Pages

Thursday, 15 March 2012

பழங்குடியினர்


இக்கேள்விக்கான பதிலை, மனிதன் யார் என்பற்கான பதிலில் இருந்தே தேடவேண்டியுள்ளது. விலங்குகளில் ஒரு பிரிவாய் வளர்ந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் பரிணாமம் கொண்டவனே ஆதிமனிதன். கொல் அல்லது கொல்லப்படுவாய் என்பதே அவனை இயக்கும் விதியாயிருந்து விரட்டியது. வேட்டை அவனது உணவிற்கும் தற்காப்பிற்குமான நடவடிக்கையாய் அமைந்தது. விலங்குகளை வேட்டையாடி இரையாக்கிக் கொண்ட அவனே பிற விலங்குகளுக்கு இரையாகி மாண்டு போவதும் இயல்பாயிருந்தது. நாங்களெல்லாம் ஆதியிலிருந்தே சுத்த சைவம் என்று பீற்றிக் கொள்பவர்கள் அப்போது யாருமில்லை. வேட்டை கிடைக்காதபோது மட்டும் காட்டில் கிடைத்த காய், கனிகளையும் கிழங்குகளையும் தின்று ஜீவனம் கழிந்தது. தொடர்ந்து வேட்டையாடுவதில் கிடைத்த பயிற்சியும் தேர்ச்சியும் விலங்குகளை உயிரோடு பிடிப்பதை சாத்தியப்படுத்தியது. தேவைப்படுகையில் அடித்து உண்பதற்காக அவற்றுக்கு தீனி கொடுத்து வளர்க்க வேண்டியிருந்தது ( சாமிக்கு கிடா வளர்த்து வெட்டுவது போல). இதற்காக தான் பிடித்து வைத்திருக்கும் விலங்குகள் அவற்றின் கன்றுகாலிகளோடு புதிய காடுகளையும் மேய்ச்சல் நிலங்களையும் தேடி அங்குமிங்கும் அலைந்தவன் பட்டறிவிலிருந்து வேளாண்மையை கண்டடைந்தான். இயற்கையிலிருந்து கிடைப்பவற்றை தனது உணவாக சேகரித்து உட்கொள்ளும் நிலையிலிருந்து மேலேறி, உணவை உற்பத்தி செய்பவனாக மாறிவிட்டான்.
மாமிசத்தோடு தானியங்களும் பயறுகளும் பால் பொருட்களும் இப்போது அவனது உணவுப்பட்டியலுக்குள் வந்தன. உணவாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த விலங்குகளை வேளாண்மைக்கு உதவும் கால்நடைச் செல்வங்களாக பார்க்கத் தொடங்கினான். நீர்வளம் கொழித்த ஆற்றுப்படுகைகளில் காடுகளை அழித்து வேளாண்மை நிலைபெறத் தொடங்கி ஊர்களும் நகரங்களும் உருவாகின. வேட்டையாடத் தேவையாயிருந்த கூட்டுபலம் இப்போது தேவைப்படவில்லை. குழுக்களாக இயங்கியவர்கள் குடும்பங்களாக சிதைந்ததும் கால்நடைகளும் நிலமும் தனிச்சொத்தாகியதும் சமூகத்தை பரிபாலிக்கும் அரசின் ஆரம்பக்கூறுகள் தோன்றியதெல்லாம் இக்காலகட்டத்தில்தான். இந்த மாற்றங்களெல்லாம் அட்டவணை போட்டு உலகம் முழுவதும் ஒரேநேரத்தில் நடந்தேறியதாக நினைத்துக் கொள்ளவேண்டியதில்லை. பொதுவானதும் குறிப்பானதுமான பல்வேறு வேற்றுமை ஒற்றுமை அம்சங்களோடுதான் நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
வேட்டையில் தொடங்கி இன்றைய நவீன தொழிலுற்பத்தி முறைக்கு வந்து சேர்ந்த நெடிய பயணத்தில் சமூகத்தின் பல்வேறு குழுக்கள், வெவ்வேறு காலகட்டங்களில் பின்தங்கிவிட்டன. நிறுத்திக் கொள்ளமுடியாத தொடரோட்டம் போன்ற மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்தங்கிவிட்ட அச்சமூகக்குழுக்கள், ஆதியில் மனிதகுலம் கைக்கொண்டிருந்த உணவு, உடை, வாழிடம், வழிபாடு, நம்பிக்கைகள், உறவுமுறைகளை இன்றும் பின்பற்றுகின்றன. இயற்கையை கட்டுப்படுத்தி அல்லது அழித்து தனது தேவைகளை பூர்த்தி செய்துகொள்வது என்கிற பாதையில் செல்லும் மனித குலத்தின் பெரும்பகுதியோடு ஒட்டாமல் இயற்கையோடு இயைந்த ஆதிமனிதனின் வாழ்முறையை பேரளவில் மாற்றங்களின்றி இன்றும் பின்பற்றும் இத்தகைய இனக்குழுக்களே பழங்குடியினர் ஆவர்.
