண்ணா மரச்சீனி கெளைக்கேளா?” என்று கேட்கலாம். சாப்பிட்டுக் கொண்டிருப்பவரிடம் வலிய மொதலாளி கஞ்சி குடிக்குதா?” என்று கேட்பதும் தலைதாங்காமல் தேங்காய் எடையுடன் செல்பவரிடம் நேசமணி மெம்பர் எங்க, சந்தைக்கா? தேங்கா கொண்டு போறேளா?” என்று கேட்டு போட்டு போட்டுஎன்றும் சொல்வது சாதாரண வழக்கம்தான்.

அதே கேள்விகளை நுட்பமாக்கும் மரபும் உண்டு. கோயிலுக்குச் செல்பவரிடம்கோனாரே கும்பிடு உண்டாக்கும் ?” என்று கேட்கலாம். மீசை குருசப்பன் மீண்டும் ஜெயலக்ஷ்மியிடம் வம்புசெய்தபோது ஊர்பிரச்சினையாகி கோயிலில் போற்றி தலைமையில் விசாரணை நடந்தது. ஆற்றுக்கு துணிகளும் சோப்புமாக சென்ற சின்ன மாமியிடம் மீசை, ”அம்மிணியே குளி உண்டா?” என்று கேட்டிருக்கிறான்.

பின்னாலிருந்து யாரையும் விளிக்கலாகாது. முன்னால் செல்பவரை கூப்பிடவேண்டுமானால் அவர் காது கேட்க அவர் பேரைச் சொல்லி நம்ம வடக்குமூட்டு அச்சுமாமனை பாத்தியளா?” என்று தென்னைமரத்திடம் கேட்கவேண்டும். அவர் திரும்பிப் பாராவிட்டால் மேலும் உரக்க. வீட்டுக்குள் நுழையும்போது அங்கே வந்திருக்கும் விருந்தினரிடம் ”… அண்ணன் எப்பம் வந்தது?” என்று கேட்டு முகம் மலர்ந்தாக வேண்டும்.

அதற்கு இப்பம்தாம்லேஎன்ற பதில் அனைவரும் சொல்வதாயினும் என் கணேசன் சித்தப்பா ஒருவர் மட்டும்”..நானா நான்…” என வாட்சைப்பார்த்து செரியாட்டு எட்டு இருபத்தஞ்சுக்கு அங்கிண வண்டி கேறினேண்டேதேரிமுக்குல நிண்ணப்பம் மணி ஒம்பது எட்டு. இங்கிண வந்து குருவிக்காட்டுல எறங்கும்பம் பத்து அஞ்சுஅஞ்சு நிமிசம் நடந்தா வீடுவந்து கேறும்போ மேல உள்ள கிளாக்க பாத்தேன். பத்து பத்து. அது நம்ம வாச்சைக்காட்டிலும் அஞ்சு நிமிசம் குறவாக்கும். நம்ம நேரம் ஸ்ரீலங்கன் நேரமில்லா?” என விரிவாக பதில் சொல்வார்

பழங்காலத்தில் வீடுகளுக்குள் இருட்டாக இருந்திருக்கலாம். ஆகவே அரைநொடி கழிந்து ஆளை அடையாளம் காணும் வழக்கம் இருந்திருக்கிறது. அல்லது ஏதாவது சாளேசுவரம் தாத்தாக்கள் உண்டாக்கிய சொல்லாட்சியாக இருக்கலாம். ஒருவரைக் கண்டதுமே ஹ..இதாரு நம்ம குமரேசனா? லே, நீ கேறி பருத்துப்போயிட்டியேலே? நல்ல தீனி இல்லா?” என்று நலம் விசாரிப்பது பரவலாக உள்ள வழக்கம். இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் உள்ளூர் பெரிசுகள் இளம்பெண்களிடம் குட்டீ நீ நீலாண்டன் மவ வள்ளியில்லா? நீ ஆளு செந்துளுவன் வாழமாதிரில்லா கொலைச்சுப்போயிட்டே கொள்ளாமேநீலாண்டன் தரம் வல்லதும் பாக்கானா?” என்ற கேள்வியுடன் ஆற அமர கூர்ந்து பார்த்து சவத்துக்க கண்ணில ஆசிட்ட ஊத்தணும்என்று பெண்ணால் முணுமுணுக்கப்படுவார்கள்.

