Pages

Thursday, 15 March 2012

நாட்டுப்புற பழக்கவழக்கங்கள்



மனிதனிடம் அமைந்த இயல்பான நடத்தையே பழக்கமாகிறது. அது காலப்போக்கில் வழக்கமாகவே மாறிவிடுகிறது. எனவே பழக்க வழக்கம் என்பது மனிதனாலும், சமுதாயத்தாலும் உருவாக்கப்படுவதேயாகும்.

மனிதனின் பழக்க வழக்கங்கள் அவன் பிறந்த மண், சாதி, சமயம் ஆகியவற்றிற்கேற்ப மாறுபடுகின்றன. இப்பழக்க வழக்கங்கள் மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்புவரை பின்னிப் பிணைந்துள்ளன. இவை வாழ்வு தொடர்பானவை. சாவு தொடர்பானவை. பிற பழக்கவழக்கங்கள் என மூன்று வகையாகப் பகுத்து ஆராயப்படுகின்றன.

வாழ்வு தொடர்பான பழக்க வழக்கங்கள்

பிறப்பு, பூப்பு திருமணம் தொடர்பானவையாகும்.

பிறப்பு தொடர்பானவை

இபபழக்க வழக்கங்கள் குழந்தை பிறப்பதற்குமுன், குழந்தை பிறந்ததற்குப்பின் என இருவகையாகப் பகுக்கப்படுகின்றன.

குழந்தை பிறப்பதற்கு முன்

குழந்தைச் செல்வமே பெருஞ்செல்வம் என்று நினைப்பதால் தான்

"குழல்இனிது யாழ்இனிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்."

என்று வள்ளுவர் கூடக் கூறியுள்ளார். ஒரு பெண் திருமணத்திற்குபின் தாய்மைப் பேற்றை விரும்புகின்றாள். அதற்காக அரச மரத்தைச் சுற்றுவதும் பாம்புப் புற்றை வணங்குவதும் மரத்தில் தொட்டில் கட்டுவதும், வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதுமாகப் பெண்கள் மேற்கொள்ளும் பழக்க வழக்கமாக உள்ளன. இவற்றை

"வேம்புக்கு நீர் வார்த்து
வெகுநாள் தவமிருந்து
அரசுக்கு நீர் வார்த்து
அந்தணர்க்குத் தானமிட்டு
பெரியோர் தவத்தாலே
பேர்விளங்க வந்தவளே
என்ற பாடல் மூலம் அறியலாம்.

குழந்தை பிறந்த பின்

குழந்தை பிறந்த பின் குழந்தைக்கு வாயில் சர்க்கரை நீர் ஊட்டும் பழக்கம் இன்றும் உள்ளது. இதனைச் "சேனை வைத்தல்" "செவ்வெண்ணை வைத்தல்" என்று கூறுவர். குழந்தைக்குத் தொட்டில் கட்டுவதும், பெயர் சூட்டுவதும் அவர்களிடம் காணப்படும் வழக்கங்களாகும்.

"மாமன் மடியிலே மாலைபோட்டுக் குந்தவச்சி
கோடி வுடுத்திக் காதுகுத்துமென்பார்
அற்றி வழங்குவார்
அருமை மாமன் காப்பரசி
பிடித்து வழங்குவார்
பெரியமாமன் காப்பரசி"

என்று காதுகுத்தும்போது மாமன் மடியிலமர்வதும், மாமன் சிர்வரிசை வழங்குவதையும், காப்பரிசி வழங்குதையும் மேற்படி பாடல் குறிப்பிடுகின்றது.

பூப்பு தொடர்பான பழக்க வழக்கங்கள்

பெண்கள் பருவமடைதலைப் பூப்படைதல், சமைதல், புஷ்பவதியாதல், திரளுதல், ஆளாதல், வயதுக்கு வருதல் எனப் பலவகையாக அழைப்பர். பூப்படைந்த பெண்ணைத் தனியே இருக்கச் செய்வர். ஏழு அல்லது ஒன்பது நாள் நீராடியபின் வீட்டிற்கு அழைப்பர்.

பூப்பெய்த உடனே மணம் செய்து கொடுத்துவிட வேண்டும். நாள் கடத்தக் கூடாது என்ற வழக்கத்தினையும் கீழ்வரும் பாடல் உணர்த்துகின்றது.

"புண்ணியராம் ஆத்திலே
பெண் திரண்டா சுபதினம்
தங்கத்தினால் அலைகொண்டு
தாய்மாமன் வீட்டுக்கே
போய் வாடா ஏகாலி"

திருமணம் தொடர்பான பழக்க வழக்கங்கள்

திருமணம் தொடர்பான் பழக்க வழக்கங்களைத் திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப்பின் எனப் பகுத்து வழக்காளப்படுகின்றன.