புராதனமான தனித்தன்மை கொண்ட தோற்றம்
புவியியல்ரீதியாக தனித்தொதுங்கி வாழ்தல்
தனித்துவமான பண்பாடு
சமூகத்தின் பிற பகுதியோடு கலவாமலிருக்கும் கூச்சம்
பொருளாதாரரீதியில் பின்தங்கிய நிலை
ஆகிய பொது அடையாளங்களை ஆதாரமாகக் கொண்டு பழங்குடியினர் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

II



இந்தியாவைப் பொறுத்தவரை பழங்குடிகளின் வாழ்க்கை முறையை வெள்ளையராட்சிக்கு முன்பு, பின்பு என இரு கூறாக பிரித்துப் பார்க்கவேண்டியுள்ளது. வெள்ளையராட்சிக்கு முன்பிருந்த இந்திய சமூக அமைப்பு, வேட்டையாடுவது, காட்டிலிருந்து உணவு சேகரிப்பது, காடுகளையொட்டிய மேட்டுத் தரிசுகளில் சாமை, தினை, வரகு, கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகிய புஞ்சைத் தானியங்களை விளைவிப்பது என்னும் பழங்குடியின வாழ்க்கை முறைக்கு அடுத்தநிலையில் இருந்தது. அதாவது வேளாண்மை, உழுபடைக் கருவி உற்பத்தித் தொழில்கள், பண்டமாற்று முறையில் வாணிபம், நெசவு என கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகமாக அது மாறியிருந்தது. அங்கிருந்த அரசர்களும் பரிவாரங்களும் மக்களை வாட்டி வதைத்துக் கொல்வதில் சலிப்புத் தட்டும்போது காடுகளுக்கு வேட்டையாட வந்துபோனாலும் மலைகள், காடுகள் மீதான முழு உரிமையும் பழங்குடியினருக்கே இருந்தது.வெள்ளையராட்சி, காடுகள், மலைகள் உள்ளிட்ட நாட்டின் நிலங்கள் மீதான தனியார் உரிமையை சட்டப்பூர்வமாக்கி வரிவிதித்ததோடு அந்தந்த பகுதிகளில் தமக்கு விசுவாசமாய் இருந்த பெரும் நிலவுடைமையாளர்களை வரி வசூலிப்பவர்களாகவும் நியமித்ததானது அதுவரை இருந்த பழங்குடி மக்களின் வாழ்முறையில் பேரளவிலான சிதைவுகளை உண்டாக்கியது. தங்களது இனக்குழு தலைவரின் கீழ், சமுதாய மூத்தோர்களைக் கொண்ட ஊர்ச்சபைக்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழ்ந்துவந்த பழங்குடிகள், முதன்முறையாக வெளியாளான வரிவசூலிப்பவரின் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டியிருந்தது.
நிலத்தை தனியுடமையாகவோ விற்கத் தகுந்ததாகவோ பார்க்கும் வழக்கமற்று இருந்த பழங்குடிச் சமூகங்களின் நிலப்பகுதிகளை வெளியார் ஆக்ரமிக்கும் அபாயம் உருவானது. காட்டின்மீது தமக்கிருந்த பிறப்புரிமையை அங்கீகரிக்க மறுத்த வெள்ளையராட்சியை எதிர்த்து பழங்குடிகள் தொடர்ந்துபோராடினர். இதன் விளைவாக பழங்குடிகள் அனுபோகத்தில் இருக்கும் நிலத்தை பிறர் வாங்குவதைத் தடுக்கும் வகையில் 1879 ல் பம்பாய் மாகாண நிலவருவாய் சட்டம், 1908ல் சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம் இயற்றப்பட்டன.