மிகப்பெரியவர்களிடம் நலம் விசாரிப்பதும் மரியாதைக்குறைவே.அவர்களிடம் மறுக்க முடியாத தெளிவான உண்மைகளை மட்டுமே சொல்ல வேண்டும். வெற்றிலை போட்டுக்கொண்டு ஈஸி சேரில் அமர்ந்திருக்கும் அப்பாவின் அம்மாவனிடம் மெல்லச்சென்று அவர் பார்வையில் படும்படி நின்று ஈனஸ்வரத்தில் …”வாறத பாத்தேன்…” என்றோ வந்ததாட்டு சொன்னாவஎன்றோ சொல்வதே முறையாகும். அவரும் பாக்கை அழுத்தமென்று தரையைப்பார்த்து ம்ம்ம்என்பார். மேலும் சில கணங்கள் அவர் மெல்வதை நோக்கி விட்டு மெல்ல பின்வாங்கினால் உரிய மரியாதையை செலுத்திவிட்டதாக ஆகும்.

சாப்பிட்டாயிற்றா என்ற கேள்விக்கு எங்கும் எப்போதும் மதிப்புண்டு. சாப்பிடுவது தொல்தமிழர்தம் பண்பாட்டில் அரியதோர் செயல்பாடாக இருந்துவந்திருப்பதை நாம் இதனூடாக அறியலாம். வேணாட்டுப் பகுதிகளில் சோறு முன்பெல்லாம் கிடையாது. ஆகவே உணவே கஞ்சி என்றுதான் சொல்லப்பட்டது.ஐம்பதுவருடம் முன்புள்ள கல்யாண பத்திரிகையில் தாலி சார்த்து கழிஞ்š கஞ்ஞி குடியும் உண்டாயிரிக்கும்என்று அச்சடித்து நான் கண்டிருக்கிறேன். ஆகவே அம்மாச்சோ கஞ்சிகுடிச்சாச்சா?” என்று கேட்பது இயல்பே. காலையாயின் பளஞ்சி குடி முடிஞ்சா?” எனலாம்.

வீட்டுக்கு எந்நேரம் யார் வந்தாலும் இரியுங்க..இம்பிடு கஞ்சி குடியுங்கஎன்று சொல்லலாம். அவரும் முகம் மலர்ந்து இபப்ம்தான் குடிச்சேன்வயறு கல்லாட்டுல்லா இருக்கு…”என்பார்கள். சாப்பிடக் கொடுக்காவிட்டால் உபச்சாரமாகாது என்பது பண்பாடாகையால் ஒரு கிளாஸ் கருப்படிக் காபியாகினும் குடித்தேயாகவேண்டும். வெயிலானால் கருப்பட்டியும் புளியும் கலந்த பானகம் அல்லது மோர். தேனும் நீரும் கலந்த சர்வத்’. ஏதாவது சாப்பிடாமல் படியிறங்கினால் தாயளி அவனையும் கொண்ணு நானும் சாவேன்..என்னண்ணு நெனைக்கான்? கைநனைச்சாம படி எறங்கிருவானா அவன்?” என்று உபச்சாரம் தலைகீழாகும்.

இக்காரணத்தால் கல்யாணம்விளிக்கப் போவதற்கு கடுமையான வயிற்றுத்திறன் உடையவர்களையே அனுப்புவது வழக்கம். தங்கை கல்யாணத்துக்கு நல்ல எளம் வயசுதானே..போகட்டுஎன்று என்னையும் கிளப்பி விட்டாள் மாமி. அம்மா கண்ணீஇர் மல்க அவனுக்கு அதினொநும் கழிவில்ல நாத்தூனேஎன்று சொன்னதை மாமி மதிக்கவில்லை. களம் காணப்போகும் என்னை அம்மா அருகே அழைத்து நெற்றியில் விபூதி போட்டு பெருமூச்சுவிட்டு அனுப்பி வைத்தாள். பின்பக்கம் என் குடும்பமே சோகமாக பார்த்து நின்றது. நானும் அப்பு அண்ணாவும் கிளம்பினோம்

