இலக்கியப் படைப்புக்கள் மக்களின் உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலித்துக் காட்டக் கூடிய கண்ணாடியாகும். மக்களின் வாழ்வியல் மரபுகளை இனங்கண்டு அறிந்துணர்த்துவது இலக்கியங்களின் பண்பாகும். அத்தகைய வாழ்வியல் மரபுகளில் ஒன்றான நிமித்தங்களையும் அவற்றின் பால் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகளையும் இலக்கியங்களின் வழியே புலப்படுத்தப்பட்டிருப்பதினை நாம் அறியலாம். காப்பிய வகைகளான சிலப்பதிகாரத்திலும் சிவகசிந்தாமணி, இராமாயணத்திலும் மட்டுமின்றி நாட்டுப்புற இலக்கியங்களில் ஒன்றான கதைப்பாடல்களான கோவலன் கதையிலும், நல்லதங்காள், முத்துபட்டன் கான்சாகிபு சண்டை மற்றும் பலவேசஞ்சேரிவைக்காறர் கதைப்பாடல்களிலும் பயின்று வந்துள்ள நிமித்தங்களைப் பற்றி ஆராயப்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நிமித்தங்கள்:-
நிமித்தம் என்பது வாழ்வில் பின்நிகழவிருக்கும் நன்மை தீமைகளைச் சில நிகழ்ச்சியின் வாயிலாக உணர்த்துவதாகும். நிமித்தங்கள் எதிர்கால நிகழ்ச்சிகளை முன் கூட்டியே அறிவிக்கும் அறிகுறியாக மக்களால் தொன்றுதெட்டு இன்றுவரை நம்பப்பட்டு வருகின்றன. இவை பெரும்பாலும் அச்சத்தின் அடிப்படையில் தோன்றியிருக்கலாம் என்று அறிஞர்கள் கூறுவர். மனிதன்தான் செய்ய நினைக்கும் செயலின் பால் எதிர்பார்க்கும் முடிவுகளுக்கும் இயற்கையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் ஒருவித தொடர்பு இருப்பதாக நினைக்கத் தொடங்கிய காலகட்டத்தில் மனித வாழ்வில் நிமித்தங்கள் சிறப்பிடம் பெற்றிருக்கக் கூடும் எனலாம். பின்னர் காலபோக்கில் சமுதாயத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளோடு அவ்வியற்கை நிகழ்வுகள் இயைந்து நோக்கப்பட்ட நிலையில் அவை நிமித்தங்களாக மாறியிருக்க வேண்டும் என விளக்கம் கொள்ளலாம்.
சொல்லும் பொருளும்:-
நிமித்தம் என்ற சொல்லானது தொல்காப்பியத்தில் காரணம், நிமித்தம், கூட்டம் ஆகிய பொருட்களில் பயின்று வந்துள்ளது. சங்க இலக்கியத்தில் இச்சொல்லாட்சி வழங்கப்படவில்லை. ஆனால் புள் என்ற சொல் நிமித்தம் என்ற பொருளில் பலவிடங்களில் சங்க இலக்கியத்தில் பயிற்சி பெற்றிருக்கின்றது. இதற்கு காரணம் புள்ளே பெரும்பான்மையும் நிமித்தத்திற்கு உரிய பொருளாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். இதற்கேற்பவே பறவை புள் நிமித்தமாக தொல்காப்பியத்தில் சுட்டப்பட்டுள்ளது (தொல் பொருள் 88:16-17)
சிலப்பதிகாரத்தில் நிமித்தம் என்ற தற்காலப் பொருளில் இச்சொல் பயின்று வந்துள்ளது (சில 16-165-169) நிமித்தம் என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பேரகராதி (1) காரணம் (2) நிமித்தம் (3) சகுனம் (4) அடையாளம் (5) பொருட்டு என்ற ஐந்து பொருட்களைச் சுட்டுகின்றது (Tamil Lexicon; Vol.IV.part1p.2254) நிமித்தம் என்ற சொல்லானது பல்பொருள் குறிக்கும் சொல்லாக வந்துள்ளது. இன்றைய பொருளிலும் அந்தச் சொல் பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்பது சிறப்பாக அறியத்தக்கது. இவ்வாறு நிமித்தம் என்பது பலபொருள் குறித்த ஒரு சொல்லாய் அமைந்து நம்பிக்கை என்ற சொல்லுக்குள் அடக்கப்பெற்றது ஒரளவு பிற்காலத்தில்தான் என்பது, நாட்டுப்புற நம்பிக்கைகள் என்ற பிரிவில் பல்வேறு இயற்கை நிகழ்வுகளை நல்லவை கெட்டவை என பிரிவினை செய்து விளக்குவதின் மூலம் தெரியவருகிறது. பெரும்பாலும் நாட்டுப்புறக் கதைப்பாடல்களில் நிமித்தம் என்பது துர்க்குறி சகுனம் போன்ற சொற்களின் வாயிலாக உணர்த்தப்படுகிறது.