ஆனாலும் தாக்குதல்கள் வேறுரூபத்தில் தொடர்ந்தன. காபி, தேயிலை எஸ்டேட்டுகளுக்காகவும் மலைவாசஸ்தல மாளிகைகளுக்காகவும் பழங்குடிகளின் நிலங்கள் அரசால் பறிக்கப்பட்டன. தமது மூதாதையராலும் வனதேவதைகளாலும் ஆசீர்வதிக்கப்பட்டதென நம்பிய நிலங்களை இழந்த பழங்குடிகள் தோட்டத் தொழிலாளிகளாக, ஆங்கிலேயர்களின் எடுபிடிகளாக, நிலவுடமையாளர்களின் பண்ணைக்கூலிகளாக மாறிய அவலம் நிகழ்ந்தேறியது. தலைமுறை தலைமுறையாய் காடுகளைப் பற்றி அவர்கள் பெற்றிருந்த பாரம்பரிய அறிவும் அனுபவமும் புறக்கணிக்கப்பட்டு கூலிக்கு மாரடிக்க வந்த வனத்துறை ஊழியர்களிடம் காடுகள் ஒப்படைக்கப்பட்டன. எஞ்சிய காடுகளையும் பணம் விளையும் பூமியாய் கருதிய அரசாங்கம் மரம் மூங்கில் வெட்டிக்கொள்ள வெளியாருக்கு குத்தகைக்கு விட்டது. காட்டின் விளைபொருட்கள் மீது பழங்குடியினருக்கு இருந்த உரிமைகள் முற்றாக மறுக்கப்பட்டன.
இன்னொரு பழங்குடியினத்தோடும்கூட மணவுறவு கொள்ளாதபடி கறாரான ஊர்க்கட்டுப்பாட்டுக்குள் வளர்ந்த பழங்குடியினப் பெண்கள் பண்ணையார்கள், வன குத்தகைதாரர்கள், வனத்துறையினரின் பாலியல் வன்முறைக்கு ஆளாயினர். திருட்டை கடும் குற்றமாகக் கருதி மணல்மூட்டையை சுமக்குமாறு தண்டனை வழங்கிய பழங்குடிச் சமூகத்தின் சிறு பிரிவினர், திருடிப் பிழைக்கும் அவலமும் நேர்ந்தது. கண்ணியமான வாழ்விற்கு ஆதாரமான காட்டை இழந்த பிறகு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை ஒடுக்க குற்றப்பரம்பரை பழங்குடிகள் சட்டம் இயற்றப்பட்டது. பிழைப்பிற்கு வழிதேடி நாடோடிகளாக அலையத் தொடங்கிய கூட்டம் திருவிழாவில் தொலைந்த குழந்தையைப் போல தேசமெங்கும் தேம்பிக்கொண்டிருக்கிறது.
வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரால் நாட்டில் கட்டப்பட்டிருக்கும் 4,291 அணைகளுக்காகவும் பல்வேறு கனிமங்களுக்காக தோண்டப்பட்டிருக்கும் 4,175 சுரங்கங்களுக்காகவும் தாம் பிறந்த மண்ணைவிட்டு விரட்டியடிக்கப்பட்டவர்களில் பெரும்பகுதியினர் பழங்குடியினரே. போதிய மாற்று ஏற்பாடுகளும் நிவாரணமும் இன்றி சொந்தநாட்டில் அகதிகளாக்கப்பட்டவர்கள் நாட்டின் பெருநகரங்களில் பிச்சைக்காரர்களாகவும் வீட்டுவேலைக்காரர்களாகவும் மாறியுள்ளனர். 1911ல் ஜார்கண்ட் பகுதியின் மொத்த மக்கள்தொகையில் 60 சதமாயிருந்த பழங்குடியினர் எண்ணிக்கை, 1991ல் 27.67 சதமாக குறைந்ததுவிட்டது. அப்பகுதியில் அதிகமாக தோண்டப்பட்டுள்ள சுரங்கங்களால் பழங்குடியினர் வெளியேற்றப்பட்டதே இதற்கு காரணமென்கிறது ஒரு ஆய்வறிக்கை.