திருமணத்திற்கு முன்
1.
பொருத்தம் பார்த்தல்
2.
பெண் பார்த்தல்
3.
பரிசம் போடுதல்
4.
தாலி செய்தல்
5.
முகூர்த்தக்கால் நடுதல்
என்பன திருமணத்திற்கு முன்பு வழக்கமாகச் செய்யப்படுகின்றன.

திருமணத்தன்று
1.
காப்பு கட்டுதல்
6.
திருமணச் சிதனம்
7.
வரிசை செய்தல்
போன்ற வழக்கங்கள் திருமணத்தன்று செய்யப்படும் பழக்க வழக்கங்களாகும்.

திருமணத்திற்குப் பின்

திருமண நாளன்றோ அல்லது மறுநாளோ மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்வர். இதனை "மறுவீடு செல்லல்" என்று கூறுவர். வீட்டில் மணமகளை வலது காலை முதலில் வைத்து உள்ளே அழைப்பதும் இனிப்பு முதல் அனைத்து அறுசுவை உணவுகளையும் கொடுத்து உபசரிப்பதும் உண்டு. இரண்டு முறை அல்லது மூன்று முறை கூட மறுவீடு அழைப்பர்.

இறப்பு தொடர்பான பழக்க வழக்கங்கள்

ஒருவர் இறக்கின்ற நிலை, இறந்த அன்று இறப்பிற்கு பின் என்று மூன்று நிலைகளில் இறப்பு தொடர்பான பழக்க வழக்கங்களைப் பகுக்கலாம்.

இறக்கின்ற நிலை

ஒருவர் இறக்கின்ற நிலையில் நாட்டு மருத்துவர்களை அழைத்து நாடி பார்ப்பதையும், பால் ஊற்றுவதையும் துளசி நீரை ஊற்றுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இறந்த அன்று

இறந்தவுடன் கை, கால், பெருவிரல்களை வெள்ளைத் துணியால் இணைத்துக் கட்டுவதும், "வாய்க்கட்டு கட்டுதல்" என்று கூறுவர். தலைமாட்டில் தேங்காய் உடைத்தும் பத்தி பற்றவைத்தும் விளக்கேற்றியும் வைப்பர்.

உறவினர், பெரியவர்கள் ஒன்று கூடி இறந்தவர் உறவினர்க்குச் செய்தி அனுப்புவர். இதனை "ஓலை அனுப்புதல்" என்று கூறுவர். சடங்கு செய்து பிணத்தைக் குளிப்பாட்டி கோடி போட்டு, உறவினர் வாய்க்கரிசி போடுவது வழக்கம்.

பாடையை அலங்கரித்துக் எடுத்துச் சென்று சுடுகாட்டில் சில சடங்குகள் செய்து கொள்ளி வைப்பது வழக்கம்.

"வரிகை மக கையறஞ்சா
வந்ந சனம் கையறையும்
பட்டுத்துணி மாரடிக்க
மார மக வேணுமின்னு
பாங்கான பாடை கட்டி
கொள்ளியோ கொள்ளி
தலைமகன் கொள்ளி"
என்று தாய் இறந்திருந்தால் தலை மகனும், தந்தை இறந்திருந்தால் இளையமகனும் கொள்ளி வைப்பர். இவை ஒருவர் இறந்த அன்று செய்யும் வழக்கங்களாகும்.

இறப்பிற்குப் பின்

இறந்த உடலைச் சுடுகாட்டில் எரிக்கவோ, புதைக்கவோ செய்த பின் சில பழக்க வழக்கங்களை மேற்கொள்வார்கள்,
1.
பால் ஊற்றுதல்
2.
தாலி கழற்றுதல்
3.
பொட்டழித்தல்
4.
கருமாதி போன்ற பழக்கங்கள் ஆணின் மனைவிக்குச் செய்யப்படும் வழக்கமாகும்.

நம் சமுதாயத்தில் விதவை இழிவாகவும், அமங்கலமாகவும் கருதும் போக்கு காணப்படுகிறது. பிறகு இறந்தவருக்கு ஒவ்வோர் ஆண்டும் உயிர்விட்ட அன்று திவசம் என்றும் நினைவுநாள் என்றும் வழங்கப்படுகிறது.

பிற பழக்க வழக்கங்கள்

1.சோதிடம் பார்க்கும் வழக்கம்
2.
பூக்கட்டிப் பார்த்தல்
3.
மது அருந்துதல்
4.
சகுனம் பார்த்தல்
5.
சத்தியம் செய்தல்

போன்ற பிற வழக்கங்களும் நாட்டுப்புற மக்களிடையே நிலவி வருகின்றன. இவை காலத்தாலும், அறிவியல் வளர்ச்சியாலும் அழிக்க வல்லது.

நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கம் நம் நாட்டின் தொன்மையையும், மனித உணர்வுகளை மதிக்கும் செயல்களையும், ஆதி மனித வரலாற்றையும் பறைசாற்றும் பொக்கிஷமாக விளங்குகிறது என்பதில் வியப்பில்லை.