முதல்வீட்டில் எருமைப்பால் கொழுக்க விட்ட டீயும் சுட்ட நேந்திரம் பழமும்.. இரண்டாம் வீட்டில் காப்பியும் இரண்டு இட்லியும். மூன்றாம் வீட்டில் கருப்பட்டிகாப்பியுடன் உப்புக்கண்டம் மரச்சினிக்கிழங்கு. ஐந்தாம் வீட்டில் அதற்குள் உலர்ந்து போய் மேல்சருமம் உருவாகிவிட்டிருந்த இட்லி. மீண்டும் கருப்பட்டிக் காப்பி. என் வயிறு பெருமூச்சுவிட்டது. குலுங்கியது. சீறியது. வெடித்தது. வழியில் நான் பாய்ந்தோடி அப்பு பெருவட்டனின் தோட்டத்துக்குள் ஏறி அது அவர் வீட்டுப்பின்பக்கமென அறிந்து தயங்க பெருவட்டத்தி கொள்ளாம்,கல்யாணம் விளிச்ச அடுக்களை வளியாட்டா வாறது? வாருங்க கேறி இருங்க…” என்று கொண்டுசென்று அமரச்செய்து கதலிப்பழமும் மீண்டும் கருப்பட்டிக் காப்பியும் தந்தாள். பெருவட்டர் கதலிப்பழம் நல்லதாக்கும். மலச்சிக்கலுக்கு சொயம்பு மருந்துல்லா?” என்றார்.

கலங்கிக் காலியாகி எழுந்து கைத்தாங்கலாக நாணு ஆசாரி வீட்டுக்குப் போய் மீண்டும் கருப்பட்டிக் காப்பியும் சீனிக்கிழங்கும் சாப்பிட்டேன். சுப்ரமணியன் ஆசாரி வீட்டில் மீண்டும் கருப்பட்டிக் காப்பி சாப்பிட்டு அரைப்பிரக்ஞையில் படியிறங்கி கோனார் வீட்டில் தோசையும் கருப்பட்டிக் காப்பியும் சாப்பிட்டு நேசமணி மெம்பர் வீட்டுக்குள் ஏறியபோது எசிலியம்மைதளர்ச்சியாக்கும் இல்லியா? பிள்ளய்க்கு வெயிலில எறங்கி நடக்குத சீலமில்லல்லா? புஸ்தகமும் கையுமாட்டு நெழலில இருக்கப்பட்ட ஆளாக்குமேஇருங்க ஒருவாயி கருப்பட்டி காப்பி இட்டுதாறேன். ஷீணம் மாறும்…”என்றாள். மாலையில் நான் எப்போது எப்படி வந்தேன் எங்கே படுத்தேன் என தெரியவில்லை. காலையில் எழுந்தபோது உலகமே எடையில்லாமல் என்னைச்சுறி மிதந்துகொண்டிருந்தது.

கல்யாணத்தில் நானும் அண்ணாவும் வாசலில் நின்று வந்தாரை வரவேற்றோம்.வரணும் வரணும்இப்பமா வாறதுஅண்ணனா வாங்கஎன்று நான் காலை ஏழுமணி முதல் நள்ளிரவு வரை சொல்லிக் கொண்டே இருந்தேன். அதன் பின் யாரைப்பார்த்தாலும் என் வாய் அதுவே அப்படி சொல்ல ஆரம்பித்து என்னலே மொனங்குதே? சவம் தலைக்கும் வெளியில்லமப்போச்சேஎன்று மாமியால் மண்டையில் குட்டப்பெற்றேன். அதன் பின்னர் நானே என் முழுச்சக்தியாலும் என் நாக்கை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து அச்சொற்களை உள்ளே அனுப்ப பழகினேன்.

ஆனால் மாலைவெயில் நீளும் போது எங்களூர்ப்பக்கம் யாரும் யாரையும் ஒரு குறிப்ப்பிட்ட முகமன் சொற்றொடரால் எதிர்கொள்ளலாம். சொன்னவரும் கேட்பவரும் தூய ஆன்மீக பரவசநிலையில் இருக்கும் தருணம் அது . அம்மாச்சா மீனுண்டா?” ”நாடாத்தியே என்னவாக்கும் மீனு?” — எப்படியும் கேட்கலாம். ஓ பிள்ள இண்ணு குதிப்பாக்குமே நாலணைக்கு எட்டு” ” வாளையில்லா கெடக்குமார்த்தாண்டவர்மா வாளுமாதிரி ரெண்டுவாளை எட்டணா…” ”சூரையாக்கும் கொச்சேமான். பிதலீஸ¤ அந்தா கொடவண்டியும் கோப்புமாட்டு இத்தா பெரிய சூரை ஒண்ணு கொண்டுவந்து போட்டு அறுக்கான்சிரிக்குது…” என்ற மனம் நிறைந்த பதில்கள் எழும்.

முகமன் பேச்சுகளின் முக்கியமான சிக்கலே அக்கேள்விக்கு நாம் ஏற்கனவே நன்கு தெரிந்த வழக்கமான பதிலை மட்டுமே சொல்ல முடியும் என்பதுதான்.