இத்தனை அழிம்புகளுக்குப் பின்னும் உலகிலேயே மிக அதிக அளவிலான பழங்குடியினர் வாழும் நாடாக இந்தியா நீடிக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள மலைகளிலும், மலை சார்ந்த வனங்களிலும், சமவெளிகளிலும் , தீவுகளிலும் 692 இனக்குழுக்களாக ஒதுங்கி வாழும் பழங்குடிகள் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் எட்டு சதம். இம்மக்கள் தொகையானது சீனம் தவிர்த்த கிழக்காசிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையைவிட அதிகம். கனடா, ஆஸ்திரேலியா, சுவிடன், பெல்ஜியம் ஆகிய நான்கு நாடுகளின் கூட்டுத் தொகையை விட அதிகமாகும்.
பழங்குடிகள் பல்வேறு பிரிவினராயிருந்தாலும் அவர்களின் பண்பாடானது வாழிடங்களையொட்டி சிற்சில மாறுபாடுகளிருப்பினும் ஏராளமான பொதுத்தன்மை கொண்டதாயும் உள்ளது.
''
பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்க நெறிகள்,சட்டம், வழக்கம் முதலானவையும், மனிதன் சமூகத்தில் ஓர் உறுப்பினராயிருந்து கற்கும் பிற திறமைகளும் பழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதிகளாகும்'' என்று தமது 'தொன்மைப் பண்பாடு' என்கிற நூலில் வரையறுக்கிறார் மானுடவியலறிஞர் எட்வர்ட் பர்ன்ட் டைலர் (1877) . இந்த வரையறையை ஓர் அடிப்படையாகக் கொண்டு இன்றைய இந்தியப் பழங்குடிகளின் வாழ்முறையை பரிசீலிப்போமானால் அவர்களது பண்பாடு, இயற்கை சார்ந்த ஆதிமனிதனின் பண்பாட்டுடன் வெகுவாக ஒத்துப்போகக்கூடியதாகவே உள்ளதை அறியமுடியும்.
பிறப்பு முதல் இறப்புவரை மந்திரங்களும் சடங்குகளும் இல்லாத எவ்வொரு காரியத்தையும் அவர்களால் கற்பனை செய்யவும் முடியாது. இயற்கையையும் தமது மூதாதையரின் ஆவிகளையும் திருப்தி செய்யும் பொருட்டு நிகழ்த்தப்பெறும் இச்சடங்குகள் ஆதிமனிதனின் அச்சத்திலிருந்து உதித்த வழிபாட்டுச்சடங்குகளின் தொடர்ச்சியாகும். காடுகளையே தமது வாழிடமாகவும் வாழ்வாதாரங்களை விளைவித்துத் தருகிற பூமியாகவும் போற்றுகிறபடியால் இவர்களது வனதேவதை வழிபாடு இயல்பான ஒன்றுதான்.
காடுகளிலும் மலைகளிலும் விளைந்து மணக்கும் மூலிகைகளின் மருத்துவகுணத்தை அறிந்தவர்களாகவும் அனுபவ வைத்தியத்தில் கைதேர்ந்தவர்களாகவும், காட்டுக்கொடிகள், மூங்கில்கள் கொண்டு கலைநயம் மிக்க கைவினைப் பொருட்களை செய்வோராகவும், காலடித் தடங்களையும் வாசனையையும் வைத்து விலங்குகளின் மறைவிடங்களை கண்டறியும் நுட்பம் கூடியவர்களாகவும், நெடிதுயர்ந்த பாறைகளிலும், மரங்களிலும் ஏறி தேனெடுப்பதிலும், காட்டாறுகளிலும், கடலிலும் மீன் பிடிப்பதிலும் வல்லமை கொண்டவர்களாகவும், இன்றளவும் தமது சமூக பாரம்பரியத்தின் அறிவையும் திறமைகளையும் பெற்றுள்ளனர்.
ஏதேனுமொரு சாமி அல்லது ரிஷியோடு தொடர்புடைய ஒரு புனைவை தமது தோற்றத்திற்கான வரலாறாக கூறுகின்றனர் பெரும்பாலான பழங்குடிப் பிரிவினர். இத்தகைய தமது நம்பிக்கைகளை உண்மையென நம்பி அதற்கிசைவான கதைகளையும் பாடல்களையும் சடங்குகளையும் தலைமுறை தலைமுறையாக காத்து வருகின்றனர். துளை, குழல், தோல் இசைக்கருவிகள் வழியே கானகமெங்கும் மிதந்து கொண்டிருக்கிறது அவர்களின் இசை. அந்தந்த பகுதியின் பெரும்பான்மைச் சமூகத்தில் புழங்கும் மொழியின் கொச்சை அல்லது ஆதிவடிவத்தை தனது மொழியாகக் கொண்டிருக்கும் பழங்குடிகள், உலகம் அதில் மனிதன் உள்ளிட்ட உயிர்களின் தோற்றம் பற்றி மேற்கொண்ட தத்துவ விசாரத்தில் உருவான அதியற்புதக் கதைகள் மேன்மையான இலக்கிய வகைமைக்குள் அடங்கும். வெரியர் எல்வின் தொகுத்துள்ள இக்கதைகள் ( உலகம் குழந்தையாக இருந்தபோது ) இந்திய இலக்கியத்திற்கு பழங்குடிகளின் கொடையாகும்.
குழுவாகக் கூடி வாழும் பழங்குடிகள் தமது குழுவிலிருக்கும் அனைவரையும் சமமாகவே கருதுகின்றனர். பரம்பரை வழியான தலைவரின் கீழ், சமுதாய மூத்தோர்களைக் கொண்ட ஊர்ச்சபைக்கு மொத்தக் குழுவும் கட்டுப்பட்டு நடப்பது எழுதப்படாத விதியாக உள்ளது. திருவிழாக்களுக்கு திட்டமிடுவது, மணமுடிப்பு, மணவிலக்கு, சாவுச் சடங்குகளை முன்னின்று நடத்துவது, குழுவினருக்குள் ஏதேனும் சச்சரவு மூளுமானால் விசாரித்து தீர்ப்பது என குழுவின் முக்கியமான நிகழ்வுகள் அனைத்துமே ஊர்ச்சபைகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. தமது பாரம்பரிய வழக்கங்களை மீறுவோரை தண்டிக்கவும் அதிகாரம் கொண்டது இச்சபை.
ஒவ்வொரு பழங்குடிப் பிரிவும் அதற்குள்ளேயே தான் மணவுறவு கொள்கிறது. திருமணமுறை மிகவும் எளிமையானது. திருமணத்திற்கு முன்பே மணமக்கள் கூடி வாழ அனுமதிக்கும் வழக்கம் சில பிரிவுகளில் உள்ளது. மணமகனின் விருந்தோடு நிறைவுறுகிறது திருமணம். பெரும்பாலான பிரிவுகளில் தாலி கட்டும் வழக்கமில்லை.
பூப்படைவதையும், மாதவிலக்கையும், பிரசவத்தையும் தீட்டாக கருதுவதும் அக்காலங்களில் பெண்களை மறைவாக ஒதுக்கிவைப்பதும் எல்லா பழங்குடிப்பிரிவினரின் பொதுவழக்கமாயுள்ளது. உணவுசேகரிப்பிலும், தண்ணீர் தேடி அலைவதிலும், புஞ்சை விவசாயத்தை பராமரிப்பதிலும் ஆற்றலோடு இயங்கும் பெண்ணுக்கு ஊர்ச்சபைகளில் இடமில்லை. அது ஆண்களின் சபையாகவே நீடிக்கிறது. அவர்களுக்கு சொத்துரிமையும் கிடையாது. வழிபாட்டுரிமையும் கூட மறுக்கப்பட்டவளாகவே இருக்கிறாள். ஆனாலும் நாகரீகம் வளர்ச்சியடைந்ததாய் அலட்டிக்கொள்ளும் சமூகப்பிரிவுகளை விட பழங்குடிச் சமூகத்தில் பெண்களின் நிலை மதிக்கத்தக்கதாய் இருக்கிறது. ஒருசில பிரிவுகளில் குழந்தைத்திருமணம் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் பூப்படைந்த பின்பே திருமணம். தனது வாழ்க்கைத்துணையை தனது விருப்பப்படி தேர்ந்து கொள்ளும் சுதந்திரம் அவளுக்குண்டு. வரதட்சணைக்கொடுமை கிடையாது. மணமகன் தான் மணமகளுக்கு பரிசம் கட்ட வேண்டியுள்ளது. சில பிரிவுகளில் பால்கூலி என்ற பெயரில் மாமியாருக்கும் தரப்படுகிறது. கருத்து மாறுபாடு ஏற்படுகிறபோது மணவுறவை முறித்துக் கொள்ளவும் மறுமணம் செய்து கொள்ளவும் பெண்ணுக்கு உரிமை இருக்கிறது.

IIIசற்றேறக்குறைய இத்தகைய பண்பாட்டுக்கூறுகளோடு தமிழகத்தில் அடியன், அரனாடன், எரவல்லன், இருளர், காடர், கம்மாரர் (கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்தில் மட்டும்), காணிக்காரன்-காணிக்காரர் ( கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்தில் மட்டும்), கணியன், காட்டுநாய்க்கன், கொச்சு வேளான், கொண்டகபு, கொண்டாரெட்டி, கொரகர், கோடா (குமரி, நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்தில் மட்டும்), குடியல் மேலகுடி, குரிச்சான், குரும்பா (நீலகிரி மவட்டத்தில்), குருமன், மகாமலசர், மலைஅரயன், மலைப்பண்டாரம், மலைவேடன், மலைக்குறவன், மலசர், மலையாளி (தருமபுரி, சேலம், வடாற்காடு, தென்னாற்காடு, புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில்), மலையகண்டி, மன்னன், முதுகர், முதுவன், முத்துவன், பள்ளயன், பள்ளியன், பள்ளியர், பனியன், சோளகர், தோடா (கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்தில் மட்டும்) ஊராளி ஆகிய 36 வகையான பழங்குடிகள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனர் நீலகிரி, ஆனைமலை, கொல்லிமலை, சேர்வராயன்மலை, கல்ராயன் மலை, அரனூத்துமலை, பச்சைமலை, ஜவ்வாதுமலை, சித்தேரி மலைப்பகுதிகளிலும் அவற்றையொட்டிய வனப்பகுதிகளிலும் வாழ்கின்றனர். தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் (2001 கணக்கெடுப்புப்படி 65,1321) பழங்குடியினர்.
பாம்பு பிடிப்பது முதல் பயிர்த்தொழில் வரை பல்வேறு தொழில்முனைகளில் பிரிந்து இயங்கும் தமிழகத்தின் மொத்த பழங்குடி மக்கள்தொகையில் 54.14 சதவீதம் மலையாளிகள் உள்ளனர். தாங்கள் பழங்குடிகள் அல்லவென்றும் கீழ்நாட்டிலிருந்து வந்து மலையில் வாழும் வேளாளக்கவுண்டர்களின் வம்சாவழி என்று மலையாளிகள் சொல்லிக் கொண்டாலும் அவர்களில் பெரும்பாலோரின் பொருளாதார சமூக அந்தஸ்து பிற பழங்குடிகளுடன் சேர்ந்ததாகவே இருக்கிறது.

IVவளர்ச்சித் திட்டங்களின் பெயரால் தங்கள் சொந்த மண்ணுக்கு அன்னியமாகிப்போகும் ஒரு இனம் அம்மண்ணோடு சேர்ந்து உருவான பண்பாட்டை பெயர்ந்து போகும் இடங்களிலும் காப்பாற்றுவது சாத்தியமில்லை. அதேநேரத்தில் இடப்பெயர்ச்சியாகி குடியமரும் வாழிடத்தில் நிலவும் பண்பாட்டிற்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தும் விடாது. இரண்டுக்கும் இடையில் அல்லாடித் தவிக்கும். சொந்தபூமியையும் பண்பாட்டையும் தக்கவைத்துக்கொள்ள முடியாத தனது இயலாமை குறித்த வேதனையும் அவமானமும் தாங்கொணாத மன அழுத்தத்தைக் கொடுக்கும் என்று உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இடப்பெயர்ச்சி என்கிற தொடர் தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்ள பழங்குடி மக்கள் போராடுவதும், அப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து பிறர் பங்கேற்பதும் இன்றையத் தேவையாயிருக்கிறது.
பாதுகாப்பு உணர்வு கருதி இறுகிய குழு வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் பழங்குடிகளிடம் புறக்கருத்துக்கள் ஊடுருவிச் சென்று செல்வாக்கு செலுத்துவது சாத்தியமற்ற ஒன்றாகவே நீடித்த நிலை பிரிட்டிசாரின் தலையீட்டிற்குப் பிறகு சிதையத் தொடங்கியது. தோட்டத்தொழிலுக்கும் சமவெளிக்கும் விரட்டப்பட்டவர்கள் பிறரோடு கலக்க நேர்ந்ததில் அவர்களின் மொழி, பழக்கவழக்கங்களில் சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தலித்களை தீண்டத்தகாதவர்களாக கருதும் சமவெளிப்பகுதியின் சாதியப்பிடிமானம், தங்களுக்குள் சமத்துவத்தைப் பேணுகின்ற பழங்குடிகளிடமும் வலுவாக வேரூன்றியுள்ளது. பழங்குடியினரின் வாழ்முறையில் இருந்திராத 'வரதட்சணை' கேட்கும் போக்கு ஆங்காங்கே தென்படத் தொடங்கியுள்ளது. நிச்சயமற்றதாய் வாழ்க்கை மாறிவரும் நிலையில், பில்லி சூன்யம் மூலம் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும் என்று அவர்கள் இன்னும் நம்பிக் கொண்டிருப்பதை வெறுமனே மூடநம்பிக்கை என்று ஏளனமாய் சொல்லி நாம் நகர்ந்துவிடமுடியாது. சமவெளி அல்லது நகர நாகரீகமே உயர்ந்தது என்கிற போலி பெருமிதத்தை கைவிட்டு, பழங்குடிகளின் பண்பாட்டு தனித்துவத்தை புரிந்து கொள்வதும் இயற்கையை ஒட்டிய அவர்களது பண்பாட்டு மரபில் நீடிக்கும் அறிவியல்பூர்வமான நல்லம்சங்களை பாதுகாக்கவும், அதற்கெதிரான பிற போக்குகளை கைவிடுமாறு பரிவோடு அணுகவும் நமக்கு பயிற்சி தேவையாகிறது.
தனித்தன்மை கொண்ட பழங்குடிகளை பாதுகாக்க மேற்குவங்கம், திரிபுரா போன்று சுயாட்சி கவுன்சில்கள் அமைத்து முன்னுரிமைத் திட்டங்களை வகுத்து செயல்படவேண்டிய ஆட்சியாளர்கள், சமூகநலத் திட்டங்களை முற்றாக கைவிடத் தூண்டும் உலகமயத்தின் அடிவருடிகளாக மாறியுள்ளனர். கல்வி, மருத்துவம், சாலை என சகலத்தையும் தனியார்மயமாக்குவதால் படித்து வெளியே வரும் சொற்ப அளவினரான பழங்குடியினரும் வேலைவாய்ப்பின்றி முடங்கிப்போக நேரிடும். முதல் தலைமுறை படிப்பாளிகளும் கூட உருவாகாத பெரும்பான்மையான பழங்குடிக் குடும்பங்கள் அதேநிலையைத் தொடரவேண்டியிருக்கும். மானியத்தில் இயங்கும் பொதுவினியோகத் திட்டத்தை கைவிடுவதன் மூலம் ஏற்கனவே நிரந்தர வருமானமின்றி தவித்திருக்கும் பழங்குடிகள் பெருந்துயரத்திற்கு ஆளாவர். பெரும்பான்மைச் சமூகத்திற்கும் பழங்குடியினருக்குமான இடைவெளி அதிகரிக்கும் போது உருவாகும் அவநம்பிக்கை பிரிவினை எண்ணத்தையே தூண்டும் என்பதற்கு நம்மிடம் போதுமான ஆதாரங்கள் உண்டு.
எத்தன்மையான மக்களாயினும் அவர்களை வெறுமனே நுகர்வோராக சுருக்கி சுரண்டத் துடிக்கும் உலகமயத்தைப் போலவே, பழங்குடிகளின் பண்பாட்டுத் தனித்தன்மையை அங்கீகரிக்க மறுக்கிறது இந்துத்துவமும். ஒரே பண்பாடு என்கிற கோஷத்தின் பின்னே மறைந்திருக்கும் அதன் அதிகாரத்திற்கு பழங்குடியினரின் பண்பாட்டையும் காவு கேட்கிறது. ரிஷிகளாலும் ராஜகுமாரர்களும் சாபங்களுக்கும் தண்டனைகளுக்கும் ஆளாக்கப்பட்ட பழங்குடியினர் என்று இழிவுபேசிய அதன் புராணிய வரலாற்றை மறைத்து இன்று இந்து என்கிற வலைக்குள் வீழ்த்தப்பார்க்கிறது. இந்துமதக் கடவுள் அவதாரங்களின் உடனிருந்து உதவியவர்கள் என்றெல்லாம் கதைத்து இந்துத்துவம் பழங்குடியினரை அணிதிரட்ட முயலுகிறது. குஜராத் கலவரத்தில் பழங்குடியினர் இந்துத்துவத்தின் கையாயுதமாய் பயன்படுத்தப்பட்டதையும், பழங்குடியினர் நிறைந்த நீலகிரி போன்ற பகுதிகளில் பி.ஜே.பி. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் அரசியல் வளர்ச்சியையும் கவனித்தோமானால் அது தன் சீரழிவுப்பாதையில் முன்னேறி வருவதை உணரமுடியும்.
