Pages

Tuesday, 20 November 2012

சங்கத் தகடு


தமிழர் தொன்மை பற்றிய சான்றுகள் தமிழகமெங்கிலும், பிற நாடுகளிலும் இருக்கின்றன. அவை முறையாக ஆராயப்பட்டு ஆவணப் படுத்தப் படாமல் பெரும்பாலும் வாய்ச் சொல்லாக, கர்ண பரம்பரை (செவி வழிக்) கதைகளாக உள்ளன. இந்தியாவைப் பொருத்த மட்டில் இந்தியத் தொல்பொருள் ஆவணங்கள் மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறைகளுக்குள் பங்கு போடப் பட்டு கூட்டு முயற்சியின்றிக் கிடக்கிறது. தமிழகத் தொல்பொருள் ஆய்வாளர்களின் கருத்துக்கள் பெரும்பாலும் டெல்லி மத்திய மன்றத்தில் கூர்மையாகக் கேட்கப் படுவதில்லை. உதாரணமாக, கல்வெட்டுக்களை எடுத்துக் கொண்டால் தமிழகத்திலும், பிற திராவிட தேசங்களிலுமுள்ள ஆவணங்களே அதிகம். இது காலத்தால் முற்பட்டதும் கூட. ஆயின், அசோகன் காலத்துக் கல்வெட்டே காலத்தால் முந்தியது போன்று மத்திய அரசு எழுதும் சரித்திரம் காட்டுகிறது. பிராமி என்றழைக்கப்படும் வரி வடிவு போல், அதற்குப் பழமையாக 'தமிழி' வரி வடிவம் தமிழ் மண்ணில் இருந்தது என்று தமிழக தொல்லியலாளர்கள் காட்டுகின்றனர். இருந்தும் அக்குரல் தென்னகத்தோடு அடங்கிவிடுகிறது.
இம்மாதிரியான சூழலில் கோயம்பத்தூர் மாவட்டத்திலுள்ள பேரூருக்கு அருகே பழங்காலத்து சுட்ட ஓடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வோடுகளின் ஒரு புறம் எழுதப்பட்டும், மறுபுறம் ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன. இதிலுள்ள எழுத்து இன்ன வகையைச் சேர்ந்ததென்றும், அதன் முழுப் பொருள் என்னவென்றும் இன்னும் முற்றாக ஆராயப்படவில்லை. ஆயின் கல்வெட்டு ஆய்வாளர்களின் கணிப்பு இது சங்க காலத்தைச் சேர்ந்ததோ, அதற்கு முந்தியதோவாக இருக்கவேண்டும் என்பது. இதில் மிக சுவாரசியமான விஷயம் என்னவெனில், இம்மாதிரிக் களி மண் தகடுகளில் எழுதி அதை எரியூட்டி சுட வைப்பது என்பது இந்திய உப கண்டத்தில் இதற்கு முன் மொகஞ்சதோரா, ஹரப்பாவில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேறு இந்திய மொழிகளில் இம்மாதிரித் தகடுகள் இதுவரை கண்டு பிடிக்கப் படவில்லை. சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகமாக இருக்க வாய்ப்புள்ளது என்று ஒரு சாரார் சொல்லுகின்றனர். சங்கத்தகடுகளில் உள்ள எழுத்துக்களுக்கும் சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும் தொடர்பு இருப்பதாக தமிழகத் தொல்லியலாளர்கள் அபிப்பிராயப் படுகின்றனர்.
இதுவரை கல்வெட்டு நிபுணர்களால் சங்கத்தகடுகளிலிருந்து வாசிக்க முடிந்தது...
'எருமி நாடு, குமிழ் ஊர் பிறந்த' என்ற வாசகம்தான். இவ்வாசகம்கூட, சித்தன்னவாசல் சமணப் படுகையில் புரிந்து கொள்ளக்கூடிய வரிவடிவில் எழுதிவைக்கப்பட்ட ஒரு வாசகத்திலிருந்து பெறப்படுகிறது. அவ்வாசகமாவது, "எருமி நாடு, குமிழ் ஊர் பிறந்த காவுடி ஈ தேன்கு சிறுபேர்சில் இளயர் செய்த ஆய் சயன அதிட்சுனம்" என்பது. இவ்வாசகப் பயிற்சியிலிருந்து பெறப்பட்டதே சங்கத்தகடுகளிலுள்ள வாசகம். ஆயின் இது போன்று முழுமையாக வாசிக்க முடியாத வண்ணம் இதுவரை அறியப்படாத வரிவடிவில் பிற வாசகங்கள் இருப்பதாகத் தொல்லியல் நிபுணர்கள் சொல்கின்றனர். ஆயின் இவ்வாசகம் ஏறக்குறைய எல்லா ஓடுகளிலும் உள்ளது. எனவே இவ்வோடுகள் ஏதாவதொரு சமணப் பள்ளியில் பயிற்சிக்காகக் கொடுத்து எழுதப்பட்ட ஓடுகளாக இருக்கலாம்.