நிமித்தங்களின் பண்புகள்:-
இலக்கியங்களில் பெரும்பாலும் கனவுகளில் இயற்கைக்கு முரண்பாடான அச்சந்தரக்கூடிய செயல்நிகழ்வுகளிலும் இயற்கைத் தன்மைக்கு மாறுபட்ட நிகழ்ச்சி சூழ்நிலை வயப்பட்ட பொருட்களின் செயல்களிலும் நிமித்தங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆனால் நாட்டுப்புற இலக்கியங்களில் கனவுகளில் மட்டுமின்றி இயற்கையை ஒட்டி நடைபெறும் நிகழ்ச்சிகள் மூலமாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
மகளிர்க்குக் கண், புருவம், நெற்றி, முதலியன இடம் துடித்தல் வரும் நன்மையை உணர்த்துவன ஆகும் என்பதினை இலக்கியங்கள் சுட்டுகின்றன. சிலம்பில் இந்திர விழா எடுத்த காதையில் விழா நாளன்று கண்ணகிக்கு இடக்கண்ணும் மாதவிக்கு வலக்கண்ணும் துடித்தமையைக் கொண்டும் இராமாயணத்தில் சிதைக்கு இடம் துடித்ததினால் ஏற்படப்போகும் நன்மையைப் பாடல்வரிகள் உணர்த்துகின்றது. சிதைக்கு நன்மை ஏற்படப்போகிறது என்பதினைப் பொன்வண்டு ஒன்று செவியினிடத்தில் இன்னிசையைப் பாடிச் சென்றதன் வாயிலாகவும் சிங்கம் கூட்டத்தோடு வந்து சிதையை அழைத்துச் செல்வது போல் கண்ட கனவின் வாயிலாகவும் திரிசடை உணர்த்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சிலம்பில் கோவலனின் கனவில் கட்டிய ஆடையை பறிக்கொடுத்தல் மற்றும் கோட்டுமா உண்தல் ஆகிய நிகழ்வல்லாத செயல்களும் (சில.15:97-98) கோப்பெருந்தேவியின் கனவில் இயற்கைக்கு ஒவ்வாத செயல் நிகழ்வுகளும் (சில 20-1-7) தீ நிமித்த குறிகளாக சுட்டப்பட்டுள்ளன. இராமாயணத்தில், திரிசடையின் கனவில் தனது பத்துத்தலைகளிலும் இராவணன் எண்ணெய்த்தேய்த்துக் கொண்டு கழுதையும் பேயும் பூட்டியத் தேரின் மீதேறி இரத்த ஆடையுடன் தென் திசை நோக்கி செல்வது போல் கண்ட நிகழ்ச்சிகள் தீ நிமித்தக்குறியாக சொல்லப்பட்டுள்ளது.
நாட்டுப்புற கதைப்பாடல்களில் உணர்த்தப்படும் நிமித்தங்களை அவற்றின் பண்பின் அடிப்படையில் நான்கு விதமாகக் கொள்ளலாம்.
1. கனவில் நேரிடையாகத் தெய்வம் வந்து உரைத்தல் தன் நிமித்தக் குறியீடாக அமைதல்.
2. கனவில் மட்டுமின்றி நேரடியாகத் தோன்றும் சில இயற்கை நிகழ்வுகள் தீ நிமித்தக் குறியீடாகக் கொள்ளுதல்.
3. கனவில் இன்றி வாழ்விலும் நேரிடையாக நடைபெறும் சில நிகழ்வுகள் நல்ல சகுனமாக அமைதல்.
4. சோதிடர் கூற்றினைப் பின்னர் நிகழக்கூடிய நிகழ்வுகளின் குறியீடாக ஏற்றுக் கொள்ளல்.
ஐவர் ராசா கதைப்பாடலில், அரசி மாலையம்மையின் தவத்திற்கு இரங்கி வைகைக்கரையம்மை மனங்களித்து கணபதி உருவத்தில் தீருநீறும், மாலையும் எலுமிச்சம் பழமும் அளித்து பிள்ளைப் பேறுண்டு என்று சொல்வதாக அவள் கனவில் உரைத்ததை மன்னரிடம் உரைத்திடும் நிகழ்ச்சி வாயிலாகக் கனவில் தெய்வம் நேரில் தோன்றி உரைத்தல் நன்நிமித்தக் குறியீடாக அமைந்திருப்பதைக்
கொத்துமாலை தீர்த்தம் திருநீறுடன்
கொடுத்த எலுமிச்சம் பழமும் கையில்
புதல்வன் அரசாள விதியுண்டென (ப.40.61-74)
என்ற வரிகள் மூலம் அறிய முடிகிறது.