நகரவாசியாய் வாழப்பிடிக்காமல் வனத்திற்கு ஓடிப்போனவர்களை விளிப்பதைப்போல 'வனவாசி' என்றழைப்பதன் மூலம் காட்டின் மீது பழங்குடியினருக்கு உள்ள பிதுரார்ஜிதமான உரிமையை மறுப்பதற்குத் துணிகிறது இந்துத்துவம். தவிரவும் சமவெளிகளிலும் தீவுகளிலும் வாழும் பழங்குடியினரையும் அது ஒப்புக்கொள்வதில்லை. பழங்குடிகளை வனவாசி என்றழைப்பதன் பின் பதுங்கியுள்ள இத்தகைய இந்துத்துவ நுண்ணரசியலை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எவ்வித மத அனுஷ்டானங்களையும் கைக்கொள்ளாத தனித்துவமான பழங்குடியினரை இந்துமதத்திற்குள் கரைத்தழிக்கும் இந்துத்துவாவிற்கு சற்றும் குறைந்ததல்ல கிறித்துவ மிஷனரிகளின் செயல்பாடு. கல்வி, சுகாதாரம், பொருளாதார உதவிகள் என பாராட்டத் தகுந்த பணிகளைச் செய்த இம்மிஷனரிகள் பழங்குடியினரை கிறித்தவர்களாக மதமாற்றம் செய்வதன் மூலம் நாட்டின் பன்முகப்பட்ட பண்பாட்டின் மிகச்சிறந்த கூறுகளைக் கொண்ட பழங்குடிப் பண்பாட்டை சிதைக்கின்றன. மிஷனரிகளைக் காரணம் காட்டி இந்துத்துவம் கிறித்துவத்திற்கு எதிரான தனது குரோதங்களுக்கு கணக்குத் தீர்க்கும் களமாக பழங்குடிகளை முன்னிறுத்துகிறது.
காடுகள் அழிப்பு, காட்டின் மீதான உரிமை மறுப்பு, இடப்பெயர்ச்சி, வனத்துறைகாவல்துறையின் அத்துமீறல்கள், மதமாற்றம், அரசாங்கங்களால் புறக்கணிப்பு என அடுக்கடுக்கான தாக்குதல்களால் தங்களது சுயத்திலிருந்து வெகுவாக அன்னியப்பட்டு வரும் பழங்குடியினரை பாதுகாப்பதும், நாட்டின் பன்முகப்பட்ட பண்பாட்டுத்தன்மையை பாதுகாப்பதும் வெவ்வேறானதல்ல. யாந்திரிகமான செயல்பாட்டு வடிவங்களுக்குள் சிக்கிச் சுழலும் அமைப்புகளைப் போலல்லாது, பழங்குடிகளின் தினப்படியான வாழ்வின் எல்லாமட்டங்களிலும் ஊடாடிக் கலந்து செயலாற்றும் திறன்கொண்ட உயிரோட்டமான ஒரு அமைப்பின் இடையறாத செயல்பாட்டின் மூலம் இவ்விலக்கை எட்டமுடியும்.

துணைநூல்கள்:

1.
அடித்தள மக்கள்வரலாறு பேரா. ஆ. சிவசுபரமணியன்

2.
Dams and Tribal People in India, Amrita patwarthan

3.
PUCL Bulletin, Feb.2003

4.
Policy note, Adi Dravidar and Tribal Welfare Dept, Tamil Nadu.

5.
பழங்குடிகளின் பிரச்னைகள் குறித்த சிபிஐ(எம்)ன் மத்தியக்குழு ஆவணம் ( மார்ச் 2, 2002)