இவ்வோடுகள் ஒரு சிமெண்ட் தொழிற்சாலைக் கட்டுமானத்தில் ஏதேச்சையாக கிடைக்கப் பெற்றதாலும், முறையாக அகழ்வாராய்ச்சியின் மூலமாக கிடைக்கப் பெறாததாலும் இவ்வோடுகளின் காலம் இன்னும் சரியாக கணிக்கப் படாமலே உள்ளது. தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் கரியத் தேதியிடும் முறையில் (carbon dating) இவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுவரை, இந்திய சரித்திரத்தின் மற்றுமொரு புதிராகவே இது இருக்கும்.
இவ்வோடுகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் கோட்டு ஓவிய வகையைச் சார்ந்தவை. இவற்றிற்குப் பொருள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். ஆனால் ஒரு ஓட்டில் தெளிவாக ஒரு கப்பலும், இரண்டு நங்கூரங்களும் வரையப்பட்டுள்ளன. மலை, நிலா, சூரியன், நாகம் போன்ற உருவங்கள் தெளிவாக உள்ளன. சில ஓவியங்கள் துறைமுகத்திற்கான வரைபடம் போலுள்ளது. கொங்கு நாட்டுற்கு அருகில்தான் சங்ககாலத் துறைமுகங்கள் இருந்திருக்கின்றன. ஒரு சிலர் இது ஒரு வகையான வேண்டுதல் வரி வடிவங்கள் என்று சொல்கின்றனர். யந்திரங்களின் முன்வடிவங்களாகக் கூட இவை இருக்க வாய்ப்புண்டு.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இவ்வோடுகளின் இலக்கப் பதிவுகள் முதன் முறையாக வையவிரிவு வலையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சியால் வெளியிடப்படுகின்றன. இதன் மூலமாக தமிழின் தொன்மை இணைய அறிஞர்களால் ஆராயப்படட்டும். இம்முயற்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் ஈரோட்டைச் சேர்ந்த திரு.இளங்கோவும், முனைவர்.புலவர்.இராசுவுமாவார்கள். இத்தனை ஓடுகளையும் இலக்கப் பதிவாக்க முதலில் அனுமதி தந்தவர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி (பெரிய பட்டம்) அவர்களும் மடத்தின் இளைய பட்டம் தவத்திரு, முனைவர் மருதாச்சல அடிகளுமாவர். இருக்க இடம் கொடுத்து, உண்ண உணவு கொடுத்து பெற்ற தாயைப் போல் என்னைப் பார்த்துக் கொண்ட இவ்விருவருக்கும் நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன். இம்மடத்தின் வளாகத்தில் நடைபெறும் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியர்கள் சோர்வு பாராமல் என்னுடன் கூடவே இருந்து உதவி செய்தனர். இக்கல்லூரி நடாத்திய தொல்லியல் ஆய்வில் கலந்து கொண்ட திரு. பூங்குன்றன் தனது கட்டுரையை நமக்களித்தார். மேலும் அவர் கருத்தரங்கில் பயன்படுத்திய பல படங்களை எமக்களித்தார். இது நம் புரிதலுக்கு மிகவும் உதவும். சென்னையில் இவ்விலக்கப்பதிவுகளை மறு கண்ணோட்டம் விட ஒரு சிறிய நிபுணர் குழுவை ஏற்பாடு செய்த முனைவர் கொடுமுடி சண்முகம் அவர்களுக்கு நன்றி. அவர் வேண்டுகோளை ஏற்று நடத்திய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கும், அதன் புதிய இயக்குனராகப் பதவியேற்றிருக்கும் முனைவர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் நன்றி. எங்கள் அழைப்பை ஏற்று மறுபரீசலனை செய்ய வந்திருந்த தமிழக தொல்லியல் நிபுணர்கள் திருமதி.பத்மாதேவி, திரு.சண்முகவேல், முனைவர்.தாசரதன், தமிழாராய்ச்சி நிறுவன சுவடிக் காப்பாளர்கள் அனைவருக்கும் முதுசொம் அறக்கட்டளை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இப்புதிய கண்டுபிடிப்பின் தொழில்நுட்பச் சாத்தியக் கூறுகளை அணுமானிக்க கோலாலம்பூரில் ஒரு மாலைச் சந்திப்பை ஏற்பாடு செய்த நண்பர் திரு. முத்து நெடுமாறன் அவர்களுக்கும், கலந்துரையாடலில் கலந்து கொண்ட மலேசிய நண்பர்கள் திருவாளர்கள். பாலகிருஷ்ணன், ராஜூ, இளந்தமிழ், பிரம்மா, சிங்கை நண்பர் திரு.அருண்மகிழ்நன் அவர்களுக்கும் எங்கள் நன்றி. இதன் சரித்திர முக்கியத்துவத்தை உணர்ந்து பாராட்டி, உற்சாகமளித்த அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்: 'பாரத ரத்ன' பேரா.முனைவர். அப்துல் கலாம் அவர்களுக்கும், பேரா.முனைவர்.உதயமூர்த்தி, பேரா.முனைவர்.சுப்பராமன், பேரா.முனைவர்.லலிதா ஜெயராமன் அவர்களுக்கும் எங்கள் சிறப்பு நன்றி.