முத்துப்பட்டன் கதைப்பாடலில், பட்டனின் கனவிலும், அவனது மனைவியர் கனவிலும்
கருமயிலைக்களை கிடைவிட்டோடி கசத்தில் விழுந்திறக்கக் கண்டானாம்
கையில் கட்டிய காப்பநூல் தன்னை கறையானரித்திடக் கண்டானாம்" என்ற வரிகளும்
"பட்டிநாய் ஊளையிட்டு சுவாமிமேல் புரண்டழுது
கொள்ளிவாய்ப் பேய்கள் வந்து பந்தம் கொளுத்திடக் கண்டேன்
தாலிமடை முறிந்து தெருவினில் தானே விழுந்திடவும் கண்டேன்"
போன்ற வரிகள், அவன் பின்னால் வெட்டுப்பட்டு இறக்கப் போவதை உணர்த்துகின்றன.
கோவலன் கதைப்பாடல், கோவலன் வீடுவிட்டு வரும்போது நடந்த நிகழ்ச்சிகள் அவனுக்கு ஏற்படப்போகும் தீமையினை உணர்த்தியதினை,
அப்போ பல்லி பலபலவெனும் பனைமரத்திலாந்தை அலறும்
குட்டியிட்ட கறும்பூனை குறுக்காக வந்ததங்கே
அந்த சகுனம் தப்பி அப்பாலே வாராரே
எரிமுட்டை தலைமொட்டை எதிரில் வர (கோ.க.ப.59)
என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.
நல்லதங்காள் கதைப்பாடலிலும் நல்லதங்காள் கணவன் சொல்லைக் கேளாமல் தாய் வீட்டுக்குச் செல்லுகையில் அவளுக்கு எதிர்ப்பட்ட நிகழ்ச்சிகள் தீ நிமித்தக்குறிகளாக கீழ்க்கண்ட வரிகளின் வாயிலாக உரைக்கப்பட்டுள்ளன.
கன்னிகழியாப் பெண் கையில் நெருப்பெடுத்தாள்
வண்ணான் வெளுத்த புடவைகண்டாள்
சாரைகுறுக்காச்சு சர்ப்ந்தடையாச்சு
பூனைகுறுக்காச்சு புதுப்பானை முன்னாச்சு (ந.த.க.12)
கான்சாகிபு கதைப்பாடலில், மாஷா இரவிகுல மறவர் ஆட்சி புரிவார்கள் என்றால் பல்லி இடது புறம் சொல்லவேண்டும் என்று மீனாட்சி அம்மனை வேண்ட, அவ்விதம் நடந்தது குறித்து மனமகிழ்ச்சி அடைவதன் மூலமாகப் பல்லி இடதுபுறம் கத்தினால் நன்மை ஏற்படும் என்று தெரியவருகிறது.
தென்புறத்தில் செல்லாதபடிக்கு
திருவருப்பால் இடதுபக்கங் கெவுளியது சொல்ல
என்ற பாடல் வரிகள் அதனை உணர்த்தியது.
பலவேசஞ் சேர்வைக்காறர் கதைப்பாடலிலும்,
கூகைகுறைவே பளுதலைச்சி குசத்தியெதிர் வந்து தோன்றுவானாம்
அந்ததடைகண்டு இருபேரும் வேறுமனை புகுந்தனர் அந்நேரம்
போன்ற வரிகள் நேரிடையாக ஏற்பட்ட சகுனத்தடையினைப் புலப்படுத்துகின்றன.
அட்டமத்து சனிதனிலே அவனைச் செவ்வாய் பார்த்திருக்க
கருமத்துக்கு உதவாது கட்டுடனே நீர்கேளும்
என்ற வரிகள் பலவேசஞ் சேர்வைக்காரர் இளம் வயதில் மடிவான் என்பதினை உரைப்பதாக அமைந்துள்ளது.
இக்கட்டுரையின் வாயிலாக அறியப்படும் செய்திகள்:-
4. நிமித்தக் குறியீடுகள், மக்களின் வாழ்க்கையில் நல்ல பலன்களையோ அல்லது தீய பலன்களையோ உறுதியாக ஏற்படுத்தியுள்ளமையால் நம்பிக்கையில் வலிமை கொண்டவர்களாகவும் மக்கள் விளங்குவதால், அலைகள் மக்களின் வாழ்வியலோடு ஒன்றி விட்ட நிலையினை இன்றும் நம்மால் அறியமுடிகிறது.
இவ்வாறு நிமித்தக் கூறுகள் மக்களின் மனபோக்கிற்கு ஏற்பவும் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்பவும் மாறுபடும் தன்மையுடையனவாக விளங்குகின்றன. மக்கள் வாழ்க்கையில் எதிர் கொண்ட நிகழ்ச்சிகளின் செயல்பாட்டின் அனுபவங்களைப் பிரதிபலிக்கக் கூடியனவாக நம்பிக்கைகள் இன்றும் மக்களின் வாழ்வில் இடம் பெற்றிருக்கின